Sunday, May 29, 2011

ரதிநிர்வேதம் (A) பிட்டு படமா?

முப்பதுமூன்று(1978) வருடங்களுக்கு முன் வந்த மலையாளப் படமான “ரதிநிர்வேதம்”(A) மீண்டும் மலையாளத்தில்  ரீமேக் செய்யப்படுகிறது.ஒரு விடலைப் பருவத்து சிறுவன்  பருவக்கோளாறால் தன்னை விட மூத்த வயதுடைய பெண்ணிடம் காதல்+காமம் கொள்ளுதல்தான் கதை.

பழைய ரதிநிர்வேதம்  கதை-பத்மராஜன் இயக்கம்-பரதன். பரதன் தமிழில் சாவித்திரி,ஆவரம்பூ,தேவர்மகன், தலைவாசல் போன்ற படங்களை இயக்கியவர்.

கிரேதயுகம்,திரேதயுகம், துவாபரயுகம், கலியுகம் மாதிரி அப்போது மலையாள A பட செக்ஸ் யுகம் நடந்துக்கொண்டிருந்தது தமிழ்நாட்டில்.இந்த யுகத்தை  மலையாளப் பட போஸ்டர்கள்  காட்டும்.அதற்கென்றே   சாமுத்திரிகா லட்சணங்கள் உண்டு.அதைக் கட்டாயமாக எல்லா படங்களும் கடைப்பிடிக்கும்.கிழ் உள்ள போஸ்டர் சாட்சி. இதில் பெரிய”A”வைக் காணோம்.



முதல் தடவை 1978ல் பார்க்கும்போது soft porno ஆகத்தான் பார்த்தோம்.அதுதான் வேண்டி இருந்தது அப்போது(???).மொழி தெரியாது.தாய்மொழி தமிழ்.

சேச்சி ஜெயபாரதியைத் தவிர வேறு யாரும் கண்ணில் படவில்லை.கொஞ்ச காலம் கழித்து மீண்டும் பார்க்கும்போது சதை மறைந்து கதையும் மற்றவர்களும் குறிப்பாக சிறுவனும் தெரிய ஆரம்பித்தான்.டைரக்டரின் உண்மையான நோக்கமும் புரிபட ஆரம்பித்தது.பிட்டுப் பட திரிசமன் இதில் இல்லை.

எனக்கு ஒரு வயதில் ”பிட்டு”படமாகவும் வேறு வயதில் ”குட்டு”(good) பரிணாம வளர்ச்சி அடைந்திருக்கிறது இப்படம்.

இது உண்மையிலேயே சிம்பிளாக சொல்லப்பட்ட ஒரு நல்ல படம்.அப்போது இது  ஒரு trend setter என்று சொல்லுவார்கள்.இதன் பாதிப்பில்தான் பாலு
மகேந்திராவின் “அழியாதகோலங்கள்” படம் வந்ததாக பேசிக்கொள்வார்கள்.இதில் நடித்த இன்னோரு கண்ணாடி அணிந்தப் பையன் அழியாதகோலங்களில் வருவான்

வியாபார காரணங்களுக்காக வலிந்து திணித்த கட்டாய செக்ஸ் காட்சிகளும் உண்டு.ஆனால் பிட்டுபடம் என்று முத்திரைக் குத்திவிடாமல் படத்தின் மற்ற அம்சங்களிலும் டைரக்டரின் கவனம் இருந்தது.கூர்ந்து கவனித்தால் புரிந்துக்கொள்ளலாம்.முக்கியமாக நகைச்சுவை.
படத்தில் சிறுவனாக (அப்பூஸ்)வரும் கிருஷ்ணசந்திரன் அட்டகாசம். பள்ளியிலிருந்து “கோலேஜ்” செல்லும்  விடலைப் பருவத்துக்குண்டான பால் வடியும் முகம், பூனை மீசை,அரை டிராயர், சில சமயம் வேட்டி. இவனை ஆர்டர் கொடுத்த செய்தார் போல் பொருந்துகிறார்.

