Tuesday, June 12, 2012

நித்தியானந்தா,மகான்,சாமியார்,பீடாதிபதி,பாபா,குருஜி பின்னே துறவும்

பல பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துறவி என்றால் எல்லாவற்றையும் துறந்து தன்னைத்தானே அறிந்து (இதுதான் அது. அதுதான் இது) உடம்புலிருந்து விடுபட்டு மக்களிடமிருந்து விலகி பிரபஞ்சத்தில் ஐக்கியமாதல்தான்.இது ஒரு நிலை.முக்கியமாக “நான் யார்” என்பதை அறிந்தவர்கள்.

(”நானார்? என் உள்ளமார்? ஞானங்களார்? என்னை யாரறிவார் வானோர் பிரான் என்னை ஆண்டிலனேல்”) - திருவாசகம்

இப்படி விடுபடுவன் “சீன்” அல்லது “பில்ட் அப்” கொடுத்து பிரபஞ்சத்தில் ஐக்கியமாவதில்லை.அதைப் பற்றியும் கவலைப்பட்டதும் இல்லை.ஊர் பேர் தெரியாமல் தன்னை அறிந்தார்கள்.

18ஆம் நூற்றாண்டில் வந்த அருட்பெருஞ் ஜோதி வள்ளலார் சம்பிராதாயத்திலிருந்து சற்று விலகி காவி தவிர்த்து எளிமையான வெள்ளுடை உடுத்தி மனதில் துறவு பூண்டு மக்களை சாதி,சமய பேதங்களற்ற மற்றும் புலால் தவிர்த்து உயிர்களிடத்து அன்பு செலுத்தும் “சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை” பாதையில் ”என் வழி தனி வழி” என்று கவுன்சிலிங் செய்து அழைத்துச்செல்ல முயற்சித்தார்.

மக்கள் ” மன்னிக்கவும் வள்ளளார் ஸ்வாமிகளே! உங்களின் புதுக் கடையில் எல்லாம் புதுசா இருக்கு.செட் ஆக மாட்டேங்குது.அலர்ஜியா இருக்கு” என்று முகம் சுருக்கினார்கள்.

வள்ளளார் பதிலுக்கு “ கடைவிரித்தேன் கொள்வாரில்லை” என்று வருத்தப்பட்டு கடையை மூடினார்.மக்கள் சந்தோஷமானார்கள்.

இப்படி தன்னைத்தானே அறிந்த துறவிகள்/யோகிகள் ஆண்டுகள் கடந்து சாமியார்,மகான்,பீடாதிபதி,ஜகத்குரு,சன்னிதானம்,அருட் தந்தை,பாபா,குருஜி, சத்குருஎன்று பலவித ரூபங்களில் போலிகள் நிறைந்து அசல்கள் குறைந்து “தன்னைத் தானே அறிதலை” ரிஜிஸ்டர்டு ஆபிஸ்,பிரான்ச் ஆபிஸ்,மார்க்கெட்டிங் ஆபிஸ், வெப் சைட்,டிவிட்டர்,ஈமெயில்,கூகுள்பிளஸ் என்று விரிவுபடுத்தினார்கள். ஆபிசில் தவறாமல் 2 டன் ஸ்பிலிட் ஏசி வைத்துக்கொண்டார்கள்.

ஜாதிக்கொரு சாமியார் அவதாரம் எடுத்து உலகத்தை உய்விக்கப் போவதாக அருள்வாக்கு கொடுத்தார்கள்.

பலவித கெட் அப்புகளில் வந்து பிரபஞ்சத்தில் “போஸ்” கொடுத்து ஐக்கியம் செய்துகொண்டார்கள். மக்கள் “ இவர்களை அறிந்துக்கொண்டார்கள்”.

மக்களுக்கு எளிதான ஆன்மிகப்பாதையை காட்டி அழைத்துச்செல்லாமல் லூசுத்தனமாக ஏதேதோ செய்து“லூசுப் பையன்” ஆனார்கள்.

சின்ன வயதில் நான் பார்த்து ஆச்சரியப்பட்ட மகான்/சித்தர்/யோகி பெயர் தெரியாத ஒருவர்.பிரம்மச்சாரியான அவர் திடீரென்று ஒரு நாள் துறவு பூண்டு காணாமல் போனார்.ஏன்? தான் இருக்கும் இடம் மக்கள் அறிந்தால் தன்னை வைத்து பிசினஸ் செய்வார்கள் என்றுதான்.

