Monday, January 31, 2011

சவம் தர மறுத்த மோதிரங்கள் - சிறுகதை

தங்கராசு வருவதற்கு அரைமணி நேரம் முன்புதான் வேலாயுதம் இறந்திருந்தார்.மிகுந்த துக்கத்தோடு அப்பாவைப் பார்த்தான்.மூன்று நாள் தாடி மீசை குச்சி குச்சியாய் துளிர்த்து அவர் சவம் என்றது.அப்பா இனி இல்லை.மனசு கொள்ளவில்லை.கண்களில் நீர் முட்டியது.

அடுத்து வந்த அக்கா தங்கைகளும் வீட்டில் நுழையும் போதே
கேவியபடிதான் நுழைந்தார்கள்.

இரண்டாவது மகன் சுதர்சனம் பார்த்ததும் மனதில் பொருமிக் கொண்டான்.குடும்பத்தின் மசமசப்பும் அசட்டுத்தனமும் விட்டப்பாடில்லை.பெரிய அண்ணன் மேல் எரிச்சலாயிற்று.

காரணம் அப்பாவின் கோலம்தான்.கால் கட்டை விரல் கட்டும் மூக்கில் பஞ்சும் இன்னும் வைத்தபாடு இல்லை.வியாதி வெக்கை பிடித்துத் தின்ன உடம்பை இப்படியா வைத்திருப்பது.கையும் காலும் விரித்து ஒரு மாதிரி கிடந்தார்.எல்லா விரல்களிலும் ஏதேதோ மோதிரங்கள்.என்ன ருசியோ?

அம்மா அண்ணன் அக்கா   தம்பிகள் மட்டுமாக  ஏழு பேர்தான் சவத்தின் பக்கத்தில் இருந்தார்கள்.எல்லோருக்குமே துக்கம் இறங்கி  அடுத்து உறைத்தது  அப்பா விரலில் இருந்த மோதிரங்கள்தான்.

பெரிய அண்ணன் உள்ளே இருந்து வந்தார். கையில் சோப்பு டப்பா.அப்பாவின் பக்கத்தில் உட்கார்ந்தார்.தங்கராசுவைப் பார்த்து சோகமாக புன்னகைத்தார்.வலது கை விரல் தங்க மோதிரங்களை கழட்ட முயற்சித்தார்.வழுக்கியபடி இருந்தது.எவ்வளவு பிரயத்தனப்பட்டும் கழட்ட முடியவில்லை.அப்பாவின் தொடையருகில் சோப்புத் தண்ணி நுரைத்தபடி குளம் கட்டி இருந்தது.

அண்ணன் கழட்டும்போது அப்பாவின் தலை ஆட்டலைப் மிரட்சியாகப் பார்த்தாள் பெரியக்கா. அண்ணனுக்கு உதவியாக  இடது விரல் மோதிரங்களை கழட்டலாமா என்று தோன்றிய எண்ணத்தை உடனே கைவிட்டாள்.

மோதிரங்கள்  உப்பிப்போன விரல்களில் சதைப் பிதுங்கி இறுக்கமாய்  பற்றி இருந்தது. குழந்தைத்தன உருவலில் அது விட்டுக்கொடுக்குமா? இந்த ஜன்மத்தில் அதை எடுப்பது கஷ்டம் என்று தங்கராசுவிற்கு தோன்றியது.

” அப்படியே இருக்கட்டும்.அவரு ஆசைப்பட்டு போட்டுக்னாரு” பெரியக்கா.

“ஒரு வாரம் மின்ன கூட சொன்னேன் இவராண்ட. எதுக்கு இத்தினி மோதிரம்னு. கேட்டதானே.....ராசி வாஸ்து அது இதுன்னு  டிவில பாத்து பிடிச்சிப்போய்  இப்ப இறுக்கிப் பிடிச்சிட்டு இருக்க மாதிரி அப்ப மனசுல பிடிவாதம் பிடிச்சிட்டுருந்தாரு. படுக்கைல கெடக்கசொல டாக்டர் கூட சொன்னாரு.முடியவே முடியாதுன்னுட்டாரு.நேத்துக் கூட சொன்னாரு.கேட்டாதானே. தங்கம் ரத்தத்துல கலந்து ஓடற மாதிரி பாவன ” மூக்கை உறிஞ்சியவாறே அம்மா .