நடிப்பும் உடல் மொழியும் அபாரம். அவார்ட் கொடுக்கலாம்.அடுத்து ஜெயபாரதி (ரதி)சேச்சி.இந்த மாதிரி பாத்திரமெல்லாம் பின்னியெடுப்பார்.நல்ல நடிகையும் கூட.
 
இந்தப் படத்தின் இசை(ஜி.தேவராஜன்) படு சுமார்.ஆல் இந்தியா ரேடியோவில் கேட்ட  நிலைய வித்வான்கள் மெல்லிசை மாதிரி இருக்கும்.

சரி... ரீமேக்குக்கு வருவோம். எந்த தைரியத்தில் இதை ரீமேக்குகிறார்கள். அதேதான் கதை என்கிறார்கள். 2011-1978 = 33 வருடம் ஆகிவிட்டது.எவ்வளவோ மாறி என்னென்னவோ ஆகி எங்கோ வந்துவிட்டோம்.இப்போது எடுபடுமா ?10 வருடத்திற்கு ஒரு முறை மக்களின் ரசனை, மனோபாவம்,பார்வை மாறும் என்று கேள்வி.

முக்கியமாக ஒரிஜனலின் கட்டமைப்பு (structure) ரெண்டுகெட்டான் சிறுவன் vs அவனைவிட வயது முதிர்ந்த பெண்.இதில்தான் திரைக்கதைக் கட்டப்படுகிறது.ஆனால் ரீமேக்கின் போட்டோவைப் பார்த்தால் இரண்டுபேரும் ஒத்தவயதுடையவராகத் தோற்றம் அளிக்கிறது.மற்ற ஸ்டில்களும் அதைத்தான் சொல்கிறது.

ஒரிஜனலில் அப்புவின் வெகுளித்தனம் ஜெயபாரதியின் முதிர்தோற்றம்தான் ஜீவநாடி.

இப்படித்தான் தமிழில் பாலைவனச்சோலை என்ற படத்தை ரீமேக் என்ற பேரில் ரிவிட் அடித்து ஊத்தி மூடினார்கள்.

 ரீமேக்கில் நடிப்பவர்கள் ஸ்ரீஜித் விஜய் -ஷ்வேதா மேனன்.

இதைத்தவிர விளம்பர(promo)ஸ்டில்களில் ரீமேக் ரதி சேச்சி தாவணி போடாமல்

  • அம்மியில் சட்னி அரைக்கிறார்
  • குத்துக்காலிட்டு மாவாட்டுகிறார்
  • குனிந்து வடாம் காயப்போடுகிறார்
  • மாட்டின் காம்பில் பால் கறக்கிறார்
இதெல்லாம் ரீமேக் அப்பூஸ்ஸூக்கோ?தாங்க முடியல.டைரகடரின் நோக்கம் தெரிகிறது.

பழைய படத்தில் எனக்குப் பிடித்த ஒரு காட்சி :
ரதி, பப்புவிடம் சைக்களில் கடைக்குப்போய் தனக்கு வளையல் வாங்கிவரச்சொல்லும்போது வரும் வசனங்கள்:
 ரதி: ரண்டு டசன் வாங்கிக்கோ.இதானு சைசு. அர டசன் கருப்பூ.அர டசன் பச்சா.அர டசன் கருஞ்செவப்பூ.பின்னே...அர டசன் பப்புவின் இஷ்டமுல்லதா..ஏது நெறம் பப்புவோட இஷ்டம்...?