ஆனால் திடீரென்று தோன்றுவார் சாலையில் பல்லாவரம் மலைக்கருகில்.புன்னகைத்தவாறே யாரையும் சட்டை செய்யாமல் நடப்பார்.”அருள் வாக்கிற்காக” மக்கள் துரத்துவார்கள்.மேலே கை காட்டுவார்.அவ்வளவுதான்.

சில வருடங்கள் கழித்து அவரின் உடல் தாம்பரம்/சிட்லபாக்கம் அருகே காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டது. இறந்துபோய் 4-5 நாள் ஆகியும் அழுகாமல் இருந்தது. ஆச்சரியம்!

ஒரு வேளை ஸ்பிலிட் ஏசியில் இருந்திருந்தார் அழுகி இருக்குமோ?

 இப்படி “அறியாமை”யில் முழுகிக் கிடக்கும் சாமியார்களை மக்கள்தான் சரியான பாதைக்கு அழைத்துச்செல்ல வேண்டும்.


Thursday, May 17, 2012

ஏன் கேட்கிறது? ஏன் வாட்டுது? ஆனால் அதுவும்...


இளையராஜாவின் இசை மொழி ஆத்மார்த்தமானது.ஆழமாக மனதை உழுவுபவை.நினைவுகளில் அலையடித்துக்கொண்டே இருக்கும்.

இப்படியாக என்னை  உணர்வுபூர்வமாக உலுக்கி எடுத்தப்பாடல் “என்னுள்ளில் எங்கோ ஏங்கும் கீதம்”  படம்: ரோசாப்பூ ரவிக்கைக்காரி -1979.பாடியவர்: வாணிஜெயராம.பாடல்: கங்கை அமரன் டைரக்டர்: தேவராஜ் மோகன.

பாடலைக் காட்சியாக்கியவரையும் சற்று உலுக்கத்தான் செய்திருக்கிறது.பாடலை உள்வாங்கிக்கொண்டு காட்சிப்படுத்தப்பட்ட ராஜாவின் பாடல்கள் வெகு வெகு வெகு சொற்பம். தீபாவின் கொழுகொழு வளர்த்தியை ஆபாசப்படுத்தாமல் தவிர்க்கப்பட்டிருக்கிறது.பாடலின் ஆன்மா காட்சியில் புகுத்தப்பட்டிருக்கிறது.

சாதாரண கிராமத்து பெண்ணின் மோகத்தை சலனத்தை மோட்டர்பைக் பயணத்தில்  இலக்கிய தரத்திற்கு கொண்டு போய் இருக்கிறார். 




பாடல் காட்சி: 
திருமணமான கிராமத்துப் பெண் வேற ஒரு ஆணுடன் (அந்த ஊர் மைனர்)”என் உள்ளில் ஏதோ ஏங்கும் கீதம் ஏன் கேட்கிறது....ஏன் வாட்டுது” என்று சலனித்தப்படி “ஆனால் அதுவும் ஆனந்தம்" என்று ஆனந்தத்தில் மிதந்தவாறே வெறிச்சோடிய  கிராம இயற்கை சூழ்நிலையில் பைக்கில் பயணித்து பாடலின் முடிவில் அப்பாவித்தனமாக  தன்னை இழக்கிறாள்.

இருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்த இசையின் அடி நாதம் இதில் வரும் இரு கதாபாத்திரங்கள் பயணம் செய்தபடியே மெளனமாக பேசும் மொழி.இளையராஜா சிலுப்பி சிலுப்பி உணர்ச்சிகளை  எடுத்து  மொழிந்துள்ளார்.

பாடலும் காட்சிக்கு ஏற்றவாரு புனையப்பட்டுள்ளது.இசையுடன் இணைந்து மொழியை பேசுகிறது. காட்சியும் ஒன்றி போகிறது.



பாடல்  இதமான  தபலா தாளத்துடன்   பைக்கில் இருவருடன்  பயணிக்கிறது. தாளம் பயணிக்கும் உணர்வைத் தருகிறது.எதையோ நோக்கி வெறிச்சோடிய  மத்தியான வேளையில் புரிந்தும் புரியாமுலும் ஒரு பயணம்.தீபா "நாட்டுப்புறத்து” மிட்டாய் கலர் உடையுடன்  (சிவச்சந்திரனும் அவ்வாறே இம்மி பிசாகமல்) பில்லியனில் தள்ளியே ஒரு மாதிரி ஒட்டாமல்  பயணிக்கிறார். பிறகு அணைத்துக்கொள்ளும்போது (1.20 -1.33 )சாரங்கி ஓலமிடுகிறது.ஏதோ ஒரு காம வலி மேல் பூச்சாக ஓடுவதை உணரமுடிகிறது.

