Wednesday, November 17, 2010

ஐ லவ் யூ கீதாலஷ்மி

”சாயந்தரம் மூணு மணிக்கு ப்ரோகிராம் ஆரம்பிக்கும்.
மறக்காத வந்துரு.சும்மா பேசி அசத்து”சித்தார்த்

”ஓகேடா..கிளம்பிட்டு இருக்கேன்.கட்டாயமா வரேன்.”அரவிந்த்.

அரவிந்த் அழைப்பை கட் செய்து முடித்து அடுத்த நிமிடத்தில் மீண்டும் அழைப்பு.மீண்டும் நண்பன் சித்தார்த்.

“டேய் மன்மதா.. நிறைய பொண்ணுங்க கலந்துக்கிற டாக்‌ஷோ.மிஸ் பண்ணாத”

“ஓகே.. ஓகே...” கட் செய்துவிட்டு மெலிதாகப் புன்னகைத்தான்.

“என்னாடா ஒரே ஸ்மைலியாக இருக்க..” அரவிந்த் அம்மா

” நான் மன்மதனாம்”

“ஆமாண்டா.இன்னிக்கு இந்த புது ஷர்ட்டும் பேண்டும்.ஒரு தூக்கு தூக்குது வழக்கத்தவிட”

கண்ணாடியில் பார்த்தான்.உடை கச்சிதமாக பொருந்தி வந்தது.அப்பாவைப் போல் அகல தோள்கள்.அதே உயரம்.சட்டையை மீறி வெளியே துருத்திக்
கொண்டிருக்கும் முடி.அடர்த்தி மீசை.ஆண்தனமான முகம்.அதிரும் மெட்டாலிக் குரல்.

இந்தத் தோற்றத்திற்காகவே கல்லூரி காலத்தில் நிறைய பெண்கள் துரத்தினார்கள்.புன்னகையுடன் எல்லோரையும் கடந்தான்.இதற்காகவே மிச்சம் மீதி பெண்களும் துரத்தினார்கள்.தலையில் எந்தவித கீரிடமோ குறுகுறுப்போ இல்லாமல்தான் கடந்தான்.

எதற்காக துரத்தினார்களோ அதில் இவனுக்கு ஆர்வமில்லை.பட்டுக்கொண்டதும் இல்லை.தான் உண்டு தன் படிப்பு உண்டு என்றபடி இருந்தான்.அவனை அப்நார்மல் என்றார்கள்.படிப்பில் ரொம்ப கவனமாக இருந்தான்.உண்மையாகவே ஒரு மாணவனாக படிக்கவும் செய்தான்.

கடைசிவரை அதே புன்னகையுடன் எல்லா பெண்களையும் கடந்து கல்லூரிக்கு வெளியே வந்து நல்ல சம்பளத்தில் வேலையும் பார்த்துக்கொண்டிருக்கிறான்.
__________________________________

சித்தார்த் அழைத்த இடத்தை நோக்கி காரை செலுத்தினான்.

காலரி போல் இருந்த இடத்தில் உட்கார்ந்தான்.டாக் ஷோ ஆரம்பிக்க நிறைய நேரம் இருந்தது.உள்ளே நுழைந்த கீதாலஷ்மியும் இவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்தாள்.ஹலோ சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டாள்.

முதல் பார்வையிலேயே அவனை ரொம்ப பிடித்துப்போனதும் நெருங்கி உடகார்ந்தாள். வலிய பேசினாலும் அவன் ஒரிரு வார்த்தைகள்தான் பேசினான்.வந்திருந்த ஆண்களும் பெண்களும் இவர்களேயே அடிக்கடிப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.அதையும் பாக்கியமாக ரசித்தாள்.

டாக் ஷோ ஆரம்பித்தது.தன் சைடு வாதங்களை அருமையாக பேசினான்.இவன் பக்கத்தில் உட்கார்ந்திருந்தது கீதாவுக்குப் பெருமை பிடிபடவில்லை. கைத்தட்டல் வாங்கும்போதெல்லாம் அவள் இவனின் உள்ளங்கையால் தன் உள்ளங்கையால் தட்டினாள்.

நேரம் கூட கூட வாதங்களும் பிரதிவாதங்களும் பெரிதான சிரிப்புக்களும் கைத்தட்டல்களும் கத்தல்களும் காதில் விழாமல் சுருங்கி ஒரு புள்ளியாக கீதாலஷ்மி அரவிந்தை காதலிக்கத் தொடங்கினாள்.அவனின் உடல் மொழியும் தனக்கு இணையாக இருப்பதாக நினைத்து மீண்டும் பூரித்தாள்.

