Thursday, July 19, 2012

மனசுல பெரிய ராஜேஷ்கன்னான்னு நெனப்பு

70களில் யாராவது ஒரு இளைஞன் ரொம்ப ஸ்டைல் காட்டினால் “மனசுல பெரிய ராஜேஷ்கன்னான்னு நெனப்பு” என்று கலாய்ப்பார்கள்.அந்த அளவிற்கு ஹிந்தி நடிகர் ராஜேஷ்கன்னா தமிழ்நாட்டில் புகழ் பெற்றிருந்தார்.

இந்தியா முழுவதும் பெண் ரசிகர்கள் அதிகம்.தமிழ்நாட்டில் கொஞ்சம் ஸ்பெஷல்.

அந்தக் காலத்தில் சென்னை தி.நகர்  ஹோட்டல்  ஒன்றின் வாஷ் பேசின் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு அருகில் இப்படி ஒரு அறிவிப்பு நான் பார்த்திருக்கிறேன்.”நீங்கள் ஒரு ராஜேஷ்கன்னாதான்.தயவு செய்து இங்கு தலை சீவாதீர்கள்”.

இப்போது மாதிரி சிக்ஸ் பேக்ஸ் அல்லது எய்ட் பேக்ஸ் உடம்பில் ஏற்றி macho லுக் இல்லாமல் இந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர்.ரொம்ப அலட்டிக்கொள்ளாமல் அலுங்காமல் நலுங்காமல் மைக் மோகன் மாதிரி நடித்துவிட்டுச் செல்வார்.இங்கு அதைத் “தத்தித்தனம்” என்று சொல்வோம்.இவரின் தலைசாய்த்தல் மற்றும் சிறு புன்னகை ரொம்ப பேமஸ்.

நம்ப ஊர் ஏ.வி.எம்.ராஜனுக்கு இவரின் பாதிப்பு உண்டு????

இவர் அஞ்சு மகேந்திரா என்கிற பெண்ணை ரொம்ப டாவடித்துவிட்டு தடால் என்று கைவிட்டு டிம்பிள் கபாடியாவைக் கைப்பிடித்தார்.அஞ்சு மகேந்திரா நொந்து நூலானார்.

இவரை நான் அறிந்தது இவர் படத்தின் பாடல்கள் மூலம்தான்.எல்லாம் மெலடி.சிவாஜிக்கு டிஎம்எஸ் எப்படியோ அப்படி இவருக்கு கிஷோர் குமார்.கன்னபின்னாவென்று ஒரு கெமிஸ்ட்ரி(பிரமை??) இருவருக்கும்.ராஜேஷ்கன்னாவே சொந்த குரலில் பாடுவது மாதிரியே இருக்கும்.முக்கியமாக Yeh Jo Mohabbat Hai  (Kati Patang)என்னும் பாடல் இவரே பாடுவது மாதிரி இருக்கும்.

Kishore
ஹிந்தியில் சுத்தமாக ஒரு அட்சரம் கூட தெரியாமால் "Daag" என்ற படம் மூன்று முறை பார்த்தேன். காரணம் அதில்”Mere Dil Mein Aaj Kya Hai" வரும் இனிமையான பாடல்.”ரூப்பு தேரா மஸ்தானா”(ஆராதனா) தமிழ் நாட்டில் சூப்பர் ஹிட்.


படங்களில் மல்டி ஸ்டார் ஆக்டிங் டிரெண்ட் வந்ததும் இவருக்கு கொஞ்சம் மவுசு குறைய ஆரம்பித்தது. இவர் கொஞ்சம் தனிதன்மை கொண்டவரால் இவர் மல்டி ஸ்டார் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை.

இவருக்கு இன்னொரு சிறப்பு உண்டு “A" எழுத்தில் ஆரம்பிக்கும் படங்கள் நிறைய உண்டு.Aaradhana,Aap Ki Kasam,Anand,Amar Deep,Ajnabee,Adhikaar,Avishkar,Aanchal.

இவரின் பாடல்களைக் கேட்க:

http://www.saavn.com/s/#!/play/featured/hindi/Tribute+to+Kaka

சின்ன வயதில் எப்போவோ ஒரு மத்தியான வேளையில் பொட்டிக்கடை டிரான்ஸிஸ்டரில் கேட்ட “Kora Kagaz Tha Yeh Man Mera” ஆராதனா படப் பாடல் நினைவில் அலையடிக்கிறது.