அடுத்து 2.50 - 3.15 காட்சியும் இசையின் மொழியும் ஒன்றை ஒன்று போட்டி போடுகிறது.விட்டு விட்டு ஒளிரும் மர நிழல்களின் ஊடே பயணிக்கும் பைக்கும் பயணிப்பவர்களின் உடல் மொழியும் பின்னணியில் அமானுஷ்யமான இசை மொழியும் உயிர் துடிப்பானது.சற்று திகிலாகவும் இருக்கிறது.

மேற்சொன்ன மொழி தமிழ் திரை இசைக்குப்புதிது.

இப்படி போய்க்கொண்டிருக்கும் இசையின் மொழி........

3.16 -3.30ல் அமானுஷ்ய இசை மொழி சகஜமாகி சிதார்-வயலின் -சிதார்-வயலின் -சிதார்-வயலின் மாறி மாறி  பின்னிப் பிணைந்து குழைந்து வர காட்சியில்  பெயர் தெரியாத  மணமில்லாத பூத்திருக்கும் காட்டுச்செடிகளிடையே ரோசாப்பூ ரவிக்கைக்காரி நடந்துவருவது கவிதை.

ஒளிப்பதிவாளருக்குப் பாராட்டுக்கள்.இந்தப் பாடல் “மதுவந்தி” என்ற ராகத்தில் புனையப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.வாணிஜெயராம் உணர்ச்சிகளைக் குழைத்துப்பாடி உள்ளார்.

”மஞ்சளை பூசிய மேகங்களே” வரிகள் வரும்போது  உடனே  காட்சி மஞ்சள் ஆவதுதான்  ரொம்ப  ”லோக்கல்”.அடுத்து முதலில் வரும் சேவல்-கோழி  தவிர்த்திருக்கலாம்.பாலச்சந்தர் பட சிம்பாலிக் காட்சியாக சற்று அமெச்சூராக இருக்கிறது.

32 வருடங்களுக்கு முன்  குட்டி ரேடியோவில் விரும்பிக் கேட்ட பல நேயர்களுடன் நானும் ஒரு நேயர்.அதுவும் இரவு நேரத்தில் தனிமையில கேட்டது. பிறகு  பாடலின் இசைமொழி ஏற்படுத்திய தாக்கம்  எதையோ யாரையோ தரிசித்தது போல ஒரு உணர்வு.ஒரு ஏக்க ஒரு தொலைந்துபோன உணர்வு.

முதல் ஐந்து வருடங்களில்(1979-84)  வயது காராணமாய் தாக்கிய பாடலின் இசைமொழி தெரியாமல்  ”ரொம்ப  சாஃப்ட் மெலடி” என்றுதான் மனதிற்குள் நினைத்துக்கொள்வேன்.பின்னாளில் தெரியவந்தது இதன் விஸ்வரூபம்.


டெயில் பீஸ்: 
இப்போது பல வித இசைத் தளங்களை கடந்து வந்துள்ளோம்.அதில் ராஜாவின் இசையிலேயே பல வித கட்டங்களை கடந்தும் வந்தாயிற்று.யோசித்துப் பாருங்கள் 31 வருடங்களுக்கு முன் மேற்கண்ட பாடலின் இசை என்ன மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும் என்று.


Wednesday, April 4, 2012

மெல்லிசை ஹிம்சைகள்/கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்

மெல்லிசைக் கச்சேரிகளுக்கு நான் செல்லுவது இல்லை.திறந்த அல்லது மூடிய (Closed hall)அரங்கு எல்லா கச்சேரிகளும் இதில் அடக்கம். முக்கியமாக மூடிய சின்ன கல்யாண மண்டபங்களில் ரிசப்ஷனில் வைக்கப்படும் கச்சேரிகள்.அதுவும் லோக்கல் இசைக் குழுக்கள் இசைக்கும் இசை?பட்டீஸ் டிட்டீஸ் என்று ட்ரம்ஸ்ஸூம் கொய்ங் என்ற கீபோர்ட்டு ஒலியும்.இதில் பாடுபவர்கள் அமுங்கிப்போய் ஈன ஸ்வரத்தில் கேட்கும்.

