Sunday, April 5, 2009

கை நழுவியது அரிய வாய்ப்பு -கவிதை

குளியல் அறையில்

நெடு நேரம் தேடியதில்

சப்பிப் போட்ட புளிப்பு முட்டாய் 

சில்லுப் போல சின்ன

சோப்புத் துண்டுதான் கிடைத்தது

அதுவும் வெளுத்துக் 

காய்ந்துதான் போயிருந்தது

அதை நழுவி விடாமல் 

இறுகிப்பிடித்து தேய்த்துக்

குளித்தேன்

புதிதாக வாங்கி வந்த

புத்துணர்ச்சி தரும் சோப்

உரித்த கோழி போல்

கையில் இருந்தது

வழுக்கி விழுந்து விட்டது 

டாயலட் கம்மோடில்

தூக்கி எறிந்திருக்கலாம்

அதன் உள் அட்டையும்

வெளி அட்டையும் 

ஒரு முறையேனும்

முகர்ந்துப் பார்த்துவிட்டு

படிக்க:-

கவுண்டமணி-செந்தில்-எலெக்‌ஷன் டைம்



Friday, April 3, 2009

சாலமனுக்கு ஒரு கடிதம் - தொடர்

சாலமனுக்கு ஒரு கடிதம்

பதிவர் நர்சிம் சாலமனுக்கு ஒரு கடிதம் எழுத என்னை கேட்டுள்ளார். 

விளையாட்டின் விதிகள் என்ன?சாலமன் என்றுதான் இருக்கவேண்டுமா?மன்னிக்கவும் இந்த பெயர் எனக்கு ஒட்டவில்லை. வேறு காரணம் இல்லை. ஒட்டாமல் எழுதினால் கடிதம் நீர்த்துப் போய் விடுமோ என்ற அச்சம்.


என் கல்லூரி நண்பன் ஸ்ரீதருக்கு எழுதலாமா?


அன்பு நண்பன் ஸ்ரீதருக்கு,

கதை,கவிதை,கட்டுரை,இத்யாதிகள் தமிழில் எழுதியிருக்கிறேன்.திடுதிப்பென ஒரு கடிதம், நம் “மால்குடி டேஸ்” அல்லது ”குரோம்பேட்டை தினங்கள்” பற்றி தமிழில் எழுதுவது ஒரு மாதிரி வெட்கமாக இருக்கிறது.அதுவும் பல வருடம் கழித்து ஒரு பழைய நண்பனுக்கு.


இதை கதை,கவிதைகளில் எழுதும் போது லஜ்ஜை இல்லை.கடிதத்தில்? அதே அலை வரிசையில் நீ புரிந்துக் கொள்வாயா என்பது காரணம்?


Alumini meet of Don Bosco,Alumini  meet  of IIT,Alumini  meet  of QMC...என்று பேப்பரில் பார்த்து,அதீத ஆசையுடன் நானும் பல வருடங்களாக நாம் (பள்ளி/கல்லூரி வரை ஒன்றாக இருந்தவர்கள்)ஒரு நாள் கூடி பேசலாம் கொண்டாடலாம் என்று பலமுறை முயற்சிஎடுத்தும் தோல்விதான்.

ஒருவன் “வேற வேல இல்ல இவனுக்கு”.முத்து “எங்கடா டைம் இருக்கு”. ஜாகீர் “இன்னும் கதகிதெல்லாம் படிச்சிட்டு மெண்டலாத்தான் இருக்கியா”. அய்யன் மற்றும் வெங்கட்டை பயந்துக் கொண்டு கேட்கவே இல்லை. நீ மட்டும்தான் ஓகே என்றாய். அவர்கள் அதை ஏனோ அகெளரவமாக நினைக்கிறார்கள். அல்லது என் மாதிரி ரத்ததில் நினைவுகள் கலந்து ஓட வில்லையோ என்னவோ?


இரண்டு மூன்று கதைகளில் இவர்கள் வருவதைச் சொல்லி, படிக்கச் சொன்னேன்.டைம் இருந்தா படிக்கிறேன் என்று சொல்லி விட்டார்கள்.குரலில் ஆர்வம் இல்லை.


நம் இருவரைத் தவிர பழைய நினவுகள் மேல் யாருக்கும் தீராக் காதல் இல்லை.இதிலும் மிதவாதி,தீவிரவாதி என்று பிரிவுகள் இருக்குமோ?நீயும் ஒரு கட்டத்தில் தப்பித்துச் சென்ற மாதிரி பட்டது. பரவாயில்லை.