டாக் ஷோ முடிந்ததும் அதே பூரிப்பில்......

“ ஏய் அரவிந்த்.நாம ஜெயிச்சத கொண்டாடலாம். ஹாவ் டின்னர் அண்ட் கோ” ரொம்ப உரிமையாக.

”சாரி... கீதாலஷ்மி..இன்னொரு நாள். பட் ஐ ஹேட் வெரி நைஸ் டைம் வித் யூ”

பல வருடங்களுக்குப் பிறகு முதன்முதலாக தன் முழுப்பெயரைச் சொல்லி அரவிந்த்துதான் கூப்பிடுகிறான்.அதில் திளைத்துக்கொண்டிருந்தபோது அவன் கிளம்பிவிட்டான்.”பை” சொன்னது கூட காதில் விழவில்லை.

அப்படி கூப்பிடாமல் இருந்திருந்தால் தான் விடாப்பிடியாக அவனை அழைத்திருப்பேன்.யோசித்தப்படி காரை ஸ்டார்ட் செய்தாள்.டாக்‌ஷோவில் கலந்துகொண்டதை பெரும் பாக்கியமாக கருதினாள்.
_______________

அடுத்த ஒரு வாரத்தில் அவளிடமிருந்து நிறைய குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் அரவிந்தைத் தாக்கியபடி இருந்தது.எல்லாவற்றையும் புன்னகையுடன் கடந்தான்.இவனை எதுவும் பாதித்ததாக தெரியவில்லை.

அவனிமிருந்து ஒரு மறு காதல் மறுமொழியும் இல்லை இருந்தாலும் எல்லாம் பொதுவாக இருந்தது.

கீதாலஷ்மியும் ஒன்றும் புரியாமல் தவித்தாள். காதலிக்கப்படுவதற்கு  இவ்வளவு கஷ்டபடவேண்டியது புது அனுபவமாக இருந்து ஹிம்சையானாள்.வெளியேறுவது எப்படி என்று புரியாமல் முழித்தாள்.ஏன் அந்த டாக் ஷோக்கு போனோம் என்று முதல் முதலாக நொந்துக்கொண்டாள்.

இதற்கிடையில் ஒரு ப்ராஜெக்ட்டுக்காக பிரான்ஸ் சென்றாள்.இவளின் குறுஞ்செய்திகளும் மறைமுகமாக காதல் வாழ்த்து அட்டைகளும் நேர் பேச்சுகளும் தொடர்ந்துகொண்டுதான் இருந்தது.ஆனால் முன்போல அவ்வளவு  தீவிரம் இல்லை.குறையவும் செய்தது.அவனும் அதே சமயத்தில் அவன் ஆபீஸ் விஷயமாக வெளிநாடு சென்றான்.

கிட்டத்தட்ட நான்குமாத இடைவெளிக்கு பிறகு ஒரு நாள்---------

“அரவிந்த் ..திஸ் இஸ் கீதா... கீதாலஷ்மி. எப்படி இருக்கே?”

“ நல்லா இருக்கேன். கீதாலஷ்மி. நீ?”

“நல்லா இருக்கேன். இப்போ பெங்களூரு ஷிப்ட் ஆயிட்டேன். இப்ப சென்னைல ஒரு ஹோட்டல்ல தங்கி இருக்கேன்.நான் உங்கிட்ட பேசனும். தி இஸ் அபொட் மை மேரேஜ்”

“வாழ்த்துக்கள் கீதா..”

“தாங்கஸ்.நேர்ல வா.. சொல்றேன்.கட்டாயம் வந்தே ஆகணும்”

கீதாலஷ்மிக்கு விரைவில் திருமணம்! போனை வைத்தவுடன் மனசு கனத்தது.வழக்கமான புன்னகை எங்கே போயிற்று? பார்த்தே ஆக வேண்டும் என்று மனசு வாட்டி எடுத்தது.

ஜிஆர்டி கிராண்ட் டேய்ஸ். ரூம் நம்பர் 218..

”எஸ் அரவிந்த்.. கம் இன்”  உள்ளே நுழைந்தான்.

“இஸ் இட் ஓகே” தன் உடையைக் காட்டிக் கேட்டாள்.

” நோ பிராபளம்” என்று சொல்லி கையில் கொண்டுவந்திருந்த பூங்கொத்தைக் கொடுத்து”வாழ்த்துக்கள்” என்றான்.பதிலுக்கு சிரித்து வாங்கிக்கொண்டாள்.

முதன்முதலாக அவளை உற்று நோக்குகிறான்.