Wednesday, July 11, 2012

பள்ளிக்கருகில் எரிந்த பிணங்கள்

பள்ளிக்கருகில் அல்லது கோவிலுக்கருகில்  டாஸ்மாக் இருக்கிறது என்று மக்கள் அடிக்கடி  புலம்புவதையும் போராடுவதையும் பேப்பரிலும் டிவியிலும் படிக்கிறோம் பார்க்கிறோம்.ஆனால் என் பள்ளிக்கருகில் டாஸ்மாக் இல்லை சுடுகாடு இருந்தது.ரெண்டும் ஒண்ணுதான்????


சுடுகாட்டுக்கருகில்பள்ளி இருக்கிறதே என்று யாராவது அப்போது புலம்பினார்களா?படித்த பள்ளிக்கருகில் ரொம்ப ஆக்டிவான சுடுகாடு.நினைத்தால் deadly ஆக இருக்கிறது.

வெகு தூரத்தில், முக்கால்வாசி மதியத்தில்,” டகர டகர டகர டகர...”என்று பொடிப்பொடியாக சாவு மோளம் அடிக்கப்படும் சத்தம் நெருங்க ஆரம்பிக்கும்.கூடவே திகிலான ”புவ்வ்வய்ய்ங் புவ்வ்வய்ய்ங் ”சீவி சீவி வரும் ஊதல்.”விஷ்க் விஷ்க் விஷ்க்” இடை இடையே சீட்டி.கேட்க ஆரம்பித்தவுடன் வகுப்பில் ஒரு மரண அமைதி நிலவும்.திகிலுடன்  மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஒட்டியவாறு உட்கார்ந்துக்கொள்வோம்.எல்லாம் மண் தரைதான்.
தகனம் நடைபெறுகிறது-மணிகர்ணிகா காட் -காசி
ஆசிரியர் மூட் அப்செட் ஆகி புத்தகத்தை மூடி வைத்துவிடுவார்.அடுத்த நிமிடம் ”ஏலே அது ஒண்ணும் ஜெய்யாது.அது கூட வரானுவ பாரு அதுங்கதான் வெசம்.. குலிப்பறிப்பானுங்க”என்பார்.


சில மணி நேரத்தில் திகுதிகு தீயில் பிணங்கள்  எரிந்தவாறு பள்ளி முழுவதும் புகை அப்பும்.பச்சைத் தசைகள் எரிந்து குமட்டும் நாற்றம்.பிணம் சூடு தாங்காமல் “அய்யோ அம்மா அய்யோ அம்மா” என்று கத்தியவாறு எங்களை நோக்கி ஓடி வருவது மாதிரி பிரமை ஏற்பட்டு திகிலடிக்கும்.


ஆனால் இதெல்லாம் பள்ளி ஆரம்பித்த புதிதில்.பிறகு இதெல்லாம் பழகிப் போய் “டகர டகர டகர டகர...”தாளத்தை ஆர்வமாகக் கற்றுக்கொண்டோம்.இது கிழடா குமரனா ஆணா பெண்ணா என்று எரியும் பிணங்களைப் பார்த்தவாறு படிக்க ஆரம்பித்தோம்.குழந்தையாக இருந்தால் சீக்கிரம் முடிந்துவிடும்.புகை மண்டாது.

எல்லா ஜாதிகளின் சம்பிராதயங்களை தெரிந்துக் கொண்டோம். கிட்டத்தட்ட 50-60 பிணங்களின் புகையை சுவாசித்திருக்கிறோம்!காசியில் இருந்தாலாவது புண்ணியம் உண்டு.


பிறகாலத்தில் சித்தர் பாடல்களில ஆர்வம் வந்தது “இதோட” இன்ஸ்பியரேஷனாக கூட இருக்கலாம்.


“மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து 
வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித் 
திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே 
தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே”


இந்தப் பள்ளி குரோம்பேட்டை ராதா நகரில் (மெயின்) இருந்த வெங்கடேஸ்வரா பள்ளிதான். குரோம்பேட்டைக்கும் பல்லாவரத்திற்க்கும் இடைப்பட்ட இடத்தில் இதன் பிரான்ஞ்ச்.பக்கத்தில் சுடுகாடு. மழை வந்தால் ஏரி ஆகிவிடும். பள்ளி இங்கு மிதந்தக்கொண்டிருக்க பள்ளி ராதா நகருக்கு இடம் பெயர்ந்துவிடும்.ஏரி வற்றியவுடன் மீண்டும் சுடுகாடு.


”ஏரிக்கரை ஸ்கூல்” என்று அழைப்பதுண்டு.


பள்ளியிலிருந்து சுடுகாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த கோணம் போய் சுடுகாட்டிலிருந்து நெய் பந்தம் பிடித்தபடி  பள்ளியைப் பார்வையிட்ட நாள் ஒன்று வந்தது. அது என் தாத்தா இறந்து போய் அங்குதான் தகனம் நடந்தது.


அப்போது ஓடும்  மின்சார ரயிலில் இருந்து பார்த்தால் ஏரி பெரிசாகத் தெரியும்.பெருமழைப் பெய்தால் தண்டவாளம் வரை தண்ணீர் அலை அடிக்கும்.அதில் மிதந்தவாறு சில வீடுகள்.அதிலும் வழக்கமான கிறிஸ்துவ ஜப வீடு ஒன்றும் உண்டு.

இப்போது ஏரி இல்லை.ஏரி ”டகர டகர டகர டகர டகர...புவ்வொய்ங் புவொய்ங்” ஆகிவிட்டது.சுடுகாடு? வெங்கடேஸ்வரா பள்ளி?




Tuesday, June 12, 2012

நித்தியானந்தா,மகான்,சாமியார்,பீடாதிபதி,பாபா,குருஜி பின்னே துறவும்

பல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துறவி என்றால் எல்லாவற்றையும் துறந்து தன்னைத்தானே அறிந்து (இதுதான் அது. அதுதான் இது) உடம்புலிருந்து விடுபட்டு மக்களிடமிருந்து விலகி பிரபஞ்சத்தில் ஐக்கியமாதல்தான்.இது ஒரு நிலை.முக்கியமாக “நான் யார்” என்பதை அறிந்தவர்கள்.

(”நானார்? என் உள்ளமார்? ஞானங்களார்? என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்”) - திருவாசகம்

இப்படி விடுபடுவன் “சீன்” அல்லது “பில்ட் அப்” கொடுத்து பிரபஞ்சத்தில் ஐக்கியமாவதில்லை.அதைப் பற்றியும் கவலைப்பட்டதும் இல்லை.ஊர் பேர் தெரியாமல் தன்னை அறிந்தார்கள்.

18ஆம் நூற்றாண்டில் வந்த அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் சம்பிராதாயத்திலிருந்து சற்று விலகி காவி தவிர்த்து எளிமையான வெள்ளுடை உடுத்தி மனதில் துறவு பூண்டு மக்களை சாதி,சமய பேதங்களற்ற மற்றும் புலால் தவிர்த்து உயிர்களிடத்து அன்பு செலுத்தும் “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை” பாதையில் ”என் வழி தனி வழி” என்று கவுன்சிலிங் செய்து அழைத்துச்செல்ல முயற்சித்தார்.

மக்கள் ” மன்னிக்கவும் வள்ளளார் ஸ்வாமிகளே! உங்களின் புதுக் கடையில் எல்லாம் புதுசா இருக்கு.செட் ஆக மாட்டேங்குது.அலர்ஜியா இருக்கு” என்று முகம் சுருக்கினார்கள்.

வள்ளளார் பதிலுக்கு “ கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்று வருத்தப்பட்டு கடையை மூடினார்.மக்கள் சந்தோஷமானார்கள்.

இப்படி தன்னைத்தானே அறிந்த துறவிகள்/யோகிகள் ஆண்டுகள் கடந்து சாமியார்,மகான்,பீடாதிபதி,ஜகத்குரு,சன்னிதானம்,அருட் தந்தை,பாபா,குருஜி, சத்குருஎன்று பலவித ரூபங்களில் போலிகள் நிறைந்து அசல்கள் குறைந்து “தன்னைத் தானே அறிதலை” ரிஜிஸ்டர்டு ஆபிஸ்,பிரான்ச் ஆபிஸ்,மார்க்கெட்டிங் ஆபிஸ், வெப் சைட்,டிவிட்டர்,ஈமெயில்,கூகுள்பிளஸ் என்று விரிவுபடுத்தினார்கள். ஆபிசில் தவறாமல் 2 டன் ஸ்பிலிட் ஏசி வைத்துக்கொண்டார்கள்.