பப்பு: (இன்ப அதிர்ச்சியில் சற்று திகைத்து,யோசித்து, பூரித்துப்போய் )ஏ(என்) சேச்சியோட நெறம்
 ______________________________________________________

எப்படி இருந்த நான் எப்படி ஆயிட்டேன்.”ரதிநிர்வேதம்” கிருஷ்ணசந்திரன் இப்போது. இவர் ஒரு பாடகர். “ஏதோ மோகம் ஏதோ தாகம்”(படம்-கோழிகூவுது) பாட்டைப் பாடியவர்.இதை ரதிநிர்வேதத்திற்குப் பாடி இருக்கலாமோ?

ஓ... பப்புவோ! எத்தர பெரிய மனுஷனாயி!


 இவரின் மனைவி நடிகை வனிதா.


 டெயில் பீஸ்: இந்த ஸ்ரீஜித் விஜய்  பாசில் எடுக்கும் “லிவிங் டூகெதர்” என்றப் படத்திலும் நடிக்கிறார் என்கிறது ஒரு செய்தி.

Friday, May 20, 2011

ஒரு குழந்தையும் அமலா பாலும் -கவிதை


அன்னபூரணி போட்டோ
ஸ்டூடியோ ஷோகேசில்
போஸ்கார்ட் சைசில்
ஒரு குட்டிக் குழந்தை
என்னுடன் சினேகமானது


என் வரவுக்காக தினமும் காத்திருக்கும்

எனக்கும் குழந்தைக்கும் இடையில்
ஒரு விளையாட்டு உண்டு

யாருக்கும் தெரியாத விளையாட்டு

முதலில் குழந்தையை
புன்னகையுடன் உற்றுப்பார்ப்பேன்
குழந்தையும் உற்றுப்பார்க்கும் புன்னகையுடன்

இப்படியும் அப்படியும் நகர்வேன்

எந்த திசையில் நகர்ந்தாலும்
என்னைப் பார்த்து  நகராமல் புன்னகைக்கும்

இதுதான் கடைசி என்று
மீண்டும் மீண்டும் மாறி மாறி
விளையாடுவோம்

ஐந்துவருட சினேகத்தில்
மெயின் ரோட் முழுவதும் புன்னகைகள்
இறைந்துக்கிடக்கிறது

இன்றும் புன்னகை விளையாட்டைத்
தொடர அங்கு சென்றேன்

குழந்தையின் இடத்தில்
நடிகை அமலா பால்

எங்களின் விளையாட்டு தெரிந்துவிட்டது

எந்த திசை நகர்ந்தாலும்
என்னைப் பார்த்து  நகராமல்
அமலாவும் புன்னகைக்கிறார்

.

Tuesday, May 17, 2011

அழகர்சாமியின் குதிரை -விமர்சனம்

குதிரைகள் என்றதும் சமீபத்தில் படித்த கண்மணி குணசேகரன்  சிறுகதைகளில் வரும் குதிரைகள் ஞாபகம் வரும்.தொகுப்பின் பெயர் “பூரணி பொற்கலை”. இதில் வரும் குதிரைகள் கொஞ்சம் சீரியஸ்ஸானவை. கிராமத்தில் நடக்கும் நிகழ்வுகளைக் கண்டு பதற்றமடைபவை.கோபம் கொள்பவை.ஆனால் அழகர்சாமியின் குதிரைகளுக்கு  சம்பந்தமில்லாதவை.
கதாநாயகன் அப்புக்குட்டி
அழகர்சாமியின் குதிரை அற்புதமான சிறுகதை அல்லது குறுநாவல்( கதை படிக்கவில்லை).அதன் ஜீவனைக் கலைக்காமல் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
குதிரையை மைய்யமாக வைத்து ஒரு வித்தியாசமான கிராமத்துக் கதை. இதில் கிடா மீசை,பரட்டைத் தலை(????),பட்டாபட்டி டவுசர் பாண்டி,வீச்சருவாள் கிடையாது. இரண்டு செக்கச்செவேல் கதாநாயகிகள்.செக்கச்செவேலுக்கு லாஜிக்கும் கொடுக்கிறார்கள்.சினிமாவுக்குத் தேவை.புரிகிறது ஓகே.
 
