Saturday, October 30, 2010

தமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை

கேள்வி: ”தமிழுக்கு முகம் இல்லை.. வடமொழிக்கு வாய் இல்லை” என்கிறார்களே. இதன் பொருள் என்ன?

பதில்: முகம் என்பது வடசொல்.தமிழில் முகம் என்பதைக் குறிக்கத் தனிச் சொல் இல்லை.அதே மாதிரி வட மொழியில் வாய் என்பதற்குத் தனியே ஒரு சொல் இல்லை.முகம் என்பதும் வாக்கு என்பதும் ஆகுபெயர்களாக நின்று வாயைக் குறிக்க வழக்குமேயன்றி, இயல்பான சொல் அல்ல. தமிழில் மூஞ்சி என்ற சொல் உண்டு.அது இழித்துக் கூற உதவுவது.

கேள்வி:நாவிதன் என்ற பெயர் சிகைவினைஞனுக்கு ஏன் வந்தது?

பதில்: இதமான சொற்களைச் சொல்லித் தன் தொழிலைச் செய்வதனால் வந்திருக்க வேண்டும்.சுப காரியங்களை அறிவிக்கும் உரிமை கொங்கு நாட்டில் அவனுக்கு உண்டு.அதனால அப்பெயர் வந்தது என்பதும் பொருந்தும். சுபமான செய்தியைச் சொல்லும் நாவை உடைமையால் நா சுபஸ் என்று வந்து பிறகு நாசுவன் என்று ஆயிற்று.

கேள்வி: ”அண்ணனுக்கு எட்டாதது தம்பிக்கு எட்டும்  என்ன பொருள்?

பதில்: அண்ணன் என்பது மேலுதடு. தம்பி என்பது கீழுதடு. மேலுதடு கீழுதட்டோடு வந்து பொருந்துவதில்லை.கீழுதடே மேலுதட்டை எட்டிப்பொருந்தும். அண்ணன் என்று சொல்லும்போது உதடு ஒட்டுவதில்லை. தம்பி என்னும்போது அவை ஒட்டும்.

கேள்வி: மங்கைப் பருவம் எய்தியவளைத் “திரண்டாள்” என்கிறார்களே அதன் பொருள் என்ன?

பதில்:தெருண்டாள் என்பதே திரண்டாள் என்று விளங்குகிறது.தெளிவு பெற்றாள் என்று பொருள். தான் ஒரு பெண் என்ற அறிவி வரப் பெற்றவரையே அது குறிக்கிறது.

கேள்வி:”தேமேண்ணு இரேன்” என்கிறார்களே: என்ன பொருள்?

பதில்:”தெய்வமே என்று” என்ற தொடரே தேமேண்ணு என்று பேச்சு வழக்கில் சிதைந்துவிட்டது.சும்மா இரு என்ற பொருளில் வழங்குகிறது.

 கேள்வி:குப்பன், குப்பண்ணன், குப்புசாமி என்று பெயர் வைத்துக்கொள்கிறார்ள். அந்தப் பெயர் எதனைக் குறிக்கிறது.?
 
பதில்:பல குழந்தைகள் பிறந்து இறந்து போனால்,பிறகு பிறந்த குழந்தையைக் குப்பையில் புரட்டி எடுத்து குப்பன் என்று பெயர் வைத்து பிறகு மூக்குக் குத்துவார்கள். குப்பையிலிருந்து எடுத்த குழந்தை என்றும் தனக்குப் பிறக்கவில்லை என்றும் ஒரு  பாவனை உண்டாக இவ்வாறு செய்வார்கள்.



நன்றி: கி.வா.ஜ பதில்கள் -அல்லயன்ஸ் பதிப்பகம்.

Monday, October 25, 2010

குறும்பட விமர்சனம்/ நாளைய இயக்குனர்-24-10-10

போனவாரம் (16-10-10) “விடுமுறை” தினத்தை முன்னிட்டு க்லைஞர் டிவியில் நாளைய இயக்குனர் ஒளிபரப்பவில்லை.: அதற்கு முந்தைய வாரம் 9-10-10
இந்த வாரமும் காதல்கதைகள்தான்.