குரோம்பேட்டை என்றதும் CLC ground, ஹோட்டல் பாலஸ்,வைஷ்ணவா காலேஜ்,மின்சர்ர ரயிலில் மோஷனில் ஏறுவது,வெண்டார்ஸ் கம்பார்ட்மெண்டில் சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொண்டது. புகையை “இன்” செய்து இருமியது.Plain Wills,Passing Show,Gnat,Panama,Cool.,சாது பீடி.இதே கம்பார்ட்மெண்டில் எவ்வளவு ஆக்ஸிடெண்ட்பிணங்களைப் பார்த்திருக்கிறோம். இதெல்லாம் நினைப்பதுண்டா ஸ்ரீதர்? சுஜாதா சினி ஆர்ட்ஸ் பட ஆரம்ப டைட்டில் போல் பின்னணி இசையோடு பள பளவென ஒடுகிறது.


இப்போதெல்லாம் “பிகர்” என்கிறார்கள்.அப்போது “டாவ்”. “லட்டு முழுங்கி” மீனாவை ஞாபகம் இருக்கிறதா? பஸ் ஸ்டாண்ட் காதல் இன்னும் இருக்கிறதா?  B.A.,BSc..,B.Com., இவைகள் கொடி கட்டி பறந்த போது பஸ் ஸ்டாண்ட் காதலும் கொடி கட்டிப் பறந்தது. 12A பஸ் தி.நகர் To  பட்டினப்பாக்கம்



நம் வாழ்வில் மறக்கமுடியாத இடம் Drive -in - Woodlands.ஒரு காபி குடித்து விட்டு மூன்று மணி நேரம் உட்கார்ந்திருப்போம்.அழுகை வருகிறது ஸ்ரீதர். எவ்வளவு சினிமாக்கள். ஞாபம வருகிறதா? இதைப் பற்றி பேசி கொண்டாடுவதற்கு நம் மக்களுக்கு என்ன தயக்கம்?. 

ஷோலே? 

என் மகள் மகனிடம் நான் ஷோலேவை சத்யம் தியேட்டரில் ரூபாய் 2.90 கொடுத்துப் பார்த்தேன் என்று சொன்னேன். ஆச்சரியப்பட்டார்கள். கிரிக்கெட்டில் field placement 
விளக்கும் போது, four slips, a cover,gully,mid off ,mid-on என்று விள்க்க்வது போல் என் பையனுக்கு ,சத்யமில் இங்குதான் மல்லிகை பூ விற்கும் பெண்,இங்குதான் லுங்கியில் பிளாக் டிக்கெட் விற்பவர்,கோன் ஐஸ்கீரிம்,நீயூ காலேஜ் மாணவர்கள் உட்காருமிடம்,ஜீன்ஸில் வரும் மார்வாடி பெண்கள், ஸ்டில்ஸ் வைக்கும் இடம்,கிர்ர்ர்ர்ர்ர்ர் என்று டிக்கெட் கொடுக்க அடிக்கும் மணி டிக்கெட் வைக்கும் அலுமினிய டப்பா என்று சொன்னேன். 

எல்லாம் ரொம்ப ஆச்சரியமாக இருந்தது அவர்களுக்கு.சத்யமில் பாப்கார்ன் விலை 50 ரூபாய் ,டிக்கெட் 110 ரூபாய் இன்று. 



எல்லா நிகழ்வுகளும் ஒரு விடியோவில் பதிக்கப்பட்டிருந்தால்
எப்படி இருக்கும்.


இலக்கியமெல்லாம் இப்போது எங்கோ போய் விட்டது.கதைகளும்,கவிதைகளும் மாறி விட்டது.உனக்குப் பிடித்த ”பூங்கொத்தோடு காதலியை சம்மதம் கேட்கப் போக அவள் வேறு ஒருவனை காதலிப்பது தெரிந்ததும்,பூங்கொத்தை அவர்கள் காதலுக்கு பரிசாக அங்கேயே (டீஸண்டாக) வைத்து விடுவது” எல்லாம் இப்போது கிடையாது. உன்னுடைய(நான்?) அ.ரமணன்,இந்துமதி,சிவசங்கரி,வாஸந்தி, ப.கோ.பிரபாகர்,ராஜேஷ் குமார்.சவீதா,பாலகுமாரன்,சுப்ரமணிய ராஜூ, மாலன்,சுஜாதா.ஜோதிர் லதா கிரிஜா,ஹேமா ஆனந்ததீர்த்தன் கிடையாது.