”கட்டிங் பிளேயர் இருக்கா... ஈசியா எடுத்துடலாம்..”சுதர்சனம்

”அதெல்லாம் அவசரத்துக்கு எங்க கிடைக்கும்.அத வச்சு மெக்கானிக் மாதிரி குந்திகினு  எடுக்கற நேரமா இது. அவரே அத எடுத்திட்டு போவட்டும்.அத வுட்டுட்டு எல்லாருக்கும் துட்டி சொல்ற வழிய பாருங்க”.

“எங்க போய் இதெல்லாம் வாங்கினாரு” அம்மாவின் காதருகில் வாய்வைத்து தங்கராசு கேட்டான்

”யாரு கண்டா பணம் எடுத்திட்டு எங்கேயோ போவாரு.வரும்போது தினுசு தினுசா மாட்டிக்கினு வருவாரு.ஆனா நேத்து ஒண்ணு சொன்னாரு.”

’என்ன சொன்னாரு?”

“நா  பூட்ட கூட  அப்படியே விட்ருங்க. பித்ருவா போய் மோதிரல்லாம் நட்சத்தரமா  வானத்துல ஜொலிக்கும்னாரு”

கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேரஆரம்பித்தது.வெட்டியானிடம் கழட்டச்சொல்லி பார்க்கலாம் என்று பெரியண்ணன் சொன்னார்.”அவன் விரல வெட்டுவான். கம்னு கெட” அம்மா கிசுகிசுத்தாள்.

பிணத்தைக் குளிப்பாட்டும்போது அரைக் கயிற்றிலும் தங்கப் படங்கள் கோர்த்திருப்பது கண்ணில் பட்டது.அம்மா அதையும் எடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.தன்னோடு கொண்டு செல்வது பெருமையாகத்தான் இருந்தது அம்மாவுக்கு.

பதிமூன்று நாள் கிரியைகளுக்கு கிட்டத்தட்ட ஒன்றரை லட்ச ரூபாய் ஆகும்.இந்தப் பக்கமும் அந்த பக்கமும் வச வசவென்று சொந்தபந்தங்கள்.எதிலும் குறை வைக்க கூடாது.அப்பாவின் உடம்பில் இருக்கும் தங்கங்கள் இந்த விலைக்கு வரும்.

இப்போது கைகாசு போட்டுதான் செய்யவேண்டும்.அப்படியேதான் செய்தார்கள்.யாருக்கும் இதைப்பற்றி மனதாங்கல் எதுவும் இல்லை.இந்த குடும்பத்தில் எதற்கும் யாரும் சண்டைப் போட்டதில்லை.ரொம்ப நல்ல விஷயம்.

யாருக்கும் எந்தவித குறையில்லாமல் காரியங்கள் நடந்து முடிந்தது.

அடுத்த நாள் வானத்தில் ஜொலித்த  புது நட்சத்திரங்களை அப்பாவின்  மோதிரங்களாகப்  பாவித்து  சந்தோஷப்பட்டார்கள் குடும்பத்தினர்.

வெட்டியானால்தான் தங்கமாக பாவிக்க முடியவில்லை.பந்தாவிற்காக போட்டுக்கொண்ட போலி தங்க மூலாம் பூசிய கவரிங் மோதிரங்களை பிணத்தில் வாயில் போட்டு உள்ளே தள்ளிக் குத்தி எரித்தான்.

                                   முற்றும்


.

Dobhi ghat ஹிந்தி சினிமா

ஹிந்திப் படங்கள் பார்க்கும் வழக்கம் இல்லை.காரணம் மொழி
தெரியாது.இப்போது தைரியமாகச் சொல்ல முடிகிறது.”மொழி தெரிந்ததாக”  பிலிம் காட்டி  கல்லூரி  காலத்தில் பார்த்த படங்கள் Bobby,யாதோங்கி பாரத்,ஜவானி திவானி,டான்,தீவார், ஜுலி என்று பெரிய பட்டியல் நீளும்.காரணம் காலக்கட்டம்.


