Friday, August 26, 2011

இளையராஜா -King of Trumpet Melody

சினிமாவில் யானை துதிக்கையை மேல் தூக்கிப் பிளிறினால் “புவ்வாய்ய்ங்.. புவ்வாய்ய்ங்” என்று  பின்னணி ஊதுவார்கள். டில்லி  சுதந்திர/குடியரசு விழாக்களில் ராணுவ வீரர்கள் இதை (bugle?)ஊதிக்கொண்டு ”லெப்ட் ரைட்” போட்டு நடப்பார்கள். இதற்க்குத்தான்   ட்ரம்பெட்(Trumpet)  என்னும் இசைக்கருவி  என்பது என் பள்ளி வயது அறிவு.

மன்னர்கள் காலத்தில் போர் அறிவிக்க இதை(துந்துபி) கோட்டையின் மீது நின்று ஊதுவதைப் பார்த்திருக்கிறேன்(படம் &சினிமா).

இதில் (ராணுவ & போலீஸ்)மிடுக்கு மற்றும் ராயல்னெஸ் உணர்ச்சிகளை கொடுக்க தோதுவாக இருக்கிறது.

இந்தக் கருவி மேல் நாட்டு ஜாஸ் இசையில் நிறைய பயன்படுத்தப்படுகிறது.வேறு வகை இசைகளிலும் இது உண்டு.அருமையான இசைக்கோர்ப்புகளும் நெட்டில் இருக்கிறது.

இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இது பெரும்பாலும்
கொண்டாட்ட மனநிலைக்குத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேளிக்கைப் பார்ட்டி,அஜால் குஜால்,கலாய்த்தல் போன்றவை.

இளையராஜாவும் விதிவிலக்கு அல்ல. உதாரணமாக சொர்க்கம் மதுவிலே,ஆசை நூறு,பள்ளியறைக்குள்,ஆகாயம் மேலே,வா வா பக்கம்,இளமை இதோ,தண்ணீ கொஞ்சம்,கொம்புல பூவ...........

(இந்திய சினிமா கிளப் டான்ஸ் பாடல்களில் ஒருவர் சாக்ஸ்போனை மகுடி போல் ஊத ஒரு மங்கை அரைகுறை ஆடையில் அங்கங்களை குலுக்கி அதற்கேற்றார் போல் நெளிந்து ஆடுவார்)

விதி விலக்காக மேஸ்ட்ரோ கோபம் மற்றும் தாபம்/சோக உணர்ச்சிகளுக்கு  அற்புதமாக இசைத்துள்ளார். என்னடி மீனாட்சி மற்றும் மன்றம் வந்த தென்றல்,தினம் தினம்(பயம்?),அஞ்சலி இன்னும் சில பாடல்கள் உள்ளது.

கொண்டாட்ட மனநிலை பாடல்களிலும் இது வித்தியாசமாக ஒலிக்கிறது.
வழக்கமாக ராஜா இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். மற்ற இசைக்கருவி நாதங்களுடன் இதைத் தொடுத்து வித்தியாசமாகக் கொடுப்பது.

சம்பிரதாயமாக ”பொய்ங்ங்” என்று ஊதிவிட்டு போகாமல்
சிக்கலாக கோர்த்து பிரமிக்க வைக்கிறார்.

கிழ் வரும்  ஒவ்வொரு  இசை துண்டும் ஒவ்வொரு ரகம்.எல்லாமே சிறப்பு வாய்ந்தது.
SAXOPHONE
பின் வரும் பாடல்களில் ட்ரம்பெட் இல்லாத இன்னோரு இசைக்கருவியான சாக்ஸ்போன் மற்றும் சில காற்றுக்கருவிகளும் இசைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவாக  எல்லாவற்றையும் ட்ரம்பெட் என்று குறிப்பிட்டு இருக்கிறேன்.பண்டித ஞானம் இல்லை.வெறும் காமன் சென்ஸ் அறிவில் எழுதப்பட்டது.
சில இசைத் துணுக்குகள் யூகத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. தவறு இருந்தால் சுட்டிக் காட்டலாம்.