இப்போது இவர்களை ஒரு ரவுண்ட் படிக்கும் போது கதைகளின் ஊடே நம் பழைய நினைவுகள் வந்து போகிறது.ஆமாம் ஸ்ரீதர்.

ஸ்ரீதர் ஞாபகம் இருக்கிறதா?ஜெயகாந்தனைப் பார்க்க ஒரு முறை பார்க்கப் போனோம்.மொட்டை மாடி.ஜிப்பா. பஞ்ச கச்சம் .கையில் கஞ்சா சிலம் அவரை சுற்றி ஆடகள்.மிரண்டு போய் விட்டோம்.

இந்தக் கோலத்தில் (கஞ்சா)ஜெயகாந்தனை பார்த்தது மனம் சமாதானம் ஆகவில்லை.கஞ்சா சுற்றி வரும் போது அதை சாஸ்திரத்திற்க்கு தொட்டு விட்டு அடுத்தவரிடம் பாஸ் செய்தோம்.ஜெயகாந்தன் ஏதோ ஒரு கர்நாடக பாட்லைப் பாடினார்.பக்கத்தில் இருந்தவரிடம் ஜெயகாந்தன் பிராமிணா என்று கேட்டேன்.அவர் ஒன்றும் சொல்லவில்லை.வேறு ஏதும் பேசாமல் கிளம்பி விட்டோம்.

 தி.ஜா,கு.ப.ரா,பு.பித்தன்,கி.ரா.ஆதவன்,ஜெயந்தன்,பாலகுமாரன்,சி.சு.செ மெளனி,அ.மித்திரன் என்று நிறைய பேரின் கதைகளை அலசியிருக்கிறோம். அசோகமித்திரனின் “எலி” கதையை மறக்கவே முடியாது.நம் நண்பர்கள் பக்கத்தில் உட்கார்ந்து இதை ரசித்தபடி இருப்பார்கள்.அவர்களும் நம் தூண்டுதலால் படிக்க ஆரம்பித்தார்கள்.இலக்கிய சிந்தனை அமைப்பு என்ன ஆயிற்று ஏதாவது தெரியுமா?

சினிமா....?

அப்போது பாலைவனச் சோலை,குடிசை,தாகம்,பசி,தண்ணீர் தண்ணீர்,உறவு சொல்ல ஒருவன்,என்னைப் போல் ஒருவன்....பாதை தெரியுது பார்,அவள் அப்படித்தான், சாவித்திரி என்று offbeat சினிமா என்று சொல்லுவார்கள்அப்போது பாலசந்தர்தான் ஒரு புரட்சிகரமான டைரக்டர். யூனிபார்மில் போனால் கண்டு பிடித்து விடுவார்கள் என ஒரு செட் “அன்யூனிபார்ம்” கொண்டுவந்து மாற்றிப் போட்டு படம் பார்ப்போம். அந்த சட்டைகளின் கலர்கள் நிழலாடுகிறது.

அவள் அப்படித்தான் நம்மை ரொம்ப பாதித்தது என்று சொல்லலாம்.பாலு மகேந்திரா மகேந்திரன் இவர்களும் தான். அடுத்து Maestro இளையராஜா. அவரின் “காற்றின் எந்தன் கீதம்” பாடலை, prelude, First prelude,Second prelude அக்கு வேறு ஆணி வேறாக R&D செய்தோம்.Stereoவில் கேட்டு ஆடிப்போனோம்.அடுத்து ”பனி விழும் மலர் வனம்”

இப்படி மாத கணக்கில் சொல்லிக் கொண்டே போகலாம்.

ஜாகீர்,அய்யன்,வெங்கட்,முத்துவெல்லாம் ஒவ்வொரு நிகழ்விலும் ரத்தம் சதையுமாக இருந்தார்கள்.இந்த நினைவுகளைப் பகிர்வதில் என்ன அகெளரவம்? தயக்கம்?

நல்ல வேளை பகிர்ந்துக் கொள்வதற்க்கு உண்மையாகவே நீ இருக்கிறாய்.இல்லா விட்டால்? கதைகள் கவிதைகள்தான்.

ரொம்ப வருத்தமாக இருக்கிறது ஸ்ரீதர்.

அன்புடன்

கே.ரவிஷங்கர்


அடுத்து இந்த கடிதத் தொடருக்கு லக்கி லுக்கை அழைக்கிறேன்.