ஹிந்தியை எதிர்த்து உக்கிரமாக மொழி போராட்டம் நடந்த
அதே தமிழ்நாடுதான்  ஹிந்தி சினிமா மோகத்தின் பிடியிலும் இருந்தது ஒரு காலக் கட்டத்தில்.கொடுமை என்னவென்றால் பகீசா என்ற  உருது படத்தை ஹிந்திப் படமாக பாவித்து பார்த்தது பஞ்சமா பாதகங்களில் ஒன்று.ஐந்து வருடங்கள் கழித்துதான் தெரிந்தது.பகுத் துஷ்மன் வாலா ஹை?


ஒரு வார்த்தைக் கூட புரியாமல் வேறு ஒரு மொழியின் படத்தைப் பார்ப்பது சற்று அருவருப்பாக உணர நேரிட்டது ஒரு காலக் கட்டத்தில்.அடுத்த கால கட்டத்தில் ஒரளவுக்கு (20%) புரிய ஆரம்பித்தது.காரணம் வாசிப்பு அனுபவமும் காமென் சென்சும்தான்.

(கிழ் வருவது விமர்சனம் இல்லை.சும்மா ஒரு குறிப்பு)

நேற்று எதேச்சையாக Dhobi Ghat  என்ற ஹிந்திப் படம் பார்க்க
நேர்ந்தது.காரணம்  partly English என்றுப் போட்டிருந்தது.ஹிந்தியும் ஆங்கிலமுமாக வசனங்கள்.புரிந்தது ரொம்ப சந்தோஷம்.

 படம் ஓகே ரகம்தான்.ஆனால் நன்றாக எடுக்கப்பட்டிருந்தது.இரண்டு மூன்று சிறுகதைப் படித்தார் போல் ஒரு உணர்வு.ஹிந்திப் படங்கள் தொடர்பு விட்டுப்போய் பார்ப்பதால் எல்லாம் புத்துணர்ச்சியுடன் இருந்தது.

 Prateik Babbar,Monica Dogra

மும்பாய் நகரம் ஒரு பாத்திரமாக வருகிறது. ஆனால் அதை விட அதில் வரும் மூன்று கதாபாத்திரங்கள் மனதில் இடம் பெற்றுவிட்டது.எல்லாம் புதுமுகங்கள். முதல் படமாம.இயக்குனருக்கும் முதல் படம்.

வெளி ஊரிலிருந்து குடிப்பெயர்ந்து மும்பை வாழும் பாத்திரங்களுக்கிடையிலான உணர்வுகள்தான் கதை.
      
கிருதி மல்ஹோத்ரா

கதாபாத்திரங்கள் பெயர்கள் முன்னா,ஷாய், யாஸ்மின்.நடித்தவர்கள் Prateik Babbar,Monica Dogra,Kirti Malhotra.

அமெரிக்கா வாழ் இந்தியராக(உண்மையிலேயே அவர் ஒரு NRI மற்றும் பாடகராம்) வரும் மோனிகா தோக்ரா நடிப்பு அட்டகாசம்.சிக்கென்று இருக்கிறார்.அடுத்து கிரீதி மல்ஹோத்ரா.வெளி ஊரிலிருந்து வந்து மும்பாயில் வாழும் புது மணப்பெண்.பேசும்போது முகத்தில் பொங்கும் ஆர்வம்.

மூன்றாவதாக பிஹாரி சலவையாளராக நடிக்கும் பிரதீக் பாப்பர்.இவரும் கூச்ச சுபாவம் உள்ளவராக வந்து மனதை கவர்கிறார்.

படத்தைத் தயாரித்தவர் அமீர்கான்.இவரும் நடிக்கிறார். இயக்கியவர் இவர் மனைவி கிரன்ராவ்.


