மேஸ்ட்ரோவைப் பார்ப்பதற்கு முன் சற்று பின்னோக்கி முப்பத்திமூன்று வருடம்.......
கோடையில் மழை வரும் ......எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ...
எங்கும் நிறைந்த இயற்கையில் என்ன சுகமோ |
சராசரி இசை ரசிகனாக அப்போதைய இசையமைப்பாளர்களான எம்எஸ்வி கே.வி.மகாதேவன்,வி.குமார்,சங்கர்கணேஷ்,கோவர்தன்,விஜயபாஸ்கர்,ஷியாம் ஜி.கே.வெங்கடேஷ் மற்றும் பலர் இசைகளை மேலோட்டமாக கேட்டுக்கொண்டிருந்தவன்.பிறகு வந்த இளையராஜாவையும் மேலோட்டமாக கேட்க ஆரம்பித்து பிறகு உள்நோக்க ஆரம்பிக்க அவரின் பாடல்களின் இனிமையும் இடையிசையும் ஆச்சரியமும் பிரமிப்பும் ஏற்படுத்தியது.
கங்கையில் என் மனம் பங்கு வைக்க |
முக்கியமாக பழைய நெடிபோய் ஒரு லேட்டஸ்ட் ஸ்டைல் இருந்தது.முக்கியமான பாட்டுக்கள் ”பனிவிழும் மலர்வனம்”."எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள்”.வழக்கமான கேட்ட பழகிப்புளித்துப்போன இசைக்கருவிகளின் நாதங்கள் எல்லாம் புதுசாக “உருவாக்கப்பட்டிருந்தது”.
இசை அடுத்தக்கட்டத்திற்கு நகர ஆரம்பிக்கிறது என்று தெரியாமலேயே பல வருடம கேட்டுக்கொண்டிருந்தேன்.(இவர் ஆர்.டி.பர்மன் மற்றும் சலீல் செளத்ரியின் தாக்கத்தில் இருக்கிறார் என்று சொல்வார்கள் எதிர்பார்ளர்கள்)
ஆனால் இரண்டு பேரையும் தாண்டி இருக்கிறார் என்று அடுத்தக் கட்ட புரிதலில் தெரிந்தது
எதிலேயும் பெண்மை சுகம் காணவில்லை... |
ரொம்ப முக்கியமாக பாடல்களில் மையமாக இருக்கும் ஆத்மா படுத்தி எடுத்தது.அடுத்து விதவிதமான சம்பிரதாயத்தை உடைத்த ஹம்மிங்குகள் (காற்றினிலே வரும் கீதம்) என்னை ரொம்பவும் வசீகரித்தது.இவை மேல் இனம் புரியாத நெருக்கம் ஏற்பட்டு கேட்பது போய் சில பாடல்களோடு வாழத்தொடங்கினேன்.
“காற்றில் எந்தன் கீதம்” (ஜானி) இடையிசைகள் மெலடி மிகவும் போட்டுத் தாக்கியது.இப்படியெல்லாம் ஆத்மாவை குழைத்து இசைக்கமுடியுமா என்று இன்றும் எனக்கு பிரமிப்பு ஏற்படுகிறது.
இப்படியாக தீவிர ரசிகனானேன்.இவை எல்லாம் அந்தக் கால சோனி,பயனிர் கேசட்டில் டூ இன் ஒன் ஸ்டிரியோவில் கேட்கப்பட்ட பாடல்கள்.
நீங்காத நெஞ்சின் அலை ஓய்ந்தால் போதும் |
தெரு நண்பர்கள் சேட்(அனந்தகிருஷ்ணன்),சுந்தரராஜன்,அன்வர்கான்,கிருஷ்ணன் கூடும்போதெல்லாம் பாடல்களை ”மயக்கமான” நிலையில் கேட்டு முழுகித் திளைத்தோம்.பிறகு அதே அலைவரிசையில் வந்த அலுவலக நண்பர்கள் பாலாஜி,ஸ்ரீதர்,முருகானந்தம்,கணேசன் ”ரூம் போட்டு” மயக்கமாகி பாடல்களை விடிய விடிய பிரித்து மேய்ந்தோம்.
(1983)ஸ்ரீதர்(கையில் பை) பாலாஜி(நடுவில்) நான் பாலாஜிக்கு இடது |
இசையமைப்பில் ஒரு புத்திசாலித்தனம் இருந்தது.இது மாதிரி உயர்தர இசை கேட்பதில் எங்களுக்கு ஒர் பெருமிதம் இருந்தது.இசை நாதங்கள் சேரும்போது அசட்டுத்தனம் ஒட்டு இல்லாமல் வழுக்கிக்கொண்டுபோவது ஒரு பெரிய பிரமிப்பு. ஹிந்திப்பாடல்களை ஓரம் கட்டினோம்.
அடுத்து இதுவரை கவனிக்கப்படாத படத்தின் பின்னணி இசை இவர் மூலம் ரசிகர்கள் கவனத்திற்கு வந்தது.இதற்கும் பிரமிப்பும் ஆச்சரியமும் ஏற்பட்டது.சிவப்பு ரோஜாக்கள் ஒரு உதாரணம்.
Nothing..... nothing.... |
ஓவ்வொரு பாடலும் ஒவ்வொரு பரவசநிலையைக்கொடுத்தது.எல்லாம் பாடல்களும் Farm fresh.சந்தித்தவுடன் “மொட்ட லேட்டஸ்ட் பாட்ட கேட்டய” என்றுதான் ஆரம்பிப்போம்.”Mind blowing" " Absolutely Divine" "Absolutely bliss" "Stunning" "What a soulful song" "Out of the world" என்ற சொற்கள் அடிக்கடி உபயோகப்படுத்தியது இவரின் பாடல்களுத்தான் அதிகம்.
முன்னோடிகளுக்கும் இவருக்கும் வித்தியாசம் தெரிந்தது.இடையிசைகள் மிகவும் மென்மைப்படுத்தப்பட்டிருந்தது. இனிமைப்படுத்தப்பட்டிருந்தது.பல அடுக்குகள் இருந்தது.அடுக்குகள் பலவித காம்பினேஷ்ன்களில் தொடுக்கப்பட்டிருந்தது.நாதங்களின் உணர்ச்சிகள் மொழிகள் வேறுபட்டது. மனதிற்கு நெருக்கமானது.புதுவித முயற்சிகள் தெரிந்தது.
நாங்கள் கேசட்டில் போட்டு தேய்த்து தேய்த்துக் கதறிய பாடல்கள்:
1.ஒரு குங்கும செங்கமலம் 2.சிறிய பறவை 3.சந்தக் கவிகள் பாடிடும் 4.காற்றில் எந்தன் கீதம் 5.தாமரைக்கொடி 6.பூவே செம்பூவே 7.பனிவிழும் மலர் வனம் 8.பள்ளியறைக்குள் 9.எங்கெங்கோ செல்லும் 10.அந்தரங்கம் யாவுமே11.புத்தம்புது காலை 12.அந்திமழைப்பொழிகிறது13.தேன் பூவே பூ 14.தெய்வீக ராகம்(heavenly humming)15.என்றென்றும் ஆனந்தமே
பாடல்களை கவனித்தால் ஒன்று புரியும்.கிராமிய மெட்டு பாட்டுக்கள் குறைவு.காரணம் நகரம் சார்ந்து வளர்ந்த இளைஞர்கள் நாங்கள்.அடுத்த ரசிப்பு மேற்பாடல்களில் சிக்கலான இசைக்கோர்ப்பு. எல்லாம் புத்தம்புதுசு.
எல்லாம் 1979-1988 இடைப்பட்ட காலத்தில்
பாடல்களில் லயித்துப்போய் எப்படி இவரால இப்படி மாஜிக்காக பாடல்களை கம்போஸ் செய்ய முடிகிறது என்று மண்டை காய்ந்து இவரை மறைமுகமாக (அப்போது கெடிபிடி ஜாஸ்தி)சந்திக்க முடிவெடுத்து (1988) பிரசாத் ஸ்டியோவிற்குப் போனோம்.
கதவருகில் ஒளிந்தவாறு இடுக்கு வழியாக பார்த்தோம். திருப்பதி பெருமாள் தரிசனம் மாதிரி சில வினாடிகளே கிடைத்து.அன்றைய பாடல் கம்போசிங் “ மலையோரம் மயிலே”ஒருவர் வாழும் ஆலயம்.
அதற்கு பிறகு நண்பர்கள் பிரிந்தோம்.சில பேர் தொடர்பில் இருந்தோம். பலபேர் தொடர்பில் இல்லை.பிரிந்தாலும் அவரவர்கள் ராஜாவின் பாடல்களோடு தொடர்பில் இருந்தார்கள்.ராஜாவை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் அடிமனதில் இருந்தாலும் முயற்சி எதுவும் எடுக்காமல் “அவரைப் போய் ஏன் டிஸ்டர்ப் பண்ணனும்” என்ற எண்ணமும் அடுத்து அவர் ரசிகர்களை அவ்வளவாக சந்திப்பதில்லை என்றும் கேள்வி.
கடைசி ஆறு வருட இடைவெளியில் (2008-2014) இணையதளத்தில் இளையராஜாவின் இசைப் பற்றிய அறிவு வேறு ஒரு தளத்திற்கு விரிந்தது.இணையதள ரசிகர்கள் அவரை அடிக்கடி சந்திப்பதும் போட்டோ எடுத்துக்கொள்வதும் நானும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டியது. நிறைய சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டியதும் தவிர்க்கமுடியாத காரணங்களால்(அம்மாவின் உடல்நிலை) போக முடியவில்லை.
என் அபார்மெண்டில் குடியிருக்கும் சினிமா மற்றும் கமல் பிஆர் ஓ நிகில் முருகனிடம் என் ஆர்வத்தைச் சொல்ல “ சொல்லுங்க ... நான் அழைச்சுட்டுப்போறேன் ...” என்று ஒரு நாள் சொன்னார்.அதற்குப்பிறகு பாலோ அப் செய்யவில்லை.
பிளாஷ் பேக் ஓவர்........
இருபத்தி மூன்று வருடம் கழித்து என்னைச் சந்தித்தார் பழைய அலுவலக நண்பர் முருகானந்தம்.அவர் கோயம்புத்தூர்.மீண்டும் ராஜா பாடல்களைப் பற்றி அலசல்.”ரெடியா இரு... அவரைப்போய் பார்க்கலாம்” மண்டைகாயும் வெய்யிலில் என் வீட்டிற்கு வந்து ஒரு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். ‘எப்படி அப்பாயிமெண்ட் இல்லாமல்....” இழுத்தேன்.’கிளம்புப்பா” என்றார்
முருகானந்தம் (குறும்பட அப்பா கேரக்டர் நடிகர்?) |
பிரசாத் ஸ்டியோ:
வடபழனி எப்படி இருந்தது எப்படியோ மாறிவிட்டது.பச்சைப்போய் கல்லும் சிமெண்டும் பெயிண்டும் கான்கிரீட் காடுகள்.ஸ்டியோ இருபத்தி எட்டு வருடத்திற்கு முன் பார்த்தது.மாற்றங்கள் தெரிந்தது.வாசலில் கார்களும் ஸ்கூட்டர்களும் பைக்குகளும் மர நிழலில்.
ரெக்கார்டிங் நடப்பதற்கான அறிகுறிகள் தெரிந்ததால் ராஜா இருப்பார் என்ற நம்பிக்கை மனதில் துளிர்விட்டது.வாசல் ரிசப்ஷனில் கார்த்திக்ராஜா புன்னகையுடன் நண்பரை வரவேற்றார்.”இருக்கிறார்” என்றார்.எனக்கு உடம்பில் ஒரு குறுகுறுப்பு.பக்கத்தில் இருந்த ஆபிசில் நண்பர் தகவலை தெரிவித்துவிட்டு உள்ளே போனோம்.
ராஜாவின் இசைக்குழு வல்லுனர்கள் தம்தம் வாத்தியங்களுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள்.இதை பல தடவைப் போட்டோவில் பார்த்து பரவசப்பட்டிருக்கிறேன்.இன்று பரபரப்பு இல்லை.லன்ச் பிரேக் மாதிரி மெலிதான அலை அடித்துக்கொண்டிருக்கும் இசை ஆற்றைக் கடப்பது மாதிரி உள்ளுணர்வு.
அதையும் கடந்து அவரின் தனி அறைக்குச்செல்லும் வழியில்.....
நான்: “ போட்டோ எடுக்கனும்... ரெடியா செல்ல வச்சுக்கோ”
நண்பர்: “ இன்னொரு நாள் எடுக்கலாம்...முதல்ல அவர பாரு”
”இன்னொரு நாளா” எனக்கு உள்ளுக்குள் “பக்” என்றது.சற்று எரிச்சல் ஏற்பட்டது.எனக்கு எப்போதுமே “அன்றே செய்... நன்றே செய்” பாலிசி.அதுவும் மேஸ்ட்ரோவை பார்ப்பது என்பது.நாளை என்பது நமக்கு தெரியாத ஒன்று.
இன்றேதான் எனது மனதில் முடிவு செய்தேன்.நண்பரிடம் எதுவும் சொல்லவில்லை.
“வாங்க ....செளக்கியமா....” நண்பரைப் புன்னகையுடன் வரவேற்றார்.
பரவசத்தில் புன்னகைத்துவிட்டு அவர் காலில் விழுந்தேன்.எழுந்தப்போது மார்பில் கையை வைத்தப்படி ஆசிர்வாத போசில் இருந்தார்.
பேசுவதற்கு ஒன்றும் இல்ல்லை.எழுந்து...” சார் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?” மேஸ்ட்ரோவிடம் கேட்டேன். நண்பர் தயங்கியபடி இருக்க மேஸ்ட்ரோ “ எடுங்க முருகானந்தம்” என்று எனக்குஆதரவாக சொல்ல புல்லரித்தேன். பக்கத்தில் நிற்க நண்பர் போட்டோ எடுத்தார்.
முடிந்தவுடன் கண்களாலேயே "டைம் முடிந்தது" என்று சொல்லி மாரில் கைவைத்தப்படி விடைகொடுத்தார். புன்னகையுடன் விடைப்பெற்றோம்.
பரவசத்துடன் ரூமை விட்டு வெளிவந்தோம்
முடிந்தவுடன் கண்களாலேயே "டைம் முடிந்தது" என்று சொல்லி மாரில் கைவைத்தப்படி விடைகொடுத்தார். புன்னகையுடன் விடைப்பெற்றோம்.
பரவசத்துடன் ரூமை விட்டு வெளிவந்தோம்
ஜன்மாந்திர சாபம் தீர்ந்தது.ரொம்ப லேட்டாக தீர்ந்தது.புராணக்கதைகளில் சாபம் தீர்ந்தவுடன் ஒரு வசனம் வரும்.அதுமாதிரி “ பக்தா..... இன்றுமுதல் உன்னுடைய ராஜா ரசிகன் என்ற வட்டம் முழுமைப் பெறுகிறது.”
டிஸ்கி:
”போட்டோவா ... இன்னொரு நாள் எடுத்துக்கொள்ளலாம்” எவ்வளவு பெரிய வன்முறையான வார்த்தை