ஒரு புரிதலுக்காக சில பாடல்களில்  இசையின் கவுண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

Trumpet-Nathiyai Thedi Vantha Kadal-80-ThavikkuthuThayanguthu.mp3
0.04-0.12 அருமை. வித்தியாசமான 0.26-0.41

Trumpet-Ellam Inba Mayam-81-Solla Solla.mp3
சூப்பர் 0.08-0.20(இது சாக்ஸ்போன்) மற்றும் 0.49-0.59.

Trumpet-Manjal Nila-82-PoonthendralKaatre.mp3
0.04-0.15 மற்றும் 0.39-0.50

Trumpet-Vikram-86-MeendumMeendum.mp3
0.18-0.35 நாக்கைத் துருத்தியபடி காம பாம்பு  மெதுவாக ஊர்ந்து வருகிறது.
0.31-0.34 சூப்பர்.
 

Trumpet-Balanagamma-81-Palliyaraikkul.mp3
00.04-0.24 மன்னர்கள் காலத்து பாட்டு.

கிழ் வரும் இரண்டு பாடல்களும் இரண்டு  விதமான உணர்ச்சிகள். ஒன்று மீனாட்சியின் மீதான வார்த்தை தவறியதால் ட்ரம்பெட்டில் பீறிடும் கொதித்த மனநிலை.
 
மற்றது திவ்யாவுக்கு(மெளன ராகம்) ஒரு  சோகமான/பரிவான கவுன்சலிங் for happy married life. பின்னணியில்  மெளனமாக கசியும் ட்ரம்பெட்டின் சோகம்.

Trumpet-Ennadi Meenashi-78-Ilamai Oonjal.mp3
1.10-1.23 கலக்கலோ கலக்கல். கிடார் vs  ட்ரம்பெட்


Trumpet-Mouna Raagam-86-MandramVantha.mp3
ட்ரம்பெட்டில் ஒரு மென்மையான கவிதை.
 


சீன்லயே ஒன்னுக்கு ரெண்டா  ட்ரம்பெட்  கைல வச்சிருக்கோம்ல!

Trumpet-Virumandi-04-Kompula Poove Suthi.mp3

Trumpet-Indrudu chandrudu-89-Sandhyaragapu .mp3
இளையராஜாவின் மாஸ்டர் பீஸ். இது ஒரு டூயட் பாடல். இதன் சிறப்பு ட்ரம்பெட் ரொம்ப  அழகாக அங்கங்கே மற்ற கருவிகளுடன் தொடுக்கப்பட்டிருக்கிறது.


Trumpet-Moondram Pirai-82-Ponmeni.mp3
00.13-0.25 அட்டகாசம்.

Trumpet-Thanga Magan-83-VaVaPakkam.mp3

Trumpet-Sivappu Rojakkal-78-NinaivoOruParavai.mp3
0.08-0.25 அருமை.

Trumpet-Avar Enakkae Sontham-77- Suraangani..mp3

Trumpet-Ullasa Paravaigal-80-Germaniyin_Senthean.mp3

Trumpet-Udhaya Geetham-85-Sangeetha Megam.com.mp3

இது ட்ராம்போன் என்னும் கருவியில் வாசிக்கப்பட்டிருக்கிறது.
காலர் டியூன் வசதி வந்த போது நிறைய பேர் இதை வைத்திருந்தார்கள்.

Trumpet-Sattam En Kaiyil-78-SorgamMathuvile.mp3


Trumpet-Rettai Vaal Kuruvi-87-Kannan Vanthu.mp3

Trumpet-Ooru Vittu Oru-90- Chingu Chaa Chaa .mp3

Trumpet-Oka Radha Iraddu Krish-Title.mp3
இது தெலுங்கு படத்தின் டைட்டில் இசை.பல வித கலவைகளில் அற்புதமாக வருகிறது.1.08-1.34 கேட்டுப் பாருங்கள்.