முக்கிய காரணம் இசை இரைச்சல் ஹிம்சை.ஒலி அமைப்புகள் சரியாக இல்லாமை.அதற்கேற்றார் போல் மண்டபங்கள் வடிவமைப்பதில்லை.மேடையில் உட்காரும் ஆர்கெஸ்ட்ரா குழு ஷேர் ஆட்டோவில் உட்காருவது மாதிரி நெருக்கி அடித்து உட்கார்ந்து இசைப்பது.மறுஉருவாக்கத்தில் சுத்தமாக லட்சணம் இல்லாமல் இருப்பது.

அதன் நடுவில் பாடகி-பாடகர்கள்(பின்னணியில் ஓவர் சவுண்டு)பாடுவது சோகம்.சத்தியமாக ரசித்துப் பாடுவது மாதிரி தெரியவில்லை.இசைக் குழுக்களுக்கும் வேறு வழியில்லை.வயிற்றுப் பிழைப்பு.

இப்படி கேட்பது கண்டிப்பாக ஆரோக்கியமும் இல்லை.

அடுத்து அசல் அசல்தான் அது பழசோ புதுசோ நாம் ரசித்து அனுபவித்து வாழ்ந்த பாடல்களை அதன் ஒரிஜனல் இசைக்கருவிகளுடன் இசைக்கப்படாமல் கேட்டால் என்னவோ மாதிரி இருக்கிறது.அதுவும் ராஜாவின் பாடல்கள் சத்தியமாக அவராலேயே மீண்டும் உருவாக்க முடியாது.

ஏதோ வைக்கவேண்டுமே என்று திருமணங்களில் இசைக்கச்சேரி வைக்கப்படுகிறது.இதில் மாப்பிள்ளை-பெண் வீட்டுக்காரர்களின் பந்தாதான் இசை மேல் காதல் இல்லை.

தவிர்க்க முடியாவிட்டால் வெளியே வெகு தூரத்தில் நின்றுகொள்வேன்.இரைச்சல் குறைந்து ஒரளவுக்கு ரசிக்கலாம்.

எப்படி இருக்க வேண்டும்?பின்னணியில் ரம்யமாக மெல்லிசை ”மெலிதாக”இசைத்தபடி இருக்க பார்வையாளர்கள் கல்யாண குஷி காட்சிகளை ரசித்தவாறு இருக்க வேண்டும்.ரசித்தவாறே உறவுகளிடம் உரையாடலாம்.

வீணை வித்தகி ரேவதி கிருஷ்ணா
 

பாடல்: காலையும் நீயே மாலையும் நீயே படம்: தேன் நிலவு

இதே வீணையில் இவர் "மன்மதா ராசா” பாட்டும் வாசித்துள்ளார்.”உன் சமயலறையில்” பாட்டும் அருமை.

நான் விரும்பும் உண்மையான மெல்லிசை “ மெலிதான இசை”. சினிமா அல்லது கர்நாடக கீர்த்தனைகளை ஒற்றை இசைக் கருவிகளில் (புல்லாங்குழல்/வயலின்/சிந்த்,வீணை) வாசிப்பது.முக்கியமாக பின்னணியில் தாளக் கருவிகள் தபேலா,டோலக்,மிருதங்கம்.ஓவர் சவுண்டு இல்லாமல் மற்ற இசைக் கருவிகள் இருக்கலாம்.

இதுதான் மூடிய கல்யாண மண்டபங்களுக்குத் தோதுபட்டு வரும்.இல்லாவிட்டால் சத்தம்தான்.மார்பு கூடு அதிரும்.இல்லாவிட்டால் 1965க்கு முன் உள்ள பாடல்களை இசைக்கலாம். இசைக் கருவிகள் குறைவு.

சமீபத்தில் கலந்துக்கொண்ட திருமணத்தில் மெல்லிசைக் கச்சேரி.ஆச்சர்யம் பிளஸ் அதிர்ச்சி.(திருமண பத்திரிக்கையில் இதைப் பற்றி இல்லை) காரணம் இதை ஒட்டிய (annexe) இன்னொரு மண்டபம் தியான மண்டபம் கம் கோவில்.
அதில் பக்தி பஜனை நடக்கிறது.இதில் மெல்லிசை.சபாஷ் சரியான போட்டி.ஸ்டார்ட் மியூசிக்!