படம்: ??  இயக்குனர்: ராம்

முதல் படம் அனிமேஷனோடு நிஜ கேரக்டர்கள். இயக்குனர்-ராம் அரைப்படம்தான் பார்த்தேன்.படத்தின் பெயர் தெரியவில்லை.பார்த்தவரையில் ஓகே ரகம். நடுவர்கள் ஆகா ஓஹோ என்றார்கள். அப்படி ஒன்றும் தெரியவில்லை.


படம்: ஈர நிலம்  இயக்குனர்: கல்யாண்

ஒரு இரவு நேரத்தில் காலில் குண்டடிப்பட்டு  கடலில் அலைந்து வரும் சுதா என்ற பெண்ணை  ஒரு மீனவ இளைஞன் ஒருவன் காப்பாற்றுகிறான்.அவள்
ஒரு ஈழப்போராளி.ஈழ அகதி முகாமிலிருந்து தப்பி வரும்போது இந்திய கடல்படையினரால் சுடப்பட்டாள்.

அனாதையான இளைஞனுக்கு அவள் வரவு வாழ்கையில் பிடிப்பு ஏற்படுகிறது. காதலிக்கிறான்.அவள்?ஒரு வாரம் கழித்து  திரும்பி தன்னை இந்திய கடல் எல்லையில் கொண்டுபோய் விடச்சொல்கிறாள். விட்டதும் “எனக்கும் உன் மேல காதல் இருக்கு. திரும்பி வந்த திருமணம் செய்துக்கொள்ளலாம்” என்று சொல்லிவிட்டு போகிறாள்.



எனக்குப் பிடித்தது.படத்தில் உயிர்துடிப்பு இருந்தது.அவளைத் திருப்பி கொண்டுவிடும்போது “முதன் முதலா கடலுக்குப் போற மாதிரி இருந்திச்சு” வசனம் அருமை.முடிவில் அலை அடித்து பின் போகும்போது ஈரமணலில் “சுதா” என்று தென்படுவதும் அருமை.


படம்: முள் இயக்குனர்: அஷோக்
டைட்டிலில் ”முல்” என்று போட்டிருந்தார்கள். ஆரம்பமே சரியில்லை.

யாரோ ஒரு பெண் மெமரி லாசாகி ஒரு என்கவுண்டர் போலீஸ்காரரிடம் அடைக்கலம் ஆகிறாள். மருந்து மற்றும் பல விஷயங்கள் கொடுத்தும் அவளால் தான் யார் என்பதை கண்டறிய முடியவில்லை. இடையில் எ.போ. அவளும் காதலாகிவிடுகிறார்கள்.ஒருவரை ஒருவர் ஆத்மார்த்தமாக நேசிக்கிறார்கள்.


ஆனால் அவள் ஒரு போராளி.தான் யார் என்பது ஒரு கட்டத்தில் தெரியவர தன்னுடைய கூட்டளிகள் இடத்திற்கு ஓடி விடுகிறாள்.எ.போலிசுக்கும் பின்னால தெரிய வருகிறது.

கூட்டாளிகள் அந்த எ.போலிசைப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். அதே சமயத்தில் இந்த எ.போலீசுக்கும் அவளைப் போட்டுத்தள்ள அசைமெண்ட் கொடுக்கிறார்கள். இக்கட்டான நிலையில் ஒரு முடிவு எடுக்கிறார்கள். அவள் அவனையும் அவன் அவளையும் சுட்டுக்கொண்டு சாகிறார்கள். அவள் மூணுமாத கர்ப்பம்(?).


வித்தியாசமான கரு.எடுத்தவிதம் தாங்கமுடியவில்லை.படு டிராமத்தனம்.சுத்தமாக உயிரே படத்தில் இல்லை. நடிப்பு ???????????? அதுவும் அந்த பெண்மணி?

படம்: ஒரு ஊர்ல இயக்குனர்: ராஜ்குமார்

சொந்த மாமன் மகளின் மீது காதல் பிணி வந்து அவளை சைக்கிளில் டபுள்ஸ் (முன் பக்க பாரில்)வைத்துக் கொண்டு ஒரு நாள் போக வேண்டும் என்று வெகு நாள் ஆசை. அதற்காகவே சைக்கிள் கேரியரை எடுத்து
விடுகிறான்.ஆனால் நிறைவேறவில்லை.