Trumpet-Kokila -77-Navodayam.mp3

Trumpet-JulieGanapathy-03-KaaKaKaaKa.mp3

Trumpet-Ninaikka Therintha Manamey-87-Kannukkum.mp3

Trumpet-JapanilKalyanaraman-85-Appappa thithikkum.mp3

Trumpet-IthuEppadiIrukku-78-DhinamDhinam.mp3
”தினம் தினம்” பாடலில் ஒரு பய உணர்ச்சி மற்றும் திகில் தெரிகிறது.இதில் வாசிக்கப்படுவது  மேற் குறிப்பிட்ட கருவிகளில் ஏதாவது ஒன்றா? அல்லது வேறா?

Trumpet-Idhayathai Thirudathe-BGM.mp3


Trumpet-Julie Ganapathy-03-Thani Konjam.mp3
0.02-0.25

Trumpet-Solla Thudikuthu Manasu-88-Then Mozhi.mp3

Trumpet-Idhayam-91-Aprilmayele.mp3
” ஏப்ரல் மேயில் காஞ்சு” போனதால் விரக்தி மன நிலையில் ட்ரம்பெட் ஆரம்பிக்கிறது.

Trumpet-Enakkul Oruvan-84-Engey En Kathali.mp3
0.28-0.40 பின்னணியில் வாசிக்கப்படுகிறது. ஒரு ராயல் பில்ட் அப் கொடுக்கப்படுகிறது.

Trumpet-Dharma Yudham-79-Ada Poiyya.mp3

Trumpet-Chinna Illu-85-Anubhavam ide.mp3
இளையராஜா ட்ரம்பெட்டில் சிலம்பாட்டம் ஆடுகிறார்.

Trumpet-Cheenikum-07-Track Music.mp3

Trumpet-Anjali- 90-Anjali.mp3

Trumpet-Adutha Vaarisu-83-AsaiNooruvagai.mp3

Trumpet-Sakala Kala Vallavan-82-IlamaiIthoo.mp3

புத்தாண்டு வருகையை ராயலாக ட்ரம்பெட்டில் வரவேற்கப்படும் பாட்டு.

ஒவ்வொரு புத்தாண்டு பிறக்கும் போதும் நள்ளிரவில் (11.58) இதைப் போட்டால் பழைய ஆண்டு சிலிர்த்துக்கொண்டு நகர ஆரம்பிக்கும் 12.00ஐ நோக்கி.

1.03-1.08 அருமை.ஆடியோவில் ஐந்து வினாடி.ஆனால் வீடியோவில் பத்து வினாடி வருகிறது. எப்படி?



Trumpet-Naan vazhavaipen-79-Aagayam melae -.mp3



Trumpet-Michael Madana Kama-90-RumBumBum.mp3

இன்னும் கூட நிறைய பாட்டு இருக்கிறது. பின்னொரு சமயத்தில் பார்ப்போம்.

”என்னடி மீனாட்சி” பாட்டு ஆடியோ பிரச்சனை வந்தால் வேறு ஆடியோ.

   Trumpet-Ilamai Oonjaladugirathu-78-YeenadiMeenaakshi

Tuesday, August 16, 2011

குலேபகாவலியும் இளையராஜாவின் “சில்”லென்ற பாட்டும்

படம்: "குலேபகாவலி”(1955)  இசை: விஸ்வநாதன் - ராமமூர்த்தி.இதில் வரும் ஒரு பாட்டு “மயக்கும் மாலைப் பொழுதே”.இனிமையான பாட்டு.பாடியவர்கள் ஏ.எம்.ராஜா-ஜிக்கி. பாகேஸ்வரி ராகம். ஆனால் இந்தப் பாடலுக்கு  மட்டும் இவர்கள் இசை இல்லையாம்.


http://www.inbaminge.com/t/k/Kulebagavali/

இந்தப் பாடல் எம்ஜியார்-சிவாஜி சேர்ந்து நடித்த “கூண்டுக்கிளி” படத்திற்காக கே.வி.மகாதேவனால் போடப்பட்டதாம். வி.ராமுவின் வேண்டுகோளிற்க்காக  இதை அவர்களுக்குக் கொடுத்துவிட்டராம்.

