Thursday, December 12, 2013

ரஜினி-என் வானிலே ஒரே வெண்ணிலா

டைரக்டர் மகேந்திரன் தமிழ்த்திரையுலகில் (1978-90)ஒரு முக்கியமான ஆளுமை.சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தியவர்களுள் ஒருவர்.

முக்கியமாக சினிமா ஒரு காட்சி ஊடகம் என்பதை காட்சிகளினூடே பார்வையாளனை பயணிக்க வைத்துக் கதைச் சொல்பவர்.காட்சிகளே கதாபாத்திரமாக,ஓவியமாக  திரையில் தீட்டப்பட்டு உணர்ச்சிகள் பார்வையாளனைத் தீண்டும்.அவன் கதாபாத்திரங்களுடன் உலாவுவான்.

மிக முக்கியமாக காட்சிகளில் விரவிக்கிடக்கும் மெளனம் அர்த்தபுஷ்டியானது.
வெள்ளை உடையில் மகேந்திரன்
இப்படிப்பட்ட படைப்பைப் படைப்பவன்தான் உண்மையான படைப்பாளி. சிருஷ்டி கர்த்தா.டைரக்டர் மகேந்திரன் ஒரு சிருஷ்டி கர்த்தா.பார்த்துப் பார்த்துச் செதுக்கும் ஓவியர்.இப்படி இவருடன் இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் கைக்கோர்த்து ஒரு கவிதையை  ஓவியமாக தீட்டி இருக்கிறார்கள் அல்லது ஒரு ஓவியத்தைக் கவிதையாக எழுதி இருக்கிறார்கள்.

அந்தக் கவிதை  ஜானி திரைப்படத்தில் வரும் “என் வானிலே ஒரே வெண்ணிலா” என்ற பாடல் காட்சி.இவருடன் இணைந்த மற்ற இரண்டு சிருஷ்டி கர்த்தாக்கள் இசைஞானி இளையராஜா ஒளிப்பதிவாளர் அசோக்குமார்.

இந்தப் பாடலின் காட்சி உள்ளும் புறமுமாக விரிக்கப்படுவதில் அசோக்குமாரும் ராஜாவும் தங்கள் கற்பனைத் திறனை அள்ளித்
தெளித்திருக்கிறார்கள்.பாடலை எழுதிய கங்கை அமரனும் பாராட்டுக்குரியவர்.நேரடியாக எதையும் சுட்டாமல் கவித்துமாக உள்ளது.

காட்சி நேர்த்தியாக romanticise செய்யப்பட்டு இருக்கிறது.




இந்தக் கவிதைக்கு  யதார்த்தமான  பின்னணி உண்டு.

குற்றப் பின்னணி உள்ள கதாநாயகன் ஜானி ஒரு இசை ரசிகன்.பிரபல பாடகி அர்ச்சனாவின் ரசிகன்.அன்று கேட்ட”ஒரு இனிய மனது இசையை அணைத்துச் செல்லும்” பாடல் இவனுக்காகவே பாடப்பட்டதுபோல் உணர்கிறான்.மனம் குதூகலிக்கிறது.இசை நிகழ்ச்சி முடிவில் அவளைப் பாராட்டி பூங்கொத்து கொடுக்க முடியாமல் கூட்டம் இவனை தடுத்து விடுகிறது.

மறு நாள் அவள் வீட்டிற்கு தொட்டி தொட்டியாக வண்ண வண்ண பூக்கள் பூத்துக் குலுங்கும் பூந்தோட்டமே அனுப்பி வைக்கிறான்.மற்றொரு நாள் இருவருக்கும்  இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.கடற்கரையில் அர்ச்சனா உலா போகையில் தான் பாடிய  “ஒரு இனிய மனது” பாடல் காற்றில் அலைந்து வருகிறது.அதை நோக்கி போகையில்  ஒரு படகில் ஜானி மெய் மறந்துப் பாடலை கேட்டுக்கொண்டிருக்கிறான்.பரஸ்பர அறிமுகத்தில் இவன்தான் பூக்கள் அனுப்பியவன் என்று தெரிகிறது.தானும் அர்ச்சனாவைப் போல தனி இருவருக்கும் தங்களைத் தவிர யாரும்இல்லை என்பதில் இருவருக்குள்ளும் மெலிதான பிணைப்பு ஏற்பட்டு ஒரத்தில் ஒரு மொட்டு அவிழ்கிறது.

”ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை... எனக்கு மட்டும் எனக்காக மட்டும்.. தனியாக நீங்க பாடனும்.தனியா கேட்கனும்.எல்லார்கிட்டயும் சொல்லி பெருமைப் படனும்” ஜானி ஆர்வத்துடன் கேட்கிறான்.

”நிறைவேறுவது கஷ்டம்தான்...மாட்டேன்னா என்ன செய்வீங்க....” செல்லமாக சீண்டிவிட்டு ...”நாளைக்கு வீட்டுக்கு வாங்க" புன்னகையுடன் சம்மதிக்கிறாள்.ஜானியின் மனம் மகிழ்ச்சியில் துள்ளுகிறது.

(ஒரு பாமர ரசிகனின் வெகுளித்தனமான ஆசையை நிறைவேற்றுவதில் அர்ச்சானவுக்கு ஒரு fatal attraction இருக்கிறது)


மறுநாள்: ஜானி சட்டைக்குள்ளே “MUSIC THE LIFE GIVER" என்ற வாசகம் எழுதிய மஞ்சள் பனியன் (பாமரத்தனமாக??) அணிந்து அவளை சந்திக்கச் செல்கிறான்.