கிரன் ராவும் அமீர்கானும்


கொறிப்பதற்கு முதலிலேயே வாங்கி வைத்துவிட வேண்டும்.காரணம் இடைவேளை இல்லாமல்  முழுமூச்சாக 1.44 நிமிடம் ஓடும் படம்.

இசையும் ரொம்ப எளிமை.பாடல்கள் கிடையாது.கதையோடு ஒட்டி மனதைத் தொட்டது.

80களில் வந்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாமோ?


Monday, January 24, 2011

நித்ய கல்யாணி படிக்காத காதல் கடிதம்- கவிதை

நித்ய கல்யாணி படிக்காத காதல் கடிதம்

இரண்டாவது குறுக்குத் தெரு
தினமும்  எதிர்படும் நித்ய கல்யாணி
என்றுமில்லாமல் வித்தியாசமாக
புன்னகைத்தாள் இன்று

23-05-1974 ல் கொடுத்த
காதல் கடிதத்தை
இன்றுதான் படித்திருப்பாளோ

தயவு செய்து கதவை மூடவும்

ஊதுவத்தியா
பெர்ஃப்யூமா
மேல் வீட்டு கணேசனின்
தலைமுடி எண்ணெய்யா
மேல் நாட்டு பழமா
பவுடரா
ஆரெம்கேவியின் புதுப் புடவையா
வாசனைக் கட்டியா
விபூதியா

பிராணயாமம் செய்தபடி 
ஐந்தாவதில் இருந்து
ஒன்றுக்கு வந்து
கதவைத் திறந்து யோசிக்கையில்

தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
தயவு செய்து கதவை மூடவும்
 
உன் வாசனையாகவே
இருந்துத் தொலையட்டும்
கதவை மூடினேன்

காக்க காக்க மாவு காக்க
பூட்டிய வீட்டில்
பாத்திரத்திலிருந்து
பொங்கி வழிந்துக்கொண்டிருக்கிறது
இட்லிமாவு
காக்கும் கடவுள் விஷ்ணுவுக்கு
இன்று வேலை அதிகம்
தூங்கிவிட்டார்

 .

Saturday, January 22, 2011

புதிர்களுக்கு விடை என்ன சொல்லுங்கள்?

புத்தகக் கண்காட்சியில் நான் வாங்கும் புத்தகங்களை யாராவது வாங்கிப்பார்த்தால் சற்று குழம்புவார்கள். ஒரே கலந்துக்கட்டியாக இருக்கும்.எல்லா வகை புத்தகங்களும் இருக்கும். அதில் முக்கியமாக மறக்காமல் வாங்குவது மாயஜாலக் கதைகள்,புதிர்க் கதைகள்,நாட்டுப் புற கதைகள்.எல்லாம் “தமிழில்”.

முதலாக இந்தக் கதைகள் என் விருப்பம் சார்ந்து வாங்குவது.அடுத்து  நான் படிப்பதைப் பார்த்து என் மகனும்  ஈர்க்கப்பட்டுவிட்டான்.என் மனைவியும்.

நன்றி:ஆசிரியர்: எ. சோதி -நன் மொழிப் பதிப்பகம், புதுச்சேரி-605 003.

ஆனால் இதில் சில(புதிர்க்) கதைகளை செவி வழியாக
கேள்விப்பட்டும்,படித்தும்,தொலைக்காட்சியில் பார்த்தும் உள்ளேன்.

புதிர்க் கதைகளில் வரும் சில புதிர்களை விடுவிக்க முடியுமா என்று பாருங்கள்.

1.அரசன் ஊர்வலம் வரும்போது ஒரு நாய் ஒன்று அரசனின் விரலைக் கடித்துக் குதறிவிட்டது.காரணம் அரசனின் பர்சனல் காவல்காரனின் கவனக்குறைவு.

ஆத்திரத்தின் உச்சத்திற்குப்போன அரசன்  காவல்காரனைப் பார்த்து” இந்த நாயை நீயே உன் கையால் கொல். இதை நீ எப்படிக்கொல்கிறாயோ அதே முறையில் நான் உன்னையும் கொல்வேன்”.