லூசான கட்டம் போட்ட டி ஷர்ட்டும் அதன் கிழே தொளதொள பேண்டும் அணிந்து பளிச்சென்று இருந்தாள்.கையில் ஏதோ பேஷன் வளையல்கள். ஒரு காலில் மட்டும் மெல்லிதான கொலுசு.காலில் ரூம் செருப்பு.இருந்தாலும் கண்ணியமான தோற்றம்.


நடக்கப்போகும் அவளின் திருமணத்தை விவரத்தைப் பற்றி ரொம்ப சந்தோஷமாக சொன்னாள்.கணவன் அவர்கள் குடும்ப போட்டோக்கள் எல்லாவற்றையும் காட்டினாள்.


அவள் தன் பின்னணி படித்த காலேஜ் குடும்பம் எல்லாவற்றையும் முதல்முறையாகப் பகிர்ந்துக்கொண்டாள்.பிரான்ஸ் பற்றி விவரித்தாள்.தன் பல வித போட்டோக்களை காட்டி நிறைய ஜோக் அடித்தாள். பேச்சில் நேர்மை இருந்தது.விகல்பம் இல்லாமல் பேசினாள்.நிறைய சிரித்தாள்.தன் காதல் தோற்றதுப்பற்றி முகத்திலோ பேச்சிலோ எந்தவித தடயமும் இல்லை,

இதையெல்லாம் இவ்வளவு நாள் கவனிக்க தவறியது மனதை ரணமாக்கியது.

பேச்சின் இடையே தான் அடிக்கடி உதிர்த்த வழக்கமான புன்னகைகள் கூட அதன் வீரியத்தை இழந்துவிட்டதாக நினைத்தான்.

பேச்சின் முடிந்து கிளம்பும்போது அவளை ரொம்ப பிடித்துப்போயிருந்தது. மனதிற்குள் சொல்லிக்கொண்டான் -

“ஐ லவ் யூ கீதாலஷ்மி”


                        முற்றும்


---

Sunday, November 14, 2010

மொட்டை மாடி - கவிதை




படம் நன்றி:http://anandvinay1.blogspot.com/2010/11/blog-post.html

எல்லா
மொட்டை மாடிகளும்
பிரபஞ்சத்திற்கு
அருகில்தான் இருக்கிறது

இரவில்
ரொம்பவும் அருகே
வந்துவிடுகிறது
படுத்துக்கொண்டுப் பார்த்தால்
கைக்கெட்டிய தூரம்தான்

அருகில் இருக்கும் வசதியால்
மேகங்களில் தெரியும்
காதலிகளுடன் பேசுவதற்கு
மொட்டை மாடியோடு
பிரபஞ்சத்தையும்
நகர்த்தி இருக்கிறேன்

கடவுள் முகம் சுளிக்கி இருக்கிறார்

எதிர்படும் பித்ருக்களை
வடாம் துணி போர்த்தி
சமாளித்திருக்கிறேன்

எங்கெங்கோ
அலைந்துத் திரிந்து
இடம் கிடைக்காமல்
லேசாக தூறல் போடஆரம்பித்து
காதலியும் தொலைந்து
பிரபஞ்சமும் தொலைந்து
மீண்டும் மொட்டை மாடிக்கே
வந்துவிட்டேன் கையில்
வடாம் துணியுடன்



-------

Friday, November 12, 2010

இளையராஜா- King of Musical Call & Response

இளையராஜாவின் பாடல்களில் நுனி முதல் அடிவரை எங்கும் அழகுணர்ச்சி மிளிரும்.அதில் ஒரு துளியைத் தொட்டு நாக்கில் வைத்தால் இனிக்கும்.அதில் ஒன்றுதான் Call & Response

இது ஒரு வகை இசைக்கோர்பு.தமிழில் மொழிபெயர்த்தால் அழைப்பும் மறுமொழியும் அதாவது இசைஅழைப்பு அதற்கு இசையிலேயே மறுமொழி.இந்த அழைப்பு & மறுமொழி பல்லவி-1, சரணம்-1,பல்லவி-2, சரணம்-2,Interlude-1,Interlude-2 எங்கு வேண்டுமானாலும் வரலாம்.

இது மேஸ்ட்ரோவே நினைத்து செய்ததா என்று கேட்டால் என்னிடம் பதில் கிடையாது.இசையின் ஒரு வகையா? தெரியாது.

இதை ஒரு வகை ரசனையாக உள்வாங்கி இசையை ரசித்தால் வரும் அனுபவம் புதுமை. 

இதை நான் தெரிந்துகொண்டது எப்படி?

