Monday, June 1, 2015

மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொள்ளுதல்




முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளுதல்


அது ஒரு கலை
அந்த முகம் அழகு
வெளிப்படும் உடல்மொழி
நடனத்திற்கோ இசைக்கோ ஒப்பானது
உயிரோட்டமான குறும்படம்
பெண்களுக்கான வரம்

இவரும் தூக்கி வைத்துக்கொண்டுள்ளார்

கோபத்தில் ரப்பர்பேண்டை அவிழ்த்து
முடியை முன் தள்ளிவிட்டார்
விளக்கை அணைத்து
ஜன்னல் ஓரம் அமர்ந்துவிட்டார்
நிலைகுத்திய பார்வை
கால் அளவு தூக்கிய 
திரைச்சீலையின் ஊடேதான்
வெளி உலகம் என பிடிவாதத்தில்
விரல்களை முட்டுக்கொடுத்துள்ளார்
இவை எல்லாம் கவித்துவமான
பிளாக் அண்ட் வொயிட்டில்
சித்திரமாக தீட்டி உள்ளார்

இவ்வளவு இருந்தும்
இவர் வித்தியாசமானவர்
இவர் மேலும் இதை அழகுப்படுத்தி இருக்கிறார்
தூக்கி வைத்துக்கொண்ட மாதிரியும் தெரிகிறது
தூக்கி வைத்துக்கொள்ளாத மாதிரியும் தெரிகிறது