அவளுக்காக பட்டம் பிடிக்க ஓடிப்போய் காலில் நெருஞ்சி முள் குத்தி பெரிய கொப்பளம் வந்து படுத்துவிடுகிறான்.கொப்பளம் உடையவில்லை. அவன் ஆயா அதை ரண சிகிச்சை செய்ய முயல்கிறாள். வலி பயத்தில் அடம்பிடித்து மறுக்கிறான்.அவள் வந்து அவனை எழுப்பி (டாக்டரிடம் போக?)தன்னோடு அணைத்து முத்தம் கொடுக்க அவன் கால் தரையில் அழுந்தி கட்டி உடைகிறது.

முத்தம் அனஸ்தீசியாவா?


பிடித்திருந்தது.முதல் காட்சியே உயிர்துடிப்போடு ஆரம்பம்.கிராமத்திற்கே கொண்டுபோய்விட்டார்.அதுவும் கதாநாயகன் படுத்திருக்கும் ரூம்(குச்சு?) வித்தியாசம். எடுத்தவிதமும் திருப்தி அளிப்பதாக இருந்தது.கதாநாயகியின்
கண்கள் மட்டும்தான் காட்டப்படுகிறது.

அவளை முன் பாரில் வைத்துக்கொண்டு போவதுதான் தன் காதல் லட்சியம் என்கிற மாதிரி போய் கதை வேறு பக்கம் போகிறது.இதுதான் குறை.

இதுதான் சிறந்தப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.


பட டைட்டிலில் ஒரு குறள் காட்டப்படுகிறது. அது:

பிணிக்கு மருந்து பிறமன் அணியிழை
தன் நோய்க்குத் தானே மருந்து

அர்த்தம்:நோய் தீர அதற்கு எதிரான மருந்து வேறாக இருக்கிறது.ஆனால் இவளாள் ஏற்பட்ட (காதல்) நோய்க்கு இவளே மருந்தாக இருக்கிறாள்.

குறும்படத்தில் குறுகலான திருக்குறள்?





ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!

போன வாரத்தில் ஒரு மதிய வேளை.ICICI Bank ஏடிஎம் கியூவில் நின்றிருந்தேன்.பெரிய கியூ. செக்யூரிட்டியை காணவில்லை.அதில் ஒருவர்,எனக்கு அடுத்து நின்றவர், செல்லில் கத்திப் பேசிக்கொண்டு(கெட்ட வார்த்தையுடன்) இம்சை கொடுத்தார்.

தோற்றத்தில் டிசெண்டாக படித்தவர் போல் இருந்தார்.

அவரை நாசுக்காகப் பார்ப்பதும் முகம் சுளிப்பதுமாக மெதுவாக கியூ நகர்ந்தது.அவர் எதையும் சட்டைச் செய்யவில்லை. மேலும் குரலை உயர்த்திக்கொண்டு பில்ட் அப் கொடுத்தார்.அடுத்து சடாரென்று கியூவிலிருந்து விலகி ஏடிஎம்முக்குள் போய்விட்டார். மறுபடியும் கியூவில் முகம் சுளிப்பு. உள்ளே சென்றும் செல் பேச்சு.அதுவும் பணம் எடுக்கும் காட்சியைப் பார்த்தவாறு.

மூன்று  பேர்களுக்கு முன் பணம் (10000/-)எடுத்தவர் (எனக்கு ஓரளவு அறிமுகமானவர்,கொஞ்சம் முதுமையானவர்) அவர் அங்கு நிறபதை நாசூக்காக ஆட்சிபித்திருக்கிறார். அதற்கு அந்த மொள்ள மாரி சொன்ன பதில்:

”சார்... நா ரொம்ப டீசெண்டான ஆளு. வெளில வெய்யில் தாங்க முடியல.அதான் உள்ள வந்துட்டேன். செக்யூரிட்டியும் தெரிஞ்ச ஆளு.அதுவும் என் டர்ன் வரும்போதுதான் பணம் எடுப்பேன்”

டேய்....ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!