உக்கிரமாக குரைத்துக்கொண்டே வந்த நாயைக் காவல்காரன் கொன்றான்.ஆனால்  அரசனால் அவனைக் கொல்லமுடியவில்லை?தப்பித்துவிட்டான். எப்படி?

(நாம்(பெரும்பாலோர்) இந்த நிலமையில்(வெலவெலப்பில்) இருந்தால் மென்மையாக சாகவேண்டும் என்று நாயை மென்மையாக சாகடிப்போம்)

2. ஒரு  பெரியரோஜா பூந்தோட்டத்தில் இளவரசியும் அவள் தோழிகளும் ரோஜாப்பூவை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து விளையாடுகிறார்கள்.அப்போது அங்கு வந்த ஒரு முனிவர் முகத்தில் பச்சென்று அடித்து முள் குத்தி எரிச்சலாகிறார்.அவர் as usual  கோபத்தில் அவளைப் பார்த்து சாபம் இடுகிறார்.” நீ இந்தப் பெரிய பூந்தோட்டதில் ரோஜாச் செடியாக மாறக் கடவது”


அவளும்  as usual அறியாமல் செய்த பிழை,சாபத்தில் டிஸ்கெளண்ட் உண்டா என்கிறாள். அதற்கு “பகலில் மட்டும் ரோஜாச் செடியாக இருப்பாய். இரவில் பழைய வடிவத்தில் இளவரசியாக மாறிவிடுவாய்.இங்கு இருக்கும் இந்தப் பெரிய ரோஜாப் பண்ணையில் உன்னை மட்டும் தோழியர் கண்டுப்பிடித்து வேரோடு தூக்கி எறிந்தால் நீ எப்போதும்  இளவரசியாக  இருப்பாய்” என்கிறார் முனிவர்.

இளவரசியும் தோழிகளுடன் ரூம் (அந்தப்புரம்?)போட்டு ரோஜாவை முகர்ந்துக்கொண்டே யோசித்து தப்பித்து விடுகிறாள்.எப்படி?

3. ஊருக்கும்  ஊருக்கும் இடையில் ஒரு பெரிய பாலம் இருக்கிறது.வெள்ளம் கிராமத்தை அழிக்காமல் இருக்கக் கட்டியது இந்தப் பாலம்.அதன் செலவை இதைக் கடப்பவர்களிடமிருந்து வசூலிக்க ஏற்பாடு.அதற்காக  ஒரு காவல்காரன்.யாரும் காசு கொடுக்காமல் பாலத்தை கடக்க முடியாது. முயன்றால் பொளேர் என்று ஒரு அறை அறைந்து “பிச்சிபுடுவேன் படுவா”என்று திருப்பி விரட்டிவிடுவான். யாரும் தப்ப முடியாது.

யாரும் அதைக் கடக்க இருபது நிமிடம் ஆகும்.அதனால் காவல்காரன் பத்து நிமிடத்திறகு ஒரு முறை  ரெஸ்ட்எடுத்துவிட்டு அடுத்த பத்த நிமிடம் காவல் காப்பான்.

ஒரு  ”ஐ”ஊர் வாலிபன்  ”ஆ”ஊர் காதலியை  அர்ஜண்டாக காதலிக்க செல்ல வேண்டும். இல்லையேல் லவ் கான்சல்.கடப்பதற்கு கையில் காசு இல்லை.வெகு தூரத்தில் ஆடு ஒன்று வருகிறது.திட்டம் போட்டு கடக்கும்போது மாட்டிக்கொள்கிறான். காவல்காரன் அறைந்து திருப்பி விரட்டி விடுகிறான். “ரொம்ப தாங்கஸ்ன்னா” என்று கடந்துவிடுகிறான்.காவல்காரன் முழிக்கிறான்.

எப்படி?


விடைகள்:
1. நாய் வாலைப் பிடித்து சுழற்றிக் கொல்கிறான்

2.மறு நாள் பகலில் ஒரு ரோஜாவில் மட்டும் பனித்துளி இல்லை.காரணம் பனி பெய்யும் இரவெல்லாம் அவள் இளவரசி. பகலில்தான் ரோஜாவாகி விடுவாள்.அதைப் பிடுங்கி எறிந்தவுடன் அவள் full time இளவரசி ஆகி விடுகிறாள்.