எஸ்கேப்...! எங்க? அவுட் சைட் டிஸ்டென்ஸ் ஸ்டாண்டிங்தான்.

கேர்ள் பிரெண்ட் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ்


தாம்பரம் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் தன்னுடைய 75 வருடத்தைக் கொண்டாட இருக்கிறது.இப்போது பொறியியல் கல்லூரிகளுக்கு மவுசு கூடி கலைக் கல்லூரிகள் மங்கிவிட்டன.அப்போது கலைக் கல்லூரிகளிலேயே இது தனித்தன்மை கொண்டது.

ஒன்று கோ-எஜூகேஷன் சிஸ்டம்.இரண்டு இதன் இயற்கை சூழல்.


இப்போது தெரியாது ஆனால் அதன் அன்றைய தோற்றத்தை நினைக்கும்போது சிலிர்க்கிறது.இருபுறமும் மரங்கள் அடர்ந்து பொதிந்த இயற்கையின் ஊடே கல்லூரி வளாகம்.... சர்வகலாசாலை?உள்ளே நுழைந்து ஒரு முறை பார்த்து வருவதே பெரிய பாக்கியம்.ஆறு மாதம் (???)படித்த அனுபவம் உண்டு.ஈஸ்ட் இண்டியா காலத்தில் கட்டப்பட்ட கல்லூரி.

ஒரே மாதிரி தோற்றத்தில் சேலையூர்,செயிண்ட் தாமஸ், பிஷப் ஹீபர் என்று மூன்று ஹாஸ்டல்கள்.கண்ணைக் கட்டி விட்டால் அடையாளம் காண்பது கஷ்டம்.

மாணவ மாணவிகள் ஜோடி ஜோடியாக சுதந்திரமாக உள்ளே வளைய வருவார்கள்.கண்டிப்பு கிடையாது.படிப்பதை விட கேர்ள்பிரண்ட்ஸ் கிடைக்கும் என்று சேர்வதில் நிறைய பையன்கள் துடிப்பார்கள்.அப்போது கேர்ள் பிரெண்ட்ஸ் இப்போது “பிகர உசார் பண்ணுவது”.

கோ எஜூகேஷன் என்பதால் பெற்றோர்கள் சேர்ப்பதற்கு தயங்குவார்கள்.  இங்கு படித்துப் பட்டம் பெற்ற மிடில்கிளாஸ் பெண்களுக்கு மாப்பிள்ளை சற்று தயக்கத்துடன்தான் கிடைப்பார்கள்.

பாவாடை தாவணி(half saree) பெண்களுடன் மார்டன் உடை பெண்களும் சேர்ந்து படித்த அபூர்வ காலேஜ். ஜீன்ஸ் அணிந்த பெண்களை முதன் முதலில் பார்த்தது இங்குதான்.வெளி நாட்டு மாணவி/மாணவர்கள் இங்கு பார்க்கலாம். புத்த பிட்சுக்கள் நிறைய பார்த்திருக்கிறேன்.


கலைக் கல்லூரிதான் ஆனால் இதில் படித்து பட்டம் பெற்ற ஜாம்பவான்கள் பலர் பெரிய லெவலில் இருக்கிறார்கள்.சிபிஎம் கட்சி பிரகாஷ் கரத் முன்னாள் மாணவர்.மறைமலையடிகள் மற்றும் பரிதிமாற்கலைஞர் இருவரும் ஆசிரியர்களாக பணியாற்றினார்கள்.

இங்கு நிதி நிர்வாகம் செய்பவரை “Bursar" என்பார்கள். இது bursa(purse) என்கிற லத்தீன் சொல்லின் மூலம். முதன் முதலில் காண்டீன் என்பதை கேப்டீரியா என்றுதான்(cafeteria) இங்கு மாணவர்கள் ஸ்டைலாக சொல்வார்கள்.