(நான் எடுக்கும்போதும் உள்ளேதான் இருந்தார்)

______________________________________________

போன மாதம் ஒருவர் வீட்டிற்குப் போய் இருந்தேன். வாசலில் திருஷ்டி பரிகாரமாக  ஏதோ ஒன்று ஒரு சணலில் தொங்கிக்கொண்டிந்தது.அதில்  நான்கு மாத ஒட்டடை.முடை நாற்றம். சுவற்றில் ”கண் திருஷ்டி” கணபதி போட்டோ. அதிர்ஷட இரும்பு ”யூ” வடிவ லாடம் கதவில். சுவற்றில் “ஐஸ்வர்யம்” “ஸ்ரீ” போன்ற சிவப்பு குங்கும எழுத்துக்கள். கதவை திறப்பதற்கு முன் இவ்வளவு இருக்கிறதே உள்ளே நுழைந்தால் எவ்வளவு வஸ்துக்கள் இருக்கும். அடி வயிறு பகீரென்றது.


உள்ளே நுழைந்தவுடன் wind chime bells. ஆனால் அது கம்பிகள் அறுந்து தொங்கிக்கொண்டிருந்தது. செருப்பு வைக்கும் இடத்தில் ஒரு தவளை பொம்மை. அதே என்னயே பார்த்துக்கொண்ட்ருந்ததால் பயந்துவிட்டேன். வாசலில் இருந்த பாத்ரூமை இடித்துக்கட்டி ஒரு பெரிய கண்ணாடி.அங்கேயும் ஒரு கண் திருஷ்டி கணபதி. மூலைகளில் ஜிகினா கண்ணாடிகள். சிரிக்கும் புத்தர்.சிரிக்காத புத்தர். ஹால் சுவற்றில் திருப்பதி வெங்கடசலபதி படம்.

மற்ற ரூம்களிலும் சி.பு, பெல்ஸ்,கண்ணாடி....etc etc etc.

இதெல்லாம் ஓகே.ஆனால் வீடு? அலங்கோலம். போட்டது போட்டபடி.சுத்தம்  ஒரு பைசாவுக்குக் கூட இல்லை.

புத்தர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.





டேய்....ங்கொய்யலா... தாங்கமுடியலடா..!
Cleanliness is next to Godliness டா!

Friday, October 22, 2010

இளையராஜா- King of Romantic Interludes

போன பதிவில் முன்னாள் மேதைகளின் Romantic Interludes   பார்த்தோம்.

டூயட்டுகளில் வரும் romantic interlude களை ராஜா எப்படி கையாள்கிறார் என்பதை இந்தப் பதிவில் பார்ப்போம்.

ஒரு பாமர ரசிகனின் பார்வையில்தான் எல்லாம் வைக்கப்படுகிறது. தவறு இருந்தால் சுட்டிக்காட்டலாம்.

போவதற்கு முன்................

அவரின் ஆரம்ப கால பாடல்கள்தான் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.அவரும் தன் முந்தைய /சம கால இசையமைப்பாளர்கள் போல் ரொம்ப சிம்பிளாகத்தான் இடை இசையை (interlude) கொடுத்திருக்கிறார்.ஆனால்?

வழக்கமாக முன்னணியில் ஒரு இசைக்கருவியின் நாதத்தை(ரிதம்) வாசித்து பின்னணியில் தாளக்கட்டும் குறைந்த அளவில் வேறு இசைக்கருவிகளின் நாதமும் தொடர்ந்துக்கொண்டே போகும்.சில சமயம் நாதங்களை சிக்கல் இல்லாமல் அடுக்கிக்கொண்டேவருவார்கள்.
இனிமையாக இருக்கும்.ஆனால் இது ஒரு stereotype இசையாகி அலுத்துப்போய்விடும்.இசையின் தொடர் ஓட்டம் ஆகிவிடும்.

இளையராஜாவை உன்னிப்பாக  கேட்க ஆரம்பித்ததும் இந்த வேறுபாடுகள் தெரிய ஆரம்பித்தது.துவக்கத்தில் இவர் இசையிலும் நாதங்கள் அடுக்கப்படுவதுண்டு. பின்னாளில் மாறிவிட்டது.

உதாரணம்: எம் எஸ்வியின்.... “சொல்லத்தான் நினைக்கிறேன்”

இதில் கிடார்,புல்லாங்குழல்/வயலின்/புல்லாங்குழல் வரிசையாக வருகிறது.ஒரு pattern தெரிகிறது.ஆனால் சில விதிவிலக்கான பாடல்களும் உண்டு.