இதில் குதிரைக்கு இரட்டை வேடம்.ஒன்று மரக்குதிரை மற்றொன்று உயிருள்ள குதிரை.கிராமத்து மக்கள் நம்பும் இதுதான் அது அதுதான் இது அத்வைதம்.

1982ல் நடக்கும் கதை(போலீஸ் ஸ்டேஷன் காலண்டர் மற்றும் அலைகள் ஓய்வதில்லை).காணாமல் போன கோவில் மர குதிரைக்குப் பதிலாக கிடைக்கும்  நிஜ குதிரையை தெய்வம் போல் கொண்டாடுகிறார்கள் மல்லையாபுரம் கிராமத்து மக்கள்.வழக்கமான அபத்தங்களும் ஆச்சரியங்களும் வெள்ளையும் சொள்ளைமானவர்கள் இவர்கள்.

நிஜ குதிரையின் ஓனர் அப்புக்குட்டியின் (குதிரையின் பெயர்) ஆள் அல்லது அழகர்சாமியின் குதிரை என்று ஒருவருக்கொருவர் உயிர்.அந்த ஓனர்(அழகர்சாமி) இந்தக் கிராமத்திற்கு வந்து உரிமை கொண்டாட அதனால் ஏற்படும் பிரச்சனைதான் மீதி கதை.
 
கொஞ்சமே வந்தாலும் மனதில் நிற்பவர் அப்புக்குட்டி.மிகையில்லாத நடிப்பு.அட்டகாசமான குரல்.குதிரை உயரமே இருக்கிறார். அசலான கிராமத்து மக்கள்.இடையில் ஒரு  மெலிதான காதல் கதை.
(ஹீரோயின் அத்வைதா)
படத்தின் கழுதை(திருஷ்டி) போலீஸ் ஒற்றனாக வந்து செயற்கை காமெடி பண்ணுவதுதான்.படு மொக்கை/அசட்டுத்தனம்.அடுத்து மலையாள சாமியார்.பக்கத்தில் சிஷ்யனை வைத்துக்கொண்டு தாழ் குரலில் பேசி ஊரை ஏமாற்றுவது எவ்வளவு படத்தில்  வந்துவிட்டது. புளித்துப்போனது. மாத்தியோசிக்கலாமே.
 
“வெள்ளக்காரன்  பியூட்டிஃப்ல் ..பியூட்டிஃப்ல்லு சொன்னத கேட்டேன்.அவந்தான் திருடி இருக்கனும்” போன்ற இயல்பான காமெடிகளை இன்னும் கூட தெளித்திருக்கலாம்.

அடுத்த திருஷ்டி கிளைமாக்சில்  குதிரை “திடீர்” பஞ்சகல்யாணியாகி எல்லோரையும்  துரத்துவது. அது என்ன முரட்டுக்காளையா அடக்க முடியாமல் போவதற்கு? நம்ப முடியவிலல்லை.

இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு ஹோம்வொர்க் செய்திருந்தால் படத்தைக் காவியம் ஆக்கி இருக்கலாம்.

கிட்டத்தட்ட 20 வருடத்திற்குப் பிறகு இளையராஜாவிற்கு அச்சு அசலான கிராமத்துப் படம். டைட்டில் இசை பாலுமகேந்திரா படம் போல இருக்கிறது.அந்நியப்படுகிறோம்.

வித்தியாசமாக கிராமத்து இசையை முயற்ச்சித்திருக்கிறார் என்று கட்டாயம் தெரிகிறது.சில இடங்களில் weird ஆக இருக்கிறது.சில இடங்களில் கிராமத்து உணர்ச்சிகள் இல்லை.

அழகர்சாமி குதிரையுடன் அறிமுகம் ஆகும் பின்னணி அசத்தல்.

Monday, May 16, 2011

ஆத்தா நீ பாஸ்ஸாயிட்ட! ஆனா ஃபெயிலாயிடாத!

