Wednesday, July 11, 2012

பள்ளிக்கருகில் எரிந்த பிணங்கள்

பள்ளிக்கருகில் அல்லது கோவிலுக்கருகில்  டாஸ்மாக் இருக்கிறது என்று மக்கள் அடிக்கடி  புலம்புவதையும் போராடுவதையும் பேப்பரிலும் டிவியிலும் படிக்கிறோம் பார்க்கிறோம்.ஆனால் என் பள்ளிக்கருகில் டாஸ்மாக் இல்லை சுடுகாடு இருந்தது.ரெண்டும் ஒண்ணுதான்????


சுடுகாட்டுக்கருகில்பள்ளி இருக்கிறதே என்று யாராவது அப்போது புலம்பினார்களா?படித்த பள்ளிக்கருகில் ரொம்ப ஆக்டிவான சுடுகாடு.நினைத்தால் deadly ஆக இருக்கிறது.

வெகு தூரத்தில், முக்கால்வாசி மதியத்தில்,” டகர டகர டகர டகர...”என்று பொடிப்பொடியாக சாவு மோளம் அடிக்கப்படும் சத்தம் நெருங்க ஆரம்பிக்கும்.கூடவே திகிலான ”புவ்வ்வய்ய்ங் புவ்வ்வய்ய்ங் ”சீவி சீவி வரும் ஊதல்.”விஷ்க் விஷ்க் விஷ்க்” இடை இடையே சீட்டி.கேட்க ஆரம்பித்தவுடன் வகுப்பில் ஒரு மரண அமைதி நிலவும்.திகிலுடன்  மாணவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து ஒட்டியவாறு உட்கார்ந்துக்கொள்வோம்.எல்லாம் மண் தரைதான்.
தகனம் நடைபெறுகிறது-மணிகர்ணிகா காட் -காசி
ஆசிரியர் மூட் அப்செட் ஆகி புத்தகத்தை மூடி வைத்துவிடுவார்.அடுத்த நிமிடம் ”ஏலே அது ஒண்ணும் ஜெய்யாது.அது கூட வரானுவ பாரு அதுங்கதான் வெசம்.. குலிப்பறிப்பானுங்க”என்பார்.


சில மணி நேரத்தில் திகுதிகு தீயில் பிணங்கள்  எரிந்தவாறு பள்ளி முழுவதும் புகை அப்பும்.பச்சைத் தசைகள் எரிந்து குமட்டும் நாற்றம்.பிணம் சூடு தாங்காமல் “அய்யோ அம்மா அய்யோ அம்மா” என்று கத்தியவாறு எங்களை நோக்கி ஓடி வருவது மாதிரி பிரமை ஏற்பட்டு திகிலடிக்கும்.


ஆனால் இதெல்லாம் பள்ளி ஆரம்பித்த புதிதில்.பிறகு இதெல்லாம் பழகிப் போய் “டகர டகர டகர டகர...”தாளத்தை ஆர்வமாகக் கற்றுக்கொண்டோம்.இது கிழடா குமரனா ஆணா பெண்ணா என்று எரியும் பிணங்களைப் பார்த்தவாறு படிக்க ஆரம்பித்தோம்.குழந்தையாக இருந்தால் சீக்கிரம் முடிந்துவிடும்.புகை மண்டாது.

எல்லா ஜாதிகளின் சம்பிராதயங்களை தெரிந்துக் கொண்டோம். கிட்டத்தட்ட 50-60 பிணங்களின் புகையை சுவாசித்திருக்கிறோம்!காசியில் இருந்தாலாவது புண்ணியம் உண்டு.


பிறகாலத்தில் சித்தர் பாடல்களில ஆர்வம் வந்தது “இதோட” இன்ஸ்பியரேஷனாக கூட இருக்கலாம்.


“மரப்பாவை போலவொரு மண்ணுருச் செய்து 
வளமான சீவனென்னுந் சூத்திர மாட்டித் 
திரைக் குள்ளிருந்தசைப் போன் தீர்ந்த பொழுதே 
தேகம் விழுமென்று தெளிந் தாடு பாம்பே”


இந்தப் பள்ளி குரோம்பேட்டை ராதா நகரில் (மெயின்) இருந்த வெங்கடேஸ்வரா பள்ளிதான். குரோம்பேட்டைக்கும் பல்லாவரத்திற்க்கும் இடைப்பட்ட இடத்தில் இதன் பிரான்ஞ்ச்.பக்கத்தில் சுடுகாடு. மழை வந்தால் ஏரி ஆகிவிடும். பள்ளி இங்கு மிதந்தக்கொண்டிருக்க பள்ளி ராதா நகருக்கு இடம் பெயர்ந்துவிடும்.ஏரி வற்றியவுடன் மீண்டும் சுடுகாடு.


”ஏரிக்கரை ஸ்கூல்” என்று அழைப்பதுண்டு.


பள்ளியிலிருந்து சுடுகாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த கோணம் போய் சுடுகாட்டிலிருந்து நெய் பந்தம் பிடித்தபடி  பள்ளியைப் பார்வையிட்ட நாள் ஒன்று வந்தது. அது என் தாத்தா இறந்து போய் அங்குதான் தகனம் நடந்தது.


அப்போது ஓடும்  மின்சார ரயிலில் இருந்து பார்த்தால் ஏரி பெரிசாகத் தெரியும்.பெருமழைப் பெய்தால் தண்டவாளம் வரை தண்ணீர் அலை அடிக்கும்.அதில் மிதந்தவாறு சில வீடுகள்.அதிலும் வழக்கமான கிறிஸ்துவ ஜப வீடு ஒன்றும் உண்டு.

இப்போது ஏரி இல்லை.ஏரி ”டகர டகர டகர டகர டகர...புவ்வொய்ங் புவொய்ங்” ஆகிவிட்டது.சுடுகாடு? வெங்கடேஸ்வரா பள்ளி?




No comments:

Post a Comment

எதுவும் சொல்லாத போகாதீங்க ப்ளீஸ்!