      (முதன் முதலில் romantic interlude (அம்பு) விட்ட காமதேவன்)

ஆனால் மேஸ்ட்ரோ இதில் வித்தியாசம் காட்டுகிறார்.  எப்படி?
1.அடுக்குவது தெரியாமல் அடுக்குவது (ஒட்டுப்போட்டது தெரியாமல்)
2.துரித கதியில் இசைத்துளிகளை  ஒன்றோடு ஒன்று பின்னுவது
3. ஒவ்வொரு இசைத்துளியிலும் உணர்ச்சிகளை தெளித்துக்கொண்டே பின்னுவது
4.இசை நாதங்களின் இடையே எமோஷனல் உரையாடல்கள்
5.முதல் இடையிசையை இரண்டாவது இடையிசையில் காபி பேஸ்ட் செய்வதில்லை..ராஜாதான் இதில் முன்னோடி என்று நினைக்கிறேன்.
6.அசட்டுத்தனம் இல்லாமல் கூடும் நாதங்கள்.(நான் அடிக்கடி பிரமிக்கும் விஷயம்)
7. எல்லா இசைத்துளிகளையும் “கட்டி மேய்க்கும்” திறமை
8.உச்சரிக்கப்படும் பாடல் வரிகளின் பின்னே இசையால் வருடுவது
9.இசைத்துளிகள் கெடாமல் புது முயற்சிககள் செய்வது
10.அடுத்து என்ன வரப்போகிறது யூகிப்பது கஷ்டம்
11.சூப்பர் பாஸ்ட்டாக பின்னும்போது மூடு கலையாமல் இருப்பது
12.பல பாடல்களில் அழகாக ஒரு finishing touch
13.இசைக்கருவிளின் நாதத்தை கட்டுப்பாடு இல்லாமல் நுனி முதல் அடி வரை எங்கு வேண்டுமானுலும் சொருகுவது

14.இது அது என்று இல்லாமல் சகல இசைக்கருவிகளையும் மாக்சிமம் பயன்படுத்துக்கிறார்.15.எல்லாவித இசைகளையும் கையாள்கிறார். 

ராஜாவின் நாதங்கள் உணர்வுபூர்வமானவை அதே சமயம் புத்திசாலித்தனம் நிறைந்தவை. He puts his heart & soul in   his compositions.

கிழ் வரும் பாடல்களில் மேலுள்ள பாயிண்டுகளைப் பார்க்கலாம்.


படம்: பாலூட்டி வளர்த்த கிளி- 1976 பாடல்:நான் பேச வந்தேன்
முன்னோடிகளின் பாதிப்பு. ரொம்ப சிம்பிளான இசை.இதய துடிப்பை முன் வைத்து ஒரு இசை.



படம்: தீபம் - 1977 பாடல்: அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
 இரு சந்தன தேர்கள்(???) அசைவிற்கு வீணையில் ஒரு வருடல்,0.07-0.13 வயலின் - வீணை உரையாடல் அருமை. கடைசியில் ஒட்டுத்தெரியாமல் வீணை நாதம் தலை நீட்டுகிறது.

எனக்குத் தெரிந்து வீணையின் நாதத்தை left & right பயன்படுத்திய ஒரே இசையமைப்பாளர் மேஸ்ட்ரோதான்.
 


படம்: அழகே உன்னை ஆராதிக்கிறேன்  - 1978 பாடல்:என் கல்யாண வைபோகம்

துறு துறுவென இசை.ஜிகு ஜிகு ஜிகுவென சூப்பர் பாஸ்டில்  இசைப் பின்னல்.0.35-0.49 கவுண்டர் பாயிண்ட்(இரண்டு வெவ்வேறு மெட்டுக்கள் இசைக்கப்படுவது).

0.22-0.35 முன்னணியில் புல்லாங்குழல் பின்னணியில் துறு துறு தாளம். தாளத்தினூடேயே இன்னோரு நாதமும் தொடர்ந்து வருகிறது.மத்யாமவதி ராகத்தில் புனையப்பட்ட பாட்டு.

கவுண்டர் பாயிண்ட் முடிந்ததும் ஒரு புல்லரிக்கும்0.50ல் finishing touch.மிஸ் செய்யாமல் கேளுங்கள்



 படம்: சக்களத்தி - 1979 பாடல்:வாட வாட்டுது

இசையில் ஏதோ புது முயற்சி தெரிகிறது.இரவு+காமம்+காதல் என்று அலைபாயும் உணர்வுகள் வெளிப்படுகிறதோ? அருமை.ராஜாவுக்கு பொருத்தமான பாட்டு.