இதைச்சொன்னவர் விஸ்வநாதன். சொன்னது விஜய் டிவி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் போது.

இதெல்லாம் முன்னாடியே சொல்லுங்கப்பா. இவ்வளவு காலம்(நான் கேட்ட 25 வருஷமா)   புகழ் அனாவசியமா  விஸ்வநாதன் - ராமூர்த்திக்குப்போய் இன்னிக்குத்தான் கே.வி.மகாதேவ மாமாவுக்கு டிரான்ஸ்பர் பண்ணினேன்.

____________________________________________

”பனிமழை விழும்... பருவ குளிர் எழும்...”  பாட்டை முதன் முதலில்   கேட்கும் போது ஒரு வித்தியாசமான ”குளிர்ச்சி” யை உணர்ந்தேன்.மலை வாசஸ்தலத்தில் இருக்கும் உணர்வு.இசை இளையராஜா.

இந்தப் பாட்டை முதன் முதலில் சிலோன் ரேடியோவில்தான் கேட்டேன். 

”எனக்காக காத்திரு”(பாடலின் படம்) படத்தை 1981 வருடத்தின் அக்டோபர் மாத இறுதியில் பார்த்ததாக ஞாபகம்.பல்லாவரம் லட்சுமி அல்லது ஜனதா?

எனக்காக காத்திரு-1981-”பனிமழை விழும் பருவ குளிர்”


பாட்டின் ஆரம்ப இசையே  பனி படர்ந்த மலை உச்சி புத்த மடாலயம் பின்னணி உணர்வு தருகிறது.பாடலில் வரும் இசைக்கருவிகளின் ஒலிகளும் மலை வாசஸ்தலத்திற்குரியவைதான். காற்றுக் கருவிகள் அதிகம்.தந்திக் கருவிகள் குறைவு.

இசைக்கபடும் தாளமும் மலைவாழ் மக்களின் தோல் கருவி ஒலியை உணர முடிகிறது.வித்தியாசமான மெட்டு.

இதமான இசை.சில இடங்களில் அமானுஷ்ய இசை. 1.52- 2.11  மற்றும் 3.15-3.17. 

அடுத்து எஸ்.பி.ஷைலஜாவின் ”சில்லென்ற காற்றாட... சேர்ந்து மனம் ஆட” சில்லிடும் குரல்.இவருக்கு  எப்போதுமே தூரத்து அசிரீரீ குரல்.பிரமாதம்.

பாடல் காட்சிகள் தோன்றும் இடமும் மலை வாசஸ்தலம்தான்....நேபாளம்?

இந்தப்படத்தில் வரும் இன்னொரு பாட்டு “தாகம் எடுக்கிற நேரம்”.இதுவும் மலைபிரதேச உணர்ச்சிகள் கொண்ட இசையமைப்பு.முக்கியமாக பாட்டின் தாளம்.

Enakkaga Kaathiru - Dhaagam EDukkira Neram - Panimazhai Vizhum

Tuesday, August 9, 2011

திருப்பிக் கொடுக்கப்படாத காதல் கடிதம் - சிறுகதை


ஒரு நாள் எட்டாவது படிக்கும் கோபால்  ஸ்கூல் முதல் பிரியட் தொடங்கும்போது  "திடுதிப்"பென்று சக மாணவி கிருஷ்ணவேணியை காதலிக்க ஆரம்பித்தான்.ஏன் இந்த ”திடுதிப்” என்று அவனுக்கே புரியவில்லை.மதியம்வரைப் புல்லரித்துக் கொண்டே இருந்தது.