கானடா வாழும் இளையராஜாவின் தீவிர ரசிகர் திரு ரவி நடராஜன் அவர்களின்http://geniusraja.blogspot.com/  பதிவில் காணப்பட்டது.அவர் இசை ஆராய்ச்சி விஞ்ஞானி லெவலுக்கு ராஜாவின் இசையை அலசி ஆராய்கிறார். அவர் இந்த மாதிரி நாதத்துளிகளை இப்படித்தான் குறிப்பிட்டிருந்தார்.

அவர் சொன்னதை வைத்து கிழே உள்ளே இசைத்துளிகளைக் கேட்ட போது சரியாக பொருந்தி வந்தது. அவர் சொன்னதை ஒரு பாமர ரசிகனாக உள் வாங்கிக்கொண்டு இப்பதிவைத் தொடர்கிறேன்.


நண்பர் ரவி நடராஜனுக்கு நன்றிகள் கோடி.

கிழே கொடுத்த பாட்டின் உதாரணங்கள் என்னுடைய சொந்த தேர்வுகளே.இதற்கும் அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்த பிரபஞ்சத்தில் முதல் முதலாக இந்த நாத அழைப்பு/மறுமொழியை இசைத்தவர்கள் யார்? காட்டுவாழ் மிருகங்கள்தான்.முக்கியமாக பறவைகள்.

அதன் கூவல்கள் எதிர் கூவல்கள்தான், எல்லா இசை மேதைகளுக்கும் பின்புலம் என்பது என் யூகம்.இந்த கூவல்கள் முக்கியமாக காதல் செய்ய கூவப்படுகிறது.

ஆனால் நவீனத்தில்மனித உணர்வு ஆலாபனைகளும் அதற்கு மறுமொழியாக இசைக்கருவிகளின் ஆலாபனைகளும் இசைக்கப்படுகிறது.




அதைக் காதால் கேட்போம்.

உதாரணம் -1

ஏ... மச்சான...!(அன்னக்கிளி-1975) என்று ஜானகி ஆலாபித்து
(call ) முடிந்தவுடன் புல்லாங்குழலில் வழியும் நாத மறுமொழி(response).கடைசியில் வரும் அழைப்பு ”மச்சானப் பார்த்தீங்களா” இதற்கு வரும் புல்லாங்குழல் மறுமொழி குறும்புத்தனமாக.
CR Machanapaarthinka.mp3

உதாரணம் -2  

பாடும் வானம்பாடி....ஆ..(நான் பாடும் பாடல்1984)என்று எஸ்பிபி இதமாக அழைக்க(call ) அதற்கு வீணையில் மறுமொழி (response) செல்லம் கொஞ்சியபடி வருகிறது.
CRPaadumVanamPaadi.mp3

ராஜாவின் தனித்தன்மை என்ன? மாத்தி யோசி கான்செப்ட்தான்.
That"s all folks. Now let"s start  diving   in Maestros"  call & response நாத வெள்ளம்


கீரவாணி...(பாடும் பறவைகள்).இரவிலே... பகலிலே... பாடவா நீ. ஒவ்வொன்றுக்கும் உடனடி ரெஸ்பான்ஸ் சிதாரில்(??.துறுதுறுவென ரொம்ப சுட்டித்தனம் நிறைந்தது.
CRKeeravani.mp3

ஆற்றில் ஓடம் செல்ல(அவள் அப்படித்தான்-1978).எனக்குத் தெரிந்து இந்திய திரை இசையில் இது மாதிரி கேட்டதில்லை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ!High voltage emotion!
CRVazhaioodam.mp3

பூந்தளிர் ஆட (பன்னீர் புஷ்பங்கள்-1981).எஸ்பிபி ரொமப குழைந்து அழைக்கிறார்.உற்றுகேளுங்கள்.ரெண்டுவிதமான ஹம்மிங் ரெஸ்பான்ஸ்.பாட்டிலேயே ஐந்துவிதமான ஹம்மிங் வரும்.மாத்தியோசி.
CRPoonAada.mp3

நீ பாதி நான் பாதி...(கேளடி கண்மனி-1990).அருமை.
CRNeePathi.mp3


தென்றல் வந்து என்னை(ஒரு ஓடை நதியாகிறது-1983.
CRThendralEnnai-Oru oodai.mp3

ராக்கம்மா கையத்தட்டு(தளபதி-1991).எஸ்.பி.பி. நாலு அழைப்பு அதற்கு நாலு மறுமொழி.3ம்4ம் இசைக்கருவிகள்+மனிதகுரல் சேர்ந்து வருகிறது.ஆனால் இதிலேயே குரல்கள்(3,4) வித்தியாசமாக வருகிறது. இது சுவர்ணலதாவுக்கும் ரிப்பீட் ஆகிறது.5வதுக்கு மெல்லிய வேறு மறுமொழி.
CRRakkam.mp3