 

படம்: கிழக்கே போகும் ரயில் - 1978 பாடல்:கோயில் மணி ஓசை
இனிமை..இனிமை..!வெஸ்டர்ன் கிளாசிகலில் ஆரம்பிக்கும் இசைத்துளிகள் ஒட்டுத்தெரியாமல் நழுவி finishing touchல் ஒரு ஒவியமாக வயலினைத் தீற்றுகிறார். 0.06லிருந்த நாதம்(வயலின்) 0.07ல்(சிந்த்?) வேறு நாதத்திற்கு மாறுகிறது.

 28 வினாடிகளில் எவ்வளவு நாதங்களை பின்னுகிறார்.



படம்: ஆறிலிருந்து அறுபதுவரை - 1979 பாடல்:கண்மணியே

லட்சணம் பொங்கும் வீணை நாதம் மோகன ராக சாயலில்.0.22 வினாடிகள்தான் இசை. அதையே  கடைசி வரை நீட்டாமல் இடையில் சிந்த் அண்ட் வயலின் இசையை புகுத்தி அழகுப்படுத்தி மீண்டும் வீணை நாதம்.


படம்: உறவாடும் நெஞ்சம் - 1976 பாடல்:ஒரு நாள் உன்னோடு

டிஸ்கவரி சேனலில் பாம்புகள் வாலில் நின்றபடி காதல் புரிவதை காட்டுவார்கள். அதே மாதிரி வயலினும் புல்லாங்குழலும் ரொமாண்டிக் மூட்.

வெஸ்டர்ன் கிளாசிகல் டைப். புது முயற்சி. பினிஷிங் டச் கவனியுங்கள்.


படம்: நிழல் தேடும் நெஞ்சங்கள்- 1982 பாடல்:இளம் மனதினில் எழும்

மிகப் பெரிய பாட்டு.நம்மூர் கிளாசிகலோடு 0.30-0.37ல் வெஸ்டர்ன் கிளாசிகளை இணைக்கிறார். இது மாதிரி பளிச் பளிச்சென்று மிருதங்கத்தை வாசிப்பது ராஜா ஒருவர்தான்.



படம்: மஞ்சள் நிலா - 1982 பாடல்: பூந்தென்றல் காற்றே வா

அருமையான மேற்கத்திய (சாக்ஸ்?)இசை. கிடார் உரையாடலுக்குப்( 0.38-0.41) பிறகு வரும் பதில் உரையாடல் absolutely divine. 0.55 ல் எதிர்பார்க்க முடியாத யூ டர்ன் அடித்து வேறு திசைக்கு போய் லோகல் மெட்டு வருகிறது.ராஜா ஒரு இசை Uturnist.


படம்: கடவுள் அமைத்த மேடை - 1979 பாடல்: மயிலே மயிலே

ஹம்சத்வனி ராக சாயலில் இண்டர்லூட்.வித்தியாசமான prelude.கிடாரையே புல்லாங்குழலுக்கு தாளமாக வைத்துள்ளார்.ஜென்சி என்ற ஒரு இசைக்கருவியும் இதில் உண்டு.

படம்: புதிய வார்ப்புகள் - 1979 பாடல்: தம் தனனம்

நாதங்களில் எலெக்ட்ரானிக் உணர்ச்சிகள் இல்லை. ஏன்? வீணை மீட்டப்படுகிறது. புல்லாங்குழல் ஊதப்படுகிறது. வயலின் வாசிக்கப்படுகிறது.பெண்கள் வாயால் கானம் இசைக்கிறார்கள்.
பின்னாளில் வேறு வழி இல்லாமல் எலெக்ட்ரானிக் கலந்து இசைத்துளிகள் சற்று செயற்கையாகிவிட்டது. மாசு படிந்துவிட்டது.


பின் ஒரு சமயம் High premium romantic interludes பற்றி பார்ப்போம்.

ஒரு சாம்பிள்: (என்ன ஒரு மலர்ச்சியான prelude!)



டெயில் பீஸ்: இது என்னுடைய 25வது இளையராஜா பதிவு