கண் இமைக்கும் நேரத்தில் பூமியில் மேல்  உதிரும் நட்சத்திரம் போல காதல் தேவதை எதையோ தன் மேல்  உதிர்த்து விட்டு போய் இருப்பதால் காதல் அங்கீகரிக்கப்பட்டுவிடும் என்று  பலமாக நம்பினான்.

அன்று வகுப்பில் இவனை எல்லோரும் ஒரு மாதிரியாகவே பார்த்ததாக இவன் நினைத்துக்கொண்டான்.ஆச்சரியமாக இவனை இந்த “ஒரு மாதிரி”க்கு கேலி ஆட்டவில்லை.ஆச்சரியத்திலும் ஆச்சரியம் இவனுடைய நெருங்கிய நண்பர்கள் காசி மற்றும் குணசீலன்  அன்று முழுவதும் வாயே திறக்கவில்லை.தள்ளி நின்று  பார்த்தவாறு போனார்கள். இது அவனை மேலும் புல்லரிக்க வைத்தது.

உயிர் நண்பர்கள் காசி, குணசீலன் இருவரிடமும் தன் திடீர்
திடுதிப்காதலைப் பற்றி மிகவும் வெட்கத்துடன் சொன்னான்.இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு மெளனமானர்கள்.பொறாமையாகக் கூட இருந்தது இருவருக்கும்.

காதல், கடிதம் மூலம்தான் சொல்லப்படவேண்டும்.அதில்தான் ஒரு நிதானம் இருக்கும். போகிறபோக்கில் அவளிடம் ஐ லவ் யூ சொல்வதில் ஒரு அவமரியாதை மற்றும் அலட்சியம் இருக்கிறது.கடிதத்தில்தான் மனதை திறந்து காட்டலாம்.ஒரு புரிதலும் இருக்கும்  என்று அவர்களிடம்  சொன்னான்.அவர்களும் தலையாட்டினார்கள்.

அடுத்து ஒரு பக்கத்திற்கு காதல் கடிதம் ஒன்று தயார் செய்யப்பட்டது.

நண்பர்கள் இருவரும் படித்தார்கள்.ஏதாவது மிஸ்டேக் இருக்கிறதா என்று கேட்டதற்கு “ சீக்கிரம் சொல்லிவிடு”  என்பதில் அதிகார தொனி இருப்பதாகவும் அதை “யோசித்து நல்ல பதில் சொல்” என்று மாற்ற சொன்னார்கள். அப்படியே செய்தான்.குணசீலன் மேலே  புள்ளையார் சுழி போட்டான்.

மூன்றாவது வரிசை இரண்டாவது டெஸ்க்கில்  ரீசஸ் பிரியடில் வைப்பதாக முடிவாயிற்று.காசிதான் வைத்தான்.

ரீசஸ் பிரியட் முடிந்து  உள்ளே நுழைந்து இரண்டாவது டெஸ்கைப் பார்த்தவாறே நடக்கும்போது மூவர் உடலிலும் ஒரு குறுகுறுப்பு இருந்தது.

கிருஷ்ணவேணி மூவரையும் பார்த்து புன்னகைப் புரிந்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக்கொண்டாள்.தனக்கும் அவளுக்கும் காதல் முடிச்சு விழுந்துவிட்டதாக கோபால் கை நடுங்க ஆரம்பித்து டெஸ்க்கில் கைவிட்டு மறைத்துக்
கொண்டான்.

வகுப்பு நடந்துக்கொண்டிருக்கும் போது, திடீரென  PT(விளையாட்டு) மாஸ்டர் உள்ளே நுழைந்து,வாலிபால் போட்டிப் பயிற்ச்சிக்கு  சூபர்வைஸ் செய்ய பெண் குரூப்புக்கு ஒரு கேப்டனும் ஆண் குரூப்புக்கு ஒரு கேப்டனும் தேவை என்று கேட்க  கிருஷ்ணவேனி பெண் குரூப்புக்கு கைத்தூக்க  அதைப்பார்த்த குணசீலன் சட்டென்று ஆண் குரூப்புக்கு புன்முறுவல் பூத்தபடி கைத்தூக்கினான்.