3.காவலன் ஓய்வெடுக்கும் சமயத்தில் பாலத்தைக் கடக்க ஆரம்பிக்கிறான்.”ஐ” ஊர் வாலிபன். பத்து நிமிடம் ஆனதும் அப்படியே திரும்பி நடந்து தான் “ஆ” ஊரிலிருந்து வருவதாக பாவ்லா காட்டி நடக்க, ஓய்வு முடிந்து காவலன் வெளி வந்து அவனைப் பார்த்ததும் ”காசு கொடுக்காத இவ்வளவு தூரம் நடந்து விட்டியா..திரும்பி ஓடுறா உங்க ஊருக்கு என்று விரட்ட அவன் “ஆ” ஊருக்கே ஜாலியாக ஓடுகிறான்.
.

Monday, January 17, 2011

பொன்னியின் செல்வன் படம் ஓடுமா?

கல்கி ரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி பத்திரிக்கையில் தொடர்கதையாக எழுதப்பட்ட பெரிய நாவல் “பொன்னியின் செல்வன்”.தொடர் வெளிவந்த காலம் 1950-55.(இது ஒரு சரித்திர வரலாற்றுப் புனைவு)அதற்கு பிறகு பல்வேறு காலக் கட்டங்களில் மீண்டும் மறு பிரசுரம் செய்யப்பட்டது. இது மற்ற தலைமுறைகள் படிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டது.

இதைப் படித்த முதல் தலைமுறை படித்ததை ரொம்ப பெருமையாக சொல்லிக்கொண்டிருப்பார்கள்.பலர் வீடுகளில் பழுப்பு நிற பைண்ட் புத்தகம் இருக்கும். புதுசை விட இதற்கு மதிப்பு அதிகம்.அடுத்த தலைமுறைக்கும் எடுத்துச்சென்றார்கள். அடுத்த தலைமுறையில் இதை 25% படித்திருப்பார்கள்.மீதி 75%முதல் தலைமுறை படித்ததாக சொல்லிக்கொண்டார்கள்.

இந்த நாவலுக்கு ரசிகப் பேரவைகள் இருப்பதாக கேள்வி.

பின்னர் தலைமுறைகள் மாறவும் சுற்றுச்சுழல்களும் மாறவும் படிப்பது குறைய ஆரம்பித்தது.ஆங்கில மீடியம் படித்த தலைமுறை அதிகமாயிற்று.

பைண்ட் புக்குகள் மக்கிப்போய் கடைக்குப்போயின.போகாமல் வீட்டில் இருந்தாலும் அதை தான் படிக்காமல் தாத்தா படித்தது, பாட்டி படித்தது என்று பில்ட் அப் கொடுத்துக்கொள்கிறது ஒரு தலைமுறை.புத்தகக் கண்காட்சியிலும் சில பேர் ஆர்வமாக வாங்கியபடி இருந்தார்கள்.வயது 45க்கு மேல்

சாதாரண இருபது பக்கம் படிப்பதற்கே இந்த தலைமுறைக்கு நேரமில்லை.இருக்கும் நேரத்தில் கைப்பேசியில் வரும் குறும்செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கிறார்கள்.ஆசை இருந்தாலும் மூத்தத் தலைமுறைக்கும் பொறுமை இல்லை.இருக்கும் நேரத்தில் தொலைக்காட்சிதான்.

நானும் இரண்டாவது தடவைப் படிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கிறேன். முக்கிய காரணம் முதல் தடவை இருந்த அதி உத்வேகம் இப்போது இல்லை. காரணம் மாறிவிட்ட சூழ்நிலைகளும் பெருகிவிட்ட ஊடகங்களும்.

ஆனால் அப்போது எப்பேர்பட்ட ஆர்வம்!ரொம்ப அருமையாக இருக்கும்.அதில் வரையப்பட்ட சித்திரங்களுடன் வாழ்ந்ததுண்டு.நினைத்தால் பெருமையாக இருக்கிறது.பல பேர் இன்னும் விடாமல் ஆர்வத்துடன் ரிவைஸ் செய்கிறார்கள்.

அரசியல்வாதி வைகோ பேச ஆரம்பித்தால் நாள் முழுவதும் பேசிக்கொண்டே இருப்பார்.


சில பேருக்கு ஆசை இருக்கிறது.ஆனால் நேரம் இல்லை.தொலைதூர பஸ்ஸிலோ,ரயிலிலோ, காரிலோ பைண்ட் புக் நாவல் படிக்கும் மனிதர்கள் ரொம்ப ரொம்ப அரிதாகிவிட்டார்கள்.

இப்போது பொன்னியின் செல்வனை திரைப்படமாக எடுக்கப்போவதாக ஊடகங்கள் சொல்கிறது.எம்ஜியாரும் கமலும் கூட எடுப்பதாக பேச்சு இருந்தது ஒரு காலத்தில். எடுத்தால் ஓடுமா?ஓடுமா என்று கேட்பது கூட அபத்தமாக இருக்கிறது.இது 100/250/300 நாள் ஓடும் படங்கள் காலம் அல்ல.நாற்பது நாள் ஓடுவதற்கு 400 கோடி.வலிந்து 100 நாளும் ஓட்டலாம் சன் குழுமம்.

மணிரத்னத்தின் தனிமனித ரசிப்புக்காக எடுக்கப்படுகிறதோ?சரியாக இல்லாவிட்டால் தொலைந்தார்.

சரித்திர/புராண/மாயஜாலப் படங்களின் கெ(செ)த்து போய் பல பல வருடம் ஆகிவிட்டது.சமீபத்தில் வெளி வந்த உளியின் ஓசைப் பற்றிக் கேட்டால் கழகக் கண்மணிகளே அலறுகிறார்கள்.

ராமாயணம் மகாபாரதம் சீரியலுக்கு இருந்த மவுசு கூடபோய் விட்டது. தொலைக்காட்சியிலும் சரித்திரக் கதைகள் வருவதில்லை.சமூகப்படத்திலேயே ராஜா ராணி வேடத்தில் வரும் டூயட்டுகள் போய்விட்டது.

டிரெண்ட் வேறு அடிக்கடி மாறுகிறது.நாம் எங்கோ வந்துவிட்டோம்.உளவியலாகப் பார்த்தால் சரித்திரபட கதா நாயகர்கள்/வசனங்கள் நமக்கு அன்னியமாவதால் நம்மால ஒட்ட முடிவதில்லை. வீணாப்போன மசாலா படத்தில் லயக்கிறோம்.

இம்சை அரசன் கூட நகைச்சுவையினால் ரசிக்க முடிந்தது.

அடுத்து நிச்சியமாக படம் மூணு மணி நேரம் ஓடும்.பொறுமை இருக்குமா?

O.A.K.தேவர்,சிவாஜி,அசோகன்,ரங்கராவ்,மனோகர்,ராமதாஸ், பகவதி,செந்தாமரை,எஸ்.ஏ.கண்ணன்,மேஜர்,,வீரப்பா இன்னும் பிற போன்றவர்களின் கம்பீரம் இப்போது இருக்கும் நடிகர்களிடம் இருக்குமா?வசனத்தை சரியாக உச்சரிப்பார்களா?பரட்டைத் தலையுடன் மதுரை பாஷை பேசி
நடிக்க நிறைய பேர் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.டாட்டா சுமோவில் இறங்கி “சங்க அறுத்துடுவோம்ல” என்று பேசும் வில்லன்கள் இதில் பொருந்தி வருவார்களா?

சாதாரணமாக  சமூகப்படத்திலேயே நம்  பிரபல கதாநாயகர்களை  வேட்டி சட்டையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் விரும்புவதில்லை.அப்படி இருந்தால் இரட்டை வேடம் கொடுத்துவிடுவார்கள்.ஒருவர் