Saturday, December 31, 2011

வாய்க்கரிசி,அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

                                        வாய்க்கரிசி

”இதானே”

மார்ச்சுவரி அருகே ஸ்டெரச்சரில் பெண் பிணம் காலை விரித்தபடி சாம்பல் பூத்து கிடந்தது.நான்கு மாத கர்ப்பத்தில் வயிறு பூசி இருந்தது.பக்கத்தில் போலீஸ்காரர்.

“கைவுட்டுட்டு ஓடினனே.. அந்த பொறம்போக்கு என்ன ஜாதி?”

எதிரில் இருந்தவர் முகம் இறுகி எதுவும் பேசவில்லை.

”வாய்க்கரிசி தீர்த்தம்ன்னு சம்பிரதாயத்த முடிச்சிடுங்க “

“அதெல்லாம் வேண்டாமுங்க.களுத தொலைஞ்சா போதும்”கத்தையாக ரூபாய் நோட்டுக்களை போலீஸ் கையில் அழுத்தினார்.

“அட ரிக்கார்டலதான் அனாத பொணம்.உனுக்கு நீ பெத்த பொண்ணூ.” சொல்லி முடிப்பதற்குள் அவர் போய்விட்டிருந்தார்.

வார்டுபாயிடம் கால்கிலோ அரிசியும் தண்ணீர் பாக்கெட்டும் வரவழைத்து முகத்தில் தண்ணீர் பீச்சியடித்து கொத்தாக அரிசியை வாயில் போட்டார்.
                                        ------------------

                        அவன் அவள் மற்றும் ஒரு புன்னகை

சந்தியாவுடன் அவனும் சரிசமமாக கூடவே நடந்து வந்துக்கொண்டிருந்தான்.அவன் யாரோ? இவளுக்குத் தெரியாது.

இருவருக்கும் இடையே கால் இன்ஞ் இடைவெளிதான் இருக்கும்.அவள் செருப்பின் அடியும் அவன் ஷுவின் அடியும் பளிச்சென்ற hexagon வடிவ பிளாட்பார வில்லைகளில் மாறி மாறி வைக்கப்பட்டது. ஒவ்வொரு அடிக்கும் தன் செருப்பின் ”சரக்சரக்”கும் அவன் ஷுவின் ”டக்டக்கும்” ஒரு சினிமா பாட்டின் ரிதம் போல காற்றில் தொடர்ந்து வந்தது.

தெருவில் ஒரு திருப்பம் வந்து இருவரும் பிரிந்தார்கள்.

இணைபிரியாமல் நடந்து வந்தது எவ்வளவு நிமிடம் என்று யோசித்தாள். ஐந்து நிமிடம் என்று தெரிந்தது. அந்த hexagon பிளாட்பார கற்களைப் பார்த்தாள்.மெதுவாகப் புன்னகைத்துவிட்டு ஆபிசை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

                                        ------------------                     

Saturday, December 24, 2011

முப்பொழுதும் உன் கற்பனைகள்..சித்தாரா சூப்பர்!

நேற்று டிவி ரிமோட்டில் சேனல்களை மாற்றிக்கொண்டே வரும்போது ஒரு பெண்ணின் குரலைக் கேட்டு சற்று அசந்துவிட்டேன். எனக்காகவே காத்திருந்தவர் போல் பாட ஆரம்பித்தார்.பாடி சிறிது நேரம் கழித்து நிகழ்ச்சி முடிந்துவிட்டது.

அந்த நிகழ்ச்சி “முப்பொழுதும் கற்பனைகள்” படத்தின் இசை வெளியிட்டு விழா. ஜெயா டிவி.

மேடையில் பாடிக்கொண்டிருந்தவர் சித்தாரா கிருஷ்ணகுமார் என்பது நெட்டில் பார்த்துத் தெரிந்துக்கொண்டேன்.அந்தப் பாடல் “கண்கள் நீயே... கடலும் நீயே”.இசை: ஜி.வி.பிரகாஷ்.படத்திலும் இவரேதான் பாடி இருக்கிறார்.

சித்தாரா
பாம்பேஜெயஸ்ரீ, சித்ரா குரலையும் மிக்சியில் போட்டு அடித்துக்
கலந்தாற் போல் இனிமையான ஜீவனுள்ள குரல்.ஹைபிட்ச்சில் மழலை/கீச் தட்டாமல் அற்புதமாக வழுக்கியபடி பாடுகிறார்.கிளாசிகல் டச்.நல்ல தமிழ் உச்சரிப்பு.