அவனைப் பார்த்து கிருஷ்ணவேணி புன்னகைத்தாள்.குணசீலன் மேகத்தில் மிதந்தான்.

கோபாலின் புல்லரிப்புகள் திடுதிப்பென்று நின்றது.காசி முகம் சிறுத்தான். 

அடுத்த நாள்  காசி மேகத்தில் மிதந்தான்.

அன்று விமலா டீச்சர் கிருஷ்ணவேணியையும் காசியையும்  காலையில் தன் ரூமுக்கு வரவழைத்து புது புத்தகங்களை அடுக்கிக் கட்டி கிளாசுக்கு எடுத்து வர பணித்தாள்.அடிக்கடி காசி அவளிடம்  புத்தகங்களை அடுக்குவதுப் பற்றி “டவுட்” கேட்டு புத்தகங்களை கட்டினான்.அவளும் சிரித்துக்கொண்டே  ”டவுட்” டுகளுக்குப் பதில் சொன்னாள்.

இருவரும் புன்னகைத்தப்படியே கிளாசில் நுழைந்து ”இந்தா முதல்ல உன் புக்கை எடுத்துக்கோ” புத்தகத்தின் நடுவே வாசனைப் பிடித்துவிட்டு அவளிடம் கொடுத்தது கோபாலுக்கும் குணாவுக்கும் எரிச்சல் ஊட்டியது.

கோபால் தனக்கும்  இது மாதிரி ஒரு சான்ஸ் வரும் என்று அடுத்த வாரம் முழுவதுமாக ஏங்கி இளைத்துப்போனான்.

ஒரு மாதம் அவளிடமிருந்து ஒரு பதிலும் இல்லை. அவளின் மர்ம புன்னகை மட்டும் தொடர்ந்தது.அடுத்த பத்து நாளும் ஒன்றும் நடக்கவில்லை.அதே மர்ம புன்னகை. கோபால் சற்று கலவரமானான். மறுநாள் கடிதத்தை திருப்பி வாங்கிவிட துடித்தான்.இருவருக்கும் தெரியாமல் அவளிடம் கேட்டு வாங்கிவிடவேண்டும் மனதில் எண்ணிக்கொண்டான்.

மறு நாள் காசியும், குணசீலனும் அவளை வழிமறித்து  ஏதோ கேட்பதும் அவள் முடியாது என்று விடுவிடுவென்று கோபத்துடன் நடப்பதை மறைந்திருந்த பார்த்தான் கோபால். திரும்பி வரும்போது இருவர்  முகத்திலும் இனம் புரியாத  பய ரேகைகள் ஓடுவதை கோபால் உணர்ந்தான்.

 ”என்னடா... கேட்டீங்க அவள்ட? அவ ஏன் டென்சன் ஆவரா?”

“ லெட்டர திருப்பி குடுன்னு கேட்டோம். மாட்டேன்டா”

கோபால் பீதி அடைந்து முகம் வெளுத்தது. மாட்டி விடுவாளா? பயந்தபடியே  ஒவ்வொரு நாளும் கோபால் நாட்களை ஓட்டினான்.

அடுத்த மூன்று வாரங்கள் மூன்று பேரும் பேசிக்கொள்ளவில்லை.வெவ்வேறு இடத்தில் மாறி உட்கார்ந்தார்கள்.
  
அடுத்த வருடம்  காசியும் கோபாலும் வகுப்பு மாறினார்கள்.இது வரை ஒன்றும் நடக்காதது சற்று பீதி குறைந்தது. கிருஷ்ணவேனியை இழந்துவிட்டோம் என்ற நினைப்பு மட்டும் மாறாமல் கோபாலை எல்லா வகுப்பிலும் தொடர்ந்தது.