படிக்க:

கவுண்டமணி-செந்தில்-எலெக்‌ஷன் டைம்



Thursday, April 2, 2009

லிப்டில் அவன்- ஆறு டீன் ஏஜ் பெண்கள்


         கவிதை


ஏழாவது மாடியில் நின்று
திறந்த லிப்டில் - ஆறு
டீன் ஏஜ் பெண்கள்
அவன் ஏறினான்
ஆறு,ஐந்து,நான்கு,மூன்று
இரண்டு,ஒன்று,தரைத்தளம்
திறந்த லிப்டிலிருந்து excuse me
சொல்லி வாய்மூடி சிரித்து 
வெளியேறி நடந்தார்கள்
லிப்ட் கதவை மூடி
தான் செல்ல வேண்டிய 
எட்டாவது மாடிக்கு
பட்டனை அழுத்தினான்


படிக்க:-

கவுண்டமணி-செந்தில்-எலெக்‌ஷன் டைம்




கவுண்டமணி-செந்தில்-எலெக்‌ஷன் டைம்

கவுண்டமணி:" வாடா...மண்டையா..என்ன சோகமா இருக்க?”

செந்தில்: “இந்த கூட்டக் கண்டா பிடிக்கல”

கவுண்டமணி: “அப்ப... பொரியல் சாப்பிடு”

செந்தில்:”வெளயாடதீங்கண்ணே.நா சொலறது அரசியல் 
கூட்டு”

கவுண்டமணி:”ஓ.... தட் குரூப் ஸ்டாண்ட் அப் காமெடி....வாட் இஸ் தி மேட்டரு?"

செந்தில்:”யாருக்கும்.. ஓட்டு போடப் போறதில்ல”

கவுண்டமணி:”போடாத....நீயே வச்சுக்கட..எலெக்‌ஷன் 
ஏஜண்ட் தலயா.உன்னோட ஒரு ஓடலதான் பார்லிமெண்ட் 
நிக்கப் போகுது.”.

செந்தில்:”டமாஸ் பண்ணாதீங்கண்ணே... .”

கவுண்டமணி:”டமாஸ்ஸூம் பண்ணல டாஸ்மாக்கும்
பண்ணல”


செந்தில்: “இந்த தடவை இலைக்கு.....”

கவுண்டமணி:””என்னது இலைக்கா.....”

செந்தில்:”அதில்லெண்ணே....உங்கள மாதிரி பிரியாணி 
இலைக்கு கிழ வச்ச காச எடுத்துட்டு ஓட்டுப் போடவும் போறது இல்ல”

கவுண்டமணி:” கத்திப் பேசாதடா....எலெக்‌ஷன் டூட்டித் 
தலையா...”

செந்தில்:”வர வர யாரையும் பிடிக்கமாட்டேங்குது..போடாம 
வீட்லேயும் உட்காரப் பிடிக்கல..அதனால 25A(IDL) ல...”

கவுண்டமணி:””25A பஸ்ல எதுக்குப் போற..என்னடா சொல்ற”

செந்தில்:”குறும்ப விடுங்கண்ணே...உங்களுக்கு 
அவேர்னெஸ்ஸே இல்ல..”.

கவுண்டமணி:.”என்னது என்ன நெஸ் இல்ல...நீ என்ன 
எல்லாம் தெரிந்த ஞானியா?

செந்தில்:”அது ஒரு விதி. எந்த வேட்பாளரையும் பிடிக்கல 
அப்படின்னு எழுதி..கொடுக்கலாம்.” IDLன்னா ஐ டோண்ட் 
லைக்(I don't like)

கவுண்டமணி: ”அது என்ன "A", அடல்ஸ் ஒன்லியா?”

செந்தில்: ”எனிபடி,... அதாவது ”ஐ டோண்ட் லைக் எனிபடி”

கவுண்டமணி: ”சே!அடி பிண்ணிட்டாங்க...இருபது  
வருசத்துக்கு முன்னே நானே இந்த ஐடியாவை யோசிச்சேன்.
எனக்காகவே கொண்டுவந்த மாதிரி...புல்லரிக்குதுடா
இந்த ஐடியாவ கவர்மெண்ட்ல எண்ட்ரி பண்ணி 
வச்சுருக்கலாம்.சே....சரி..அந்தப் பாரம் வச்சு 
இருக்கியா? உன்ன எனக்கு பிடிக்கல...
கவர்மெண்டல எழுதி குடுக்கப் போறேன்..”

செந்தில்:””வெளயாடதீங்கண்ணே...யாருக்கும் வோட்டுப் 
போட பிடிக்கலன்னு எழுதி கொடுக்கலாம்..இது மாதிரி நிறைய 
பேர் எழுதிக்கொடுத்த எலக்‌ஷன நிறுத்திருவாங்க.முதல்ல 
கிராமத்து பஞ்சாயத்து தலைவர் எலக்‌ஷன்ல இத டெஸ்ட் 
பண்ணிப் பார்த்துட்டு அப்பறம்தான் அசெம்பளி,
பார்லிமெண்ட்ன்னு கொண்டு வருவாங்க.

கவுண்டமணி: “ சரி ஒரு கைப் பார்த்துருவோம்”

செந்தில் மனத்திற்குள் “அல்டாப் மாமாவுக்கு..டவுசர் கிழியப் 
போவுது”

கவுண்டமணி: “என்னடா... மனசுக்குள்ள டீப் திங்கிங்?”

செந்தில்:” இந்த விதிய நெனச்சேன்.. புல்லரிக்குது”.

கவுண்டமணி:”யாரோட விதி?”

செந்தில்:”அதாங்க ஐ டோண்ட் லைக்”

கிராமம். ஆலமர மேடை. ஜமுக்காளம். நாட்டாமை. செந்தில், க.மணி,வழக்கம் போல முகத்தில் ரோஸ் 
பவுடர் அப்பிக் கொண்டு புது வேஷ்டி சட்டை.மக்கள் கூட்டம்.

நாட்டாண்மை: “இந்த தடவை கிராமத்தலைவர் எலக்‌ஷனல மாணிக்கமும் அவர எதிர்த்து பொன்னுச்சாமியும் நிக்கிறாங்க. 
மாணிக்கத்தப் புடிச்சவங்க ஏணி சின்னத்தல போடுங்க.பொன்னுச்சாமிய புடிச்சவங்க படகு சின்னத்தலபோடுங்க.
யாருக்கு அதிக ஓட்டோஅவங்க கிராமத்தலைவர்.

கவுண்டமணி: “ஸ்டாப்...தி நாஸ்டி காமெடி....இந்த மொள்ள
மாரியும்,முடிச்சவிழ்க்கி ரெண்டு பேருமே மாறி மாறி வந்து 
நாறடிக்குறானுங்கோ. ஒரு ஃப்ரஸ்ஸா தலைவர் இல்லாம 
கிராமம் அழுகிப்போச்சுடா...பேமானிங்களா...”

நாட்டாண்மை: ”உனக்கு பிடிக்கலன்னா பொத்திக்கிட்டு போ...”.

கவுண்டமணி: ”அகேய்ன் ஸ்டாப்...தி நாஸ்டி காமெடி..எனக்கு ரெண்டு பேரையும் புடிக்கல என்னோடு எதிர்ப்ப 25A(IDL)
மூலமா தெரிவிக்கப் போறேன்.”
நாட்டாண்மை:” என்னது 25A இட்லியா.. வயலுக்கு புது பூச்சி 
மருந்தா?”

கவுண்டமணி:”டேய் ..மட்கார்டு தலையா...இந்த சொட்டைக்கு சொல்லுடா இவணுங்கெல்லாம் நாட்டு நடப்பு தெரியாம ஆலமரத்துக் கிழே தூங்கியே காலத்த ஓட்டறானுங்க.முதல் 
முதல்லா ஒரு “எதிர்ப்புப் புரட்சி” கொண்டு வரப்போறேன். 
எலகஷன் நிக்கப் போவுது“

செந்தில் நாட்டாமை காதில் ஏதோ சொல்லுகிறார்.முகம் 
சிவக்கிறது.மீசை துடிக்கிறது. மக்களுக்கும் 25A(IDL) விவரம் 
போகிறது.

நாட்டாண்மை எழுந்து நின்று,மக்களைப் பார்த்து கேட்கிறார்.” இந்த (க.மணியை காட்டி) இந்த டபுள் பேமானி.. துண்டு பீடிய ,வெட்டிபப்யல 25A இட்லிக்கு கிழ எவ்வளவு பேருக்குப் 
பிடிக்கல?.”

மக்கள் ஒவ்வொருவரும் “ஐ டோண்ட் லைக்” “ஐ டோண்ட் 
லைக்” கத்திக் கொண்டு கையில் அரிவாள்,கம்புகளோடு 
கவுண்டமணியை நெருங்குகிறார்கள்.

முற்றும்