ஜாதிக்கொரு சாமியார் அவதாரம் எடுத்து உலகத்தை உய்விக்கப் போவதாக அருள்வாக்கு கொடுத்தார்கள்.

பலவித கெட் அப்புகளில் வந்து பிரபஞ்சத்தில் “போஸ்” கொடுத்து ஐக்கியம் செய்துகொண்டார்கள். மக்கள் “ இவர்களை அறிந்துக்கொண்டார்கள்”.

மக்களுக்கு எளிதான ஆன்மிகப்பாதையை காட்டி அழைத்துச்செல்லாமல் லூசுத்தனமாக ஏதேதோ செய்து“லூசுப் பையன்” ஆனார்கள்.

சின்ன வயதில் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மகான்/சித்தர்/யோகி பெயர் தெரியாத ஒருவர்.பிரம்மச்சாரியான அவர் திடீரென்று ஒரு நாள் துறவு பூண்டு காணாமல் போனார்.ஏன்? தான் இருக்கும் இடம் மக்கள் அறிந்தால் தன்னை வைத்து பிசினஸ் செய்வார்கள் என்றுதான்.

ஆனால் திடீரென்று தோன்றுவார் சாலையில் பல்லாவரம் மலைக்கருகில்.புன்னகைத்தவாறே யாரையும் சட்டை செய்யாமல் நடப்பார்.”அருள் வாக்கிற்காக” மக்கள் துரத்துவார்கள்.மேலே கை காட்டுவார்.அவ்வளவுதான்.

சில வருடங்கள் கழித்து அவரின் உடல் தாம்பரம்/சிட்லபாக்கம் அருகே காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இறந்துபோய் 4-5 நாள் ஆகியும் அழுகாமல் இருந்தது. ஆச்சரியம்!

ஒரு வேளை ஸ்பிலிட் ஏசியில் இருந்திருந்தார் அழுகி இருக்குமோ?

 இப்படி “அறியாமை”யில் முழுகிக் கிடக்கும் சாமியார்களை மக்கள்தான் சரியான பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.


Thursday, May 17, 2012

ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது? ஆனால் அதுவும்...


இளையராஜாவின் இசை மொழி ஆத்மார்த்தமானது.ஆழமாக மனதை உழுவுபவை.நினைவுகளில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

இப்படியாக என்னை  உணர்வுபூர்வமாக உலுக்கி எடுத்தப்பாடல் “என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்”  படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி -1979.பாடியவர்: வாணிஜெயராம.பாடல்: கங்கை அமரன் டைரக்டர்: தேவராஜ் மோகன.

பாடலைக் காட்சியாக்கியவரையும் சற்று உலுக்கத்தான் செய்திருக்கிறது.பாடலை உள்வாங்கிக்கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்கள் வெகு வெகு வெகு சொற்பம். தீபாவின் கொழுகொழு வளர்த்தியை ஆபாசப்படுத்தாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.பாடலின் ஆன்மா காட்சியில் புகுத்தப்பட்டிருக்கிறது.

சாதாரண கிராமத்து பெண்ணின் மோகத்தை சலனத்தை மோட்டர்பைக் பயணத்தில்  இலக்கிய தரத்திற்கு கொண்டு போய் இருக்கிறார். 




பாடல் காட்சி: 
திருமணமான கிராமத்துப் பெண் வேற ஒரு ஆணுடன் (அந்த ஊர் மைனர்)”என் உள்ளில் ஏதோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது....ஏன் வாட்டுது” என்று சலனித்தப்படி “ஆனால் அதுவும் ஆனந்தம்" என்று ஆனந்தத்தில் மிதந்தவாறே வெறிச்சோடிய  கிராம இயற்கை சூழ்நிலையில் பைக்கில் பயணித்து பாடலின் முடிவில் அப்பாவித்தனமாக  தன்னை இழக்கிறாள்.

இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த இசையின் அடி நாதம் இதில் வரும் இரு கதாபாத்திரங்கள் பயணம் செய்தபடியே மெளனமாக பேசும் மொழி.இளையராஜா சிலுப்பி சிலுப்பி உணர்ச்சிகளை  எடுத்து  மொழிந்துள்ளார்.