பள்ளியின் கடைசி நாள் அன்று ஒரு செய்தி கேள்விப்பட்டு அதிர்ந்தான் கோபால். தான் கொடுத்த அதே நாளில் குணாவும் காசியும் அவளுக்கு காதல் கடிதம் கொடுத்திருக்கிறார்கள்.

கடைசி நாளில் மூவரும்  சேர்ந்து அவளிடம் அந்த காதல் கடிதங்களை கேட்கையில் தர முடியாது என்ற்படி விறுவிறுவென்று நடந்தாள்.

பள்ளி முடிந்து எல்லோரும் மூலைக்கொன்றாக சிதறினார்கள். சிதறினாலும் லெட்டர் திருப்பி வாங்க முடியாமல் போனது உறுத்திக்கொண்டுதான் இருந்தது மூவருக்கும்.

பல  பல வருடங்களுக்குப் பிறகு....

புதுகுமரன்புதூர் காந்தி-காமராஜ் ஹை ஸ்கூல் அலுமினி  என்ற வெப் சைட்டில்...
 
ஹாய்! நான் கிருஷ்ணவேணி மாதவன்உன்னி. 1975 பாட்ச்.கோபால்,குணா, காசி, நிர்மலா,சாந்தி எங்க இருக்கீங்க?நான் கணவர், ரெண்டு குழந்தைகளோட திருச்சில இருக்கேன்.

பழைய பள்ளி  நினைவுகளுக்காக இந்த வெப் சைட்.மறக்க முடியாத நாட்கள்.

யாரை மறந்தாலும் கோபால்,குணா, காசி மூணு பேரையும் மறக்கவே மாட்டேன்.ஒரு நாள்ல மூணு பேரும்  மூணு லவ் லெட்டர் கொடுத்தாங்க. மிரண்டுப் போய்விட்டேன் .ஆனா  ரொம்ப பிடிச்சுருந்தது. இன்னும் பத்திரமா வச்சிருக்கேன்.

இங்க கிளிக் பண்ணினா ஸ்கேன் பண்ண காப்பிய பார்க்கலாம்.

என்னைத் தொடர்பு கொண்டால் குடும்பத்தோடு சந்திக்க ரொம்ப ஆர்வம்.

சத்தியமா உங்க  லவ் லெட்டர்களை திருப்பிக்கொடுத்துவிடுகிறேன்.(ஹா ஹா ஹா ஹா)
            
(தினமும் கிருஷ்ணவேணி  கமெண்ட் பாக்ஸை பார்ப்பது வழக்கம். பத்து வருடமாக ”0 comments"   என்று வெறிச்சோடிக் கிடக்கிறது)
           
             முற்றும்




Wednesday, August 3, 2011

09.10.57ல் நின்ற பிரபஞ்சம்


டிக்... டிக்... டிக்... டிக்...
அலாரம் டைம்பீஸின்
பிரபஞ்ச இயக்கத்தைக்
கேட்ட குழந்தை
பேட்டரிகளைக்  கழட்டி
09.10.57 ல் பிரபஞ்சத்தை நிறுத்திவிடுகிறது

மீண்டும் பாட்டரி பொருத்தியும்
டிக்... டிக்... டிக்... டிக்...இயக்கம் இல்லை
பிரபஞ்சத்தின் கைகள்
09.10.57 ல்லை விட்டு அசையவில்லை

அப்படியும் இப்படியும்
குலுக்கிப் பார்த்தும்
பிரபஞ்சம் அசையவில்லை

பிரபஞ்சத்தை அப்படியே
வைத்துவிட்டு அடுத்த
விளையாட்டுக்குப் போய்விடுகிறது
குழந்தை

பிரபஞ்சத்தின்
கோடானு கோடி கோடி கோடி ஜீவராசிகள்
கட்டிலுக்கடியில்   உருண்டுபோய்
கிடக்கும் இன்னொரு பாட்டரியின்
மேல் கண்கள் குத்திட்டு
உறைந்து நிற்கின்றன