வீட்டில் நுழைந்ததும் ஒருஅழகான  பியானவும் அதைச் சற்றி அவன் கொடுத்த வண்ணப் பூக்களும்  பார்வையில்பட்டு ”பியூட்டி புல்... பியூட்டி புல்...” நெகிழ்ந்துப்போய்விடுகிறான்.

பியானோ வாசிக்க முயற்சிக்கச் சொல்லி அவனும் மொன்னையாக  மெட்டுவாசிக்க முயற்சிக்க ” no.. no... just listen..!" என்று பியானவில் அவள் விரல்கள் மீட்ட நாதங்கள்  மீன்களாய் துள்ளி  கவிதையாக எழ ஆரம்பிக்கிறது.

பாடல் முழுவதும் அவன்  உடல்மொழி இயல்பாக இருக்கிறது.

காட்சி......



கேமரா ஊர்ந்து தூரிகையால் ஓவியத்தை தீட்ட ஆரம்பிக்க  உயிர் துடிப்புடன் இயங்க ஆரம்பிக்கிறது காட்சி.இசை மென்மையான வெஸ்டர்ன் கிளாசிகலில் காட்சியை நகர்த்துகிறது.அர்ச்சனாவின் வானில்  வெண்ணிலாவும் காதல் மேகங்களும் கவிதை தாரகைகளும் ஊர்வலம் போக ஆரம்பிக்கிறார்கள்.

அர்ச்சனாவின் உடை ஒரு தனி மொழியே பேசுகிறது.காட்சியின் பின்னணி ஒரு பாத்திரமாக பரவசப்படுத்துகிறது.காட்சிகள் உள்ளேயும் வெளியேயுமாக வழுக்கிக்கொண்டு பயணித்தப்படி போகிறது.ஜானி ” எல்லாம் எனக்குத்தான் எனக்குத்தான் ... எனக்குத்தான்...”கற்பனைச் சிறகடித்துப் பறக்கிறான்.

அர்ச்சனாவின் குரலில்(ஜென்சி) இருக்கும் மழலைத்தனத்தில் காதல் இருக்கிறது.காட்சியை ஆழப்படுத்துகிறது.


முதல் இடை இசையில் ரஜினி மனம் குதூகலித்தப்படி மேகத்தில் பறக்கிறது. உச்சக்கட்டமாக 1.22 ல் சொர்க்கத்திலிருந்து ஆசிர்வதிக்கப்படுகிறான்.Absolutely bliss..!


முதல் சரணத்தில் ”நீரோடை போலவே’ 1.30 -1.56 ஆரம்பித்து முடியும் வரை ரஜினி,ஸ்ரீதேவி,பிரேமி மூவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
குறிப்பாக 1.46-1.47ல் கேமரா திரும்ப, படிக்கட்டில் கன்னத்தில் கைவைத்து உட்கார்ந்தபடி பிரேமி ஸ்ரீதேவியைப் பார்க்கும் (பெருமிதம்?) பார்வை யதார்த்தம்.

அடுத்து 1.56ல் ”நீராட வந்ததே என் மென்மை” என்று ஸ்ரீதேவி தன் குண்டு விழிகளில் எதையோ தேக்கி (காதல்?காமம்?)புன்சிரிப்போடு காட்டிவிட்டு தலைகுனிவது அருமை.

3.26ல் வாசித்துக்கொண்டே பிரேமியை எட்டிப்பார்க்கும் இடம் ரொம்ப சுட்டி.



இளையராஜாவின் வெஸ்டர்ன் கிளாசிகல் வயலின்/பியானோ இழைகள் காட்சி  முழுவதும் சில்லென்று வீசிக்கொண்டே இருக்கிறது.

பாட்டை அதன் பரிமாணத்தில் உள்வாங்கி மகேந்திரனும் அசோக்குமாரும்  கவிதையாக செதுக்கி இருக்கிறார்கள்.

காவியக் காதல்களில்இரவு, நிலவு,பூஞ்சோலை, அருவி,அன்னம், புறா,மயில்,உப்பரிகை என்று காதலர்கள் உலா வருவார்கள்.

தமிழ் திரையுலகில் இப்படி உணர்வுபூர்வமாக மென்மையாக மிகைப்படுத்தாமல் இருவருக்கும் இடையில் இருக்கும் காதலை பின்னணியுடன் பின்னி பினைந்து இசை வழியாக சொல்லி காட்சியை ஆழப்படுத்தியது அபூர்வமான ஒன்று.



7 comments:

  1. arumaiyana nadai johny ella padalgalum inimai
    "en vanile ore vennila","suno reeta (rita?)","asaiyai kattrile","kattre endhan geetam"

    ReplyDelete
  2. sir,
    P.S.Nivaz direction/suman sumalatha jodi/raja music - movie enaggaka kattiru
    1. "Pani vizhum megam paruva"
    2. "Dagam edukkindre neram"
    3. "Oh nenjame idhu un ragame"
    idhai pattri edhavadhu write up unda sir padikka aaval aaga ullen

    ReplyDelete
  3. just jealous on you, how much you have enjoyed the song, I have never been deep in to the song .... will watch the movie again! Thanks!
    -Ramc

    ReplyDelete
  4. super ravi sir
    பாடலை எவ்வளுவு தூரம் ரசித்து உள்ளீர்கள் என்பதற்கு உங்கள் பதிவு சாட்சி

    ReplyDelete

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!