பாடலும் காட்சிக்கு ஏற்றவாரு புனையப்பட்டுள்ளது.இசையுடன் இணைந்து மொழியை பேசுகிறது. காட்சியும் ஒன்றி போகிறது.



பாடல்  இதமான  தபலா தாளத்துடன்   பைக்கில் இருவருடன்  பயணிக்கிறது. தாளம் பயணிக்கும் உணர்வைத் தருகிறது.எதையோ நோக்கி வெறிச்சோடிய  மத்தியான வேளையில் புரிந்தும் புரியாமுலும் ஒரு பயணம்.தீபா "நாட்டுப்புறத்து” மிட்டாய் கலர் உடையுடன்  (சிவச்சந்திரனும் அவ்வாறே இம்மி பிசாகமல்) பில்லியனில் தள்ளியே ஒரு மாதிரி ஒட்டாமல்  பயணிக்கிறார். பிறகு அணைத்துக்கொள்ளும்போது (1.20 -1.33 )சாரங்கி ஓலமிடுகிறது.ஏதோ ஒரு காம வலி மேல் பூச்சாக ஓடுவதை உணரமுடிகிறது.

அடுத்து 2.50 - 3.15 காட்சியும் இசையின் மொழியும் ஒன்றை ஒன்று போட்டி போடுகிறது.விட்டு விட்டு ஒளிரும் மர நிழல்களின் ஊடே பயணிக்கும் பைக்கும் பயணிப்பவர்களின் உடல் மொழியும் பின்னணியில் அமானுஷ்யமான இசை மொழியும் உயிர் துடிப்பானது.சற்று திகிலாகவும் இருக்கிறது.

மேற்சொன்ன மொழி தமிழ் திரை இசைக்குப்புதிது.

இப்படி போய்க்கொண்டிருக்கும் இசையின் மொழி........

3.16 -3.30ல் அமானுஷ்ய இசை மொழி சகஜமாகி சிதார்-வயலின் -சிதார்-வயலின் -சிதார்-வயலின் மாறி மாறி  பின்னிப் பிணைந்து குழைந்து வர காட்சியில்  பெயர் தெரியாத  மணமில்லாத பூத்திருக்கும் காட்டுச்செடிகளிடையே ரோசாப்பூ ரவிக்கைக்காரி நடந்துவருவது கவிதை.

ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுக்கள்.இந்தப் பாடல் “மதுவந்தி” என்ற ராகத்தில் புனையப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.வாணிஜெயராம் உணர்ச்சிகளைக் குழைத்துப்பாடி உள்ளார்.

”மஞ்சளை பூசிய மேகங்களே” வரிகள் வரும்போது  உடனே  காட்சி மஞ்சள் ஆவதுதான்  ரொம்ப  ”லோக்கல்”.அடுத்து முதலில் வரும் சேவல்-கோழி  தவிர்த்திருக்கலாம்.பாலச்சந்தர் பட சிம்பாலிக் காட்சியாக சற்று அமெச்சூராக இருக்கிறது.

32 வருடங்களுக்கு முன்  குட்டி ரேடியோவில் விரும்பிக் கேட்ட பல நேயர்களுடன் நானும் ஒரு நேயர்.அதுவும் இரவு நேரத்தில் தனிமையில கேட்டது. பிறகு  பாடலின் இசைமொழி ஏற்படுத்திய தாக்கம்  எதையோ யாரையோ தரிசித்தது போல ஒரு உணர்வு.ஒரு ஏக்க ஒரு தொலைந்துபோன உணர்வு.

முதல் ஐந்து வருடங்களில்(1979-84)  வயது காராணமாய் தாக்கிய பாடலின் இசைமொழி தெரியாமல்  ”ரொம்ப  சாஃப்ட் மெலடி” என்றுதான் மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.பின்னாளில் தெரியவந்தது இதன் விஸ்வரூபம்.


டெயில் பீஸ்: 
இப்போது பல வித இசைத் தளங்களை கடந்து வந்துள்ளோம்.அதில் ராஜாவின் இசையிலேயே பல வித கட்டங்களை கடந்தும் வந்தாயிற்று.யோசித்துப் பாருங்கள் 31 வருடங்களுக்கு முன் மேற்கண்ட பாடலின் இசை என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று.