நந்தவனத்தில் ஓர் ஆண்டி....அவ(ள்)ன் நாலாறு மாதமாய்
வேண்டி... கொண்டு வந்தானடி ஒரு தோண்டி.... மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடி போட்டு உடைத்தாண்டி...என்று இரண்டாவது முறை முதலமைச்சராகும்போது  செல்வி ஜெயலலிதா & சசிகலா போட்டுடைத்தார்கள். எல்லாம் சிதறியது.

அடுத்து ஆட வந்த  (2006) அய்யா மட்டுமில்லாமல் குடும்பமே கூத்தாடிக் கூத்தாடி போட்டுடைத்தது.ஏன் கூத்தாடினோம் என்று  ரூம் போட்டு சிந்திப்பதற்கு  ஓய்வு வேண்டும்(2011) என்று கருணாநிதி  சொல்லிவிட்டு போய்விட்டார்.

            (இலவசமா  எவ்வளவு கொடுத்தேன்... ஒண்ணும் பிரியல பிரதர்ஸ் &சிஸ்டர்ஸ்)


புது ஐஓசி டாங்க் சட்டசபை  பேய் வீடு ஆகிவிடும். 500 கோடி போச்சு.மேடம் கூச்சப்படாம போய் குடி இருங்க.உங்க மரியாதை கூடும்.ஆனா மாட்டீங்க.ஏன்னா அது ஆய்.உங்கள பத்தி எல்லோருக்கும் தெரியும் மேடம்.மகத்தில் பிறந்து ஜெகத்தை ஆள வந்தவங்க. ஐஓசி டாங்கையும் ஆளுங்க.


ஜெயலலிதா மீண்டும் கூத்தாடாமல் தோண்டியை பாதுகாப்பது
நலம்.காரணம் கருணாநிதிக்கு எதிரான ஓட்டுக்கள்தான் முக்கால்வாசி.முதல் ஒரு வருடம் ”அய்யோ கொல்றாங்களே” கைதுகள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே “ Mummy returns .....I am there shortly  Mr.Azhagiri" என்று சொல்லிவிட்டார்.


கைது வாய்தா என்று வழக்கமான காட்சிகள் அடுத்த ஆறு வருடங்களுக்கு திரையில் ஓடி சிரிப்பூட்டும்.திமுகவும் அதிமுகவும் விளையாடும் மங்காத்தா  விளையாட்டு.

உங்களுக்கு அடுத்து யார் என்பதையும் இப்போதே சிந்திப்பது  உத்தமம்.உங்களுக்கும் வயது ஆகிக்கொண்டேபோகிறது.

உங்களுக்கும் கேப்டனுக்கும் பிடிக்காத ஒரே சொல் “லஞ்சம்”. கேட்டவுடன் எங்ளுக்கு  பிடிக்கும் வார்த்தை “ சிரிப்பு மூட்டாதீங்கடா டேய்” 
 
உங்கள் அமைச்சர்களின்  இன்கம்டாக்ஸ் ரிட்டன்களை போட்டோகாபி எடுத்து தனியாக ஒரு பைலில் போட்டுவைத்துக்கொண்டால்  appraisalலில் மார்க் போடுவதற்கு  வசதியாக இருக்கும்.

முக்கியமாக புதிதாக பதவி ஏற்கும் தேமுதிகவின் MLAக்களின் இன்கம்டாக்ஸ் ரிட்டன்களை போட்டோகாபி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் மேடம்.எல்லாம் புதுசு. சும்மா கை துறு துறுவென்று இருக்கும். தேர்தலில்  நிறைய மூதலீடு செய்து இருக்கிறார்கள்.

யார் வந்தால் என்ன ?சென்னையில்  ஆட்டோ மீட்டர்(சூடு இல்லாத) போட்டு ஓட்டுவதற்கு பத்தாயிரம் வருடங்கள் காத்திருக்க வேண்டும்.