உறவுகள் தொடர்கதை.....(அவள் அப்படித்தான்-1978)
CR Uravugal.mp3


பள்ளியறைக்குள் மல்லிகையை(பால நாகம்மா-1981)
CRPalliyarikkul.mp3


நான ஏரிக்கரை மேலிருந்து (சின்னத்தாயி-1992).புல்லாங்குழல் ரொம்ப stylishஆக இசைக்கப்படுகிறது.ரம்யம்.
CRNaanYerikarai.mp3

உன்னவிட உலகத்தில யாரு(விருமாண்டி-2004)இதில் வரும் 0.16-0.19 அன்ட் 0.36-0.39 மறுமொழி எமோஷன் stunning!
CROnnaVida.mp3

இது ஒரு பொன் மாலைப் பொழுது(நிழல்கள்-1980).இதில் வரும் புல்லாங்குழல் மறுமொழி தெரியாதவர் தமிழ்நாட்டில் யாராவது உண்டா?
CRlIthuOruPon.mp3

வனிதாமணி(விக்ரம்-1986).கிடார் தீற்றல்கள் சம்பிராதயமாக இல்லாமல் வித்தியாசமாக இருக்கிறது.
CRVanithaMani.mp3

கலகலக்கும் மணியோசை(ஈரமான ரோஜாவே-1991)
CRKalaKalakkum.mp3

நீ பார்த்தப் பார்வைக்கொரு நன்றி(ஹேராம்-2000).

இதில் அழைப்புக்கும் மறுமொழிக்கும் இருக்கும் கெமிஸ்டரி made for each other.0.20-0.28 இசையை கவனியுங்கள்.புல்லாங்குழலோடு பினைந்துவரும்  ஹம்மிங்கில் ஒரு விகிதம் இருக்கிறது.நான்கு ஹம்மிங். இதில் மூன்று மென்மை ஒரு பினிஷிங் ஹம்மிங்(3:1).கவிதை.

பிரமிக்கவைக்கிறார் இசைஞானி.பாட்டைக் கேட்க கூடாது.உள்ளே குதித்து ஆழ் நீச்சல் அடிக்கவேண்டும்.You have to live with the song.
CRNeepaartha.mp3

வா வா பக்கம் வா(தங்கமகன்-1983)
CRVaVaPa.mp3

சின்ன ராசாவே சித்தெறும்பு உன்ன(வால்டர் வெற்றிவேல்-1993).இது ஒரு freakout response.அஜால் குஜால்.
CRChinna Raasave.mp3

தெய்வீக ராகம் தெவிட்டாத(உல்லாசப் பறவைகள்-1980)
CRDeivigaRagam.mp3

மீட்டாத வீணை (பூந்தோட்டம்-1998).(கிடாரில் கவிதை மறுமொழி.ரித கெளள ராக சுவரங்கள் தெறிக்கிறது.
CRVarudal-MeetVeenai-Poon.mp3

Tuesday, November 9, 2010

குடைக்குள்ளும் வெளியிலும் சில கவிதைகள்


சில குடைகள்
மழைக்குப் பிடிக்கப்படாமலேயே
பார்மசிகளிலும்
ஊத்துகுளி வெண்ணைக் கடைகளிலும்
காபிப்பொடி கடைகளிலும்
பட்டாணி கடைகளிலும்
சாத்திவைத்தபடி
மறதியில் தொலைந்துவிடுகிறது
____________________________________

மழை பெய்யும் இரவுகளில்
யாருக்கோ எப்பொழுதோ
கொடுக்க இருந்த 
காதல் கடிதங்கள் 
நனைந்துவிடுகிறது
பிழிந்துவிட்டு மீண்டும்
எல்லாவற்றையும் எழுதுகிறேன்
____________________________________

இப்போதெல்லாம்
எந்த பூகோள டீச்சரும்
வெய்யிலுக்கு குடை
பிடித்தப்படி பள்ளிக்கு
வருவதே இல்லை
____________________________________

குடையைப்
பிரிப்பதற்கு முன்
சட்டென மழைப் பெய்துவிட
வேண்டாம்
நனைந்த பிறகு
விரித்த குடையின்
தெறிக்க போகும் சாரலில்
இருக்கும் கவிதையை
ரசிக்க முடிவதில்லை
____________________________________






பாட்டிகளுக்குக்
குடையே கிடையாது
எல்லாம் தாத்தா குடைகள்தான்












e