Tuesday, March 20, 2012

DTS கர்ணா..நீயும் நானுமா!என்டிஆர் டப்பிங் வாய்ஸ்

அப்போது கர்ணன்,வீ.பா.கட்டபொம்மன்,ஆ.ஒருவன்,காதலிக்க நேரமில்லை, இத்யாதிகள் எல்லாம் ஒரு cult படம் ஆக இருந்தது.ஒரிஜினல் ரீலீஸ் முடிந்து பல மாதங்கள் கழித்து ‘புத்தம் புதிய காப்பி” “கண்டிப்பாக ஒரு வாரம் மட்டும்” “கடைசி இரண்டு நாள்” ” இன்றே கடைசி” “வைகுண்ட ஏகாதேசியில் இத்துடன்” ”ஏதோவை முன்னிட்டு” என்று தியேட்டர்களில் ரீரிலிஸ் செய்யப்படும். ஒவ்வொரு ரீலிசுக்கு கூட்டம் முண்டியடிக்கும்.

முக்கியமாக இளைஞர்கள் கூட்டம்.

பழைய கர்ணன்
முதல் காரணம் சிம்ம குரலோன் சிவாஜி!இரண்டாவது இதிகாசம் அதுவும் கர்ணனைப் பற்றி. அடுத்து அப்போது ஸ்பெஷல் எபக்ட்ஸ் கம்புயூட்ட்டர் கிராபிக்ஸ் இல்லாமல் சிரத்தையோடு எடுத்த பிரம்மாண்ட படம்.

விஸ்வநாதன் ராமமூர்த்தியின் அட்டகாசமான உயிர்துடிப்பான இசை மற்றும் பாடல்கள்.

பலவித சரித்திர புராண இதிகாச கதாபாத்திரங்களை சிவாஜியின் பிம்பத்தில்தான் ஒரு தலைமுறை உருவகபடுத்தி உள்ளோம்.கர்ணன் பெயரை உச்சரிக்கும்போதே சிவாஜியின் கம்பிரமான உருவம்தான் கண்முன் தோன்றும்.” இரவும் நிலவும்” பாட்டின் ஒரு இடத்தில் சிவாஜியின் நடைக்கு விசில் பறக்கும்.

இந்தப் பாட்டின் சில வரிகள் இலக்கிய நயத்தோடு இருந்தாலும் டபுள் மீனிங்கும் இருக்கு என்று அப்போதைய யூத்துகள் கிசுகிசுப்பார்கள்.(சுபாங்கி கர்ணன் மனைவி)

சுபாங்கி: மல்லிகைப் பஞ்சணை விரிக்கட்டுமே
கர்ணன்:  மங்கையின் தாமரை சிரிக்கட்டுமே.... அங்கு
சுபாங்கி: இல்லையென்னாமல் கொடுக்கட்டுமே
கர்ணன்: நெஞ்சில் இருக்கின்றவரையில் எடுக்கட்டுமே

இப்போது இந்த ஏற்கனவே கம்பீரக் கர்ணனை சினிமாஸ்கோப்பில் உப்ப வைத்து(blow up)  DTSல் இசையை செலுத்தி மெருகேத்தி ரிலீஸ் செய்து இருக்கிறார்கள்.சிவாஜி குடும்பத்தார்.புதிய தலைமுறை பார்க்கவேண்டும் என்ற நோக்கத்தில்.

DTS  Karnan
பல முறை டிவி சேனல்களில் ஓடிற்று.அப்போது புதிய தலைமுறை பார்த்ததா?காலம் மாறிவிட்டது.ரசனைகளும் மாறிவிட்டது.நேரம்?பொறுமை?????

எனக்கே கூட இந்த டிடிஎஸ் கர்ணனைப் போய் பார்ப்பதைவிட சின்ன வயதில் பார்த்து அந்த நினைவில் ஓடும் கர்ணன்தான் பிடித்திருக்கிறது.

இந்தக் கர்ணன் வெளி வந்ததும்தான் ஒரு விஷயம் நேற்று எனக்குத் தெரிய வந்தது.அது என் டிஆர் படத்தில் சொந்தக்குரல் கிடையாது.டப்பிங் குரல் என்று.சின்னவயசில் அவர்(கிருஷ்ணர் )தமிழ் குரலாக உள்வாங்கி நேற்றுவரை அதே நினைப்பு.

அவருக்கு டப்பிங் பேசியவர் கே.வி.சினுவாசன் என்பவர்.போட்டோவில் ஒய்ஜி மகேந்திரனுடன் இருக்கும் முதியவர்(92).சிவாஜி கணேசனை ஒரு டிராமா கம்பெனிக்கு சிபாரிசு செய்தவர். சிவாஜியால் அய்யர் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்.

இவரின் சுவராசியமான பேட்டி பார்க்கவேண்டிய ஒன்று.

NTR Voice - K V Srinivasan Exclusive interview