ரொம்ப நாளைக்குப் பிறகு தமிங்க்லிஷ் இல்லாமல் பாடும் பெண்ணின் மெலடியோடு உயிர்துடிப்பானப் பாட்டு கேட்டேன்.ரொம்ப சந்தோஷ் ஆனேன்.

தமிழில் இவருக்கு முதல் பாடல் என்று நினைக்கிறேன்.மலையாளத்தில் சாஜன் மாதவ் இசையில் ”யாக்‌ஷியும் நிஜனும்” படத்தில் ஒரு பாடல் பாடி உள்ளார்.இன்னும் நிறைய மலையாள படப் பாடல்கள் பாடி உள்ளதாக தெரிகிறது. இக்குட்டி கேரளாவின்னு வந்துன்னூ.

தாமரையின் வரிகள் பாடலுக்கு மிகப் பெரிய பலம்.இப்பாடல் தெய்வம் தந்த பூவேவின் சாயல் வருகிறது.அடுத்து ஹாரிஸ் ஜெயராஜின் வழக்கமான மெலடி வாசனை.

இவர் கேரளா ஜீவன் டிவியில் பாட்டுப் போட்டியில் இரண்டு கோடி ரூபாய் பரிசு வாங்கி உள்ளாராம். கிழ் உள்ள வீடியோவில் ஜானகி அம்மாவின் மலையாளப் பாட்டு ஒன்று பாடுகிறார்.


சித்தாரா என்றால் வட மொழியில் காலை நட்சத்திரம்.மின்னுங்கள் சித்தாரா.வாழ்த்துக்கள்!


Wednesday, December 21, 2011

ரொம்ப தூரத்து உறவு - கவிதை


எப்பவோ பார்த்திருந்த
தூரத்து உறவு அத்தைப் பாட்டி
இறந்துவிட்டதாக தகவல் வருகிறது

பண்டரிபாய் போல்
முகம் இருந்திருக்கிறது
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுத்திருக்கிறார்
சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி இருக்கிறார்
ஈரத்தலையைத் துவட்டி விட்டிருக்கிறார்
சினிமாவுக்கு அழைத்துப் போயிருக்கிறார்
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்திருக்கிறார்
அம்மா அடிக்கும்போது தடுத்திருக்கிறார்

இப்படியாக
அன்பு சுரந்து முடிகையில்
அவரே வீட்டிற்க்கு வருகிறார்

இறந்தது அவர் இல்லை
வேறு யாரோ ஒரு தூரத்து உறவு


பண்டரிபாய் போல்
முகம் இருக்கவில்லை
நெய்வேத்தியம் செய்வதற்கு
முன்னமே ஒரு வடை கொடுக்கவில்லை
அல்லது சமத்தா படி என்று
வாஞ்சையாக கன்னத்தைக்
கிள்ளி விடவில்லை
ஈரத்தலையைத் துவட்டி விடவில்லை
சினிமாவுக்கு அழைத்துப் போகவில்லை
ரயில் ஜன்னல் ஒரத்தில்
உட்கார அனுமதித்ததில்லை
அம்மா அடிக்கும்போது தடுக்கவில்லை

அந்த இறந்துப் போன
வேறு யாரோ ஒரு தூரத்து உறவின் மேல்
அன்பு சுரக்கிறது

அத்தைப் பாட்டிக்குச் சுரந்ததை விட
இரண்டு படி அதிகமாகவே சுரக்கிறது


Sunday, December 4, 2011

நன்றி

கடைசி தேர்வு எழுதி முடித்த உணர்வு.மண்டை குடைச்சல்கள் இனிமேல் இல்லை.நோ டென்ஷன்.ஏதேதோ யோசித்து பதிவுகள் போட்டு ஒரு வாரத்தை ஓட்டியாயிற்று.புது அனுபவம்.


புது மாப்பிள்ளை ஜோர் ஓவர்.அடுத்த புது மாப்பிள்ளை ரெடியாகிவிடுவார்.

என்னை நட்சத்திரமாக்கிய தமிழ்மணத்திற்கு நன்றி. ஒரு வாரம் என்னை ஆதாரித்து படித்தவர்கள்,பின்னூட்டம் போட்டவர்கள் எல்லோருக்கும் நன்றி.

ஜொலித்து முடித்து சாதாவாக ஆன பிறகும் தொடர்ந்து என் பதிவுகளைப் படித்து ஆதரவு கொடுக்கவும்.

நன்றி வருகிறேன் வணக்கம்.