தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்தும் 24/7 கவலைகள்
கடந்த பல வருடங்களாக எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களின் தற்கொலை அதிகமாவதாக ஒரு செய்தி படித்தேன்.இதில் அதிர்ச்சியான செய்தி ஒன்று “செல்போன்கள் இந்த நிலமையை இன்னும் மோசமாக்குகிறது” என்பதாகும்.
பல வருடங்களுக்கு முன்பு கடிதத் தொடர்பு மட்டும்தான் இருந்தது.அதன் மூலம்தான் குடும்ப சுமைகள் கஷ்டங்கள் தெரிய வரும் வீரர்களுக்கு.ஆனால் இப்போது செல்போன்கள் மூலம் அன்றாட குடும்ப பிரச்சனைகள் தெரிய வருகிறது.அதனால் அன்றாடம் மன அழுத்தம்,பயம் பிறகு தற்கொலை.
DO NOT USE CELLPHONE WHILE "LIVING" ALSO
குரல்கள் விடும் விஜய் ஆண்டனி
இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்திய தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் “ என் பாடல்களில் இடையிசையில் இசைக்கருவிகளின் ஒலியை விட ஆண்/பெண் குரலிசை நிறைய வரும் அதற்குக் காரணம் இசைக் கருவிகள் வைத்து இசையமைப்பது ரொம்ப காஸ்ட்லி சமாசாரம்.செலவு அதிகமாகும் அதனால் குரல்களைப் பயன்படுத்தி இசையை நிரப்புக்கிறேன்.”
”பாத்தாலே தெரியுது ரொம்ப பாதிக்கப்பட்டு இருக்கீங்க
நெறப்புங்க... விஜய் நெறப்புங்க...! பெட்ரோல்,டீசல் வெல ஏறுச்சுன்னா பால்,காய்கறி வெலதான் அதிகமாச்சுன்னா இசைக்கருவிகள் வெலயும் ஏறுது இசைக்கருவி வாசிக்கறவங்களும் கிடைக்க மாட்டேன்றாங்க”
ரஹ்மான் இசையிலும் நிறைய குரல் இசை வரும்??? கற்பனை வறட்சி? அல்லது டிரெண்ட்? விலைவாசி சத்தியமா கிடையாது.
பெப்பர் அண்ட் சால்டுடன் ஒரு ரோல்(சிவாஜி கணேசன்)
இவரின் 84வது பிறந்த தினத்தின்போது அவரைப் பற்றி நினைவுகள் அலையடித்தது.சிறு வயதில் அவரின் தீவிர ரசிகன்."எங்கே நிம்மதி” பாட்டின் நடிப்பைப் பற்றி பல நாட்கள் brain storm செய்து தூங்காமல் செய்திருக்கிறோம்.குரோம்பேட்டை தவப்புதல்வன் சிவாஜி ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறேன்.
இன்றும் மிகவும் ரசிப்பது அவரின் மிகை நடிப்பு இல்லாத டோப்பா தலை இல்லாத பிளாக் அண்ட் வொயிட் படங்கள்.கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,பலே பாண்டியா,அறிவாளி,சபாஷ் மீனா,புதையல்,ரங்கோன் ராதா,கலாட்டா கல்யாணம்,ஊட்டி வரை உறவு.அந்தக் கால பிளாக்வொயிட் படங்களில் ஒரு இன்னசென்ஸ் இருக்கும். செயற்கைத்தனங்கள் ரொம்ப கம்மி. அதுவே எனக்குப் பிடிக்கும்.
இவர் கிட்டத்தட்ட முந்நூறு படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.அதுவே இவருக்கு அழிவு காலம்.கிழ் உள்ள அவரின் சினிமா படங்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?பயப்படாதீர்கள்.டிவி சீரியல்கள் இல்லை.
இதெல்லாம் மத்தியான வேளையில் சேனல்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மாடிவீட்டு ஏழை,ஆனந்தக்கண்ணீர்,என் தமிழ் என் மக்கள்,துணை,பந்தம்,நீதிபதி,சுமங்கலி,நெஞ்சங்கள்,பாரம்பரியம்,இரு மேதைகள்,வம்சவிளக்கு,நீதியின் நிழல்,வெற்றிக்கு ஒருவன்,வா கண்ணா வா,சரித்திர நாயகன்,முத்துக்கள் மூன்று.80-90களில் வந்தப்படங்கள்.
இவர் ஒரு அற்புதமான நடிகர்.பாழாய் போன டைரக்டர்கள் இவரை மிகை நடிப்பு மற்றும் சூட் கோட் போட்ட 20 வயது இளைஞனாக மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் நடிக்க வைத்து கேலிக்கூத்தாகிவிட்டார்கள் கே.விஜயன்/யோகனந்த்/பாலாஜி போன்றவர்கள்.
கொடுமை என்னவென்றால் இவர் மட்டும்தான் மிகையாக இருப்பார்.சுற்றி நடிப்பவர்கள் இயல்பாக இருப்பார்கள்.
இவர் ஜல்லிக்கட்டு,முதல் மரியாதை ,தேவர் மகன் படங்களில் செய்த ரோல் மாதிரி வித்தியாசமாக அல்லது தன் பிராண்ட் இமேஜ்ஜை உடைத்து கெஸ்ட் ரோல்கள் 70வதின் இறுதிகளில் தொடங்கி இருக்கலாம்.எங்கேயோ போய் இருப்பார்.ரசிகர்களும் அடுத்த அடுத்தப்படிக்கு நகர்ந்திருப்பார்கள்.இதை அமிதாபச்சன் இப்போது கடைப்பிடிக்கிறார்.
மேல் உள்ள படத்தில் தோன்றுகிற மாதிரி பெப்பர் அண்ட் சால்டு தாடி,அதே உடை,தோற்றத்துடன் ஒரு ரோல் நடிக்க வேண்டும் என்று என்னுடைய கனவு நிறைவேறவில்லை.
வால்மார்ட் அண்ணாச்சிகளாக:
வால்மார்ட்டினால் பாதிக்கப்பட போவது கிர்ரான கடைகள் அதாவது சின்ன மளிகைச் சாமான் (பொட்டிக்கடைகள்)கள் என்பதுதான் முக்கியம்.விழித்துக்
கொள்வது கடமை.
பொட்டிக்கடைகளாக இருந்தாலும் அண்ணாச்சிகள் முதலில் இந்த பொட்டிக்கடை சிந்தனைகளில் இருந்து வெளியே வரவேண்டும்.ஒவ்வொரு நாளும் உலகம் பலவித மாற்றங்களை மேற்க்கொள்கிறது.ஒரு கார்பரேட் நிறுவனம் போல மார்க்கெட்டிங்(strategy) சிந்தனைகளை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.இவைகளை மறுஆக்கம் செய்யவேண்டும்.
ஆச்சா போச்சா காமராஜர் அண்ணாச்சிக் கால டெக்னிக்கெல்லாம் காலாவதி ஆகிவிட்டது.
இப்போது இருக்கும் தலைமுறை ஸ்டைல் ஆகிவிட்டது.வாங்கும் திறன்/முறை மாறிவிட்டது.கழுத்தை அறுக்கும் வியாபாரப்போட்டி.அண்ணாச்சி ஊர்காரப் பையன்கள் வேறு வேலைக்குப் போய்விட்டார்கள்.ஆட்கள் இல்லை.ஜார்கண்ட்,சட்டிஸ்கர்,ஒரிஸ்ஸா பான்பராக்அண்ணா(ஜி) பையன்கள்தான் கிடைக்கிறார்கள்.
எந்த வியாபாரத்திற்க்குமே முன்யோசனை/திட்டம்,தொலைநோக்குப்பார்வை,
பணம்,நிர்வாகத்திறன் மிகமிக அவசியம்.முதலில் இவர்கள் ஒன் மேன் ஷோவை விட வேண்டும்.ஒருவரே பல கஸ்டமர்களை அட்டெண்ட் செய்வது.அடுத்து பொட்டிக்கடையிலேயே டிராவல்ஸ்,தண்ணீர் சப்ளை,ரியல் எஸ்டேட்,பால் பாக்கெட் போடுவது தவிர்க்க வேண்டும்.ஆள்கட்டு இருந்தால் உசிதம்.
சுத்தம்/டிஸ்பிளே/வேகம்/பிரஷ்னெஸ் மிக முக்கியமாக
கைகொள்ளவேண்டும்.கொள்முதலில் அதிகபட்ச கழிவும்,தரமும்,டோர் டெலிவரியும் செய்துக்கொள்ளவேண்டும்.
இன்னும் சில கடைகள் எடைகற்களையே உபயோகிக்கிறார்கள்.பொட்டலம் கட்டுவது,கடன் கொடுப்பது சுத்தமாக இருக்கக்கூடாது.எல்லாம் பாக்கெட்ஸ்.எனக்கு தெரிந்து 10,8,12 ரூபாய்க்கு எல்லாம் மளிகைக் கடன்கொடுத்து 3000க்கு கடன் சேர்ந்துவிட்டது ஒரு அண்ணாச்சிக்கு.காரணம் இதெல்லாம் கணக்குவைத்து எழுதமுடியாது.
கால்கிலோ தக்காளி,கொத்தமல்லிக்கெல்லாம் டோர் டெலிவரி கொடுத்தால் வேலைக்கு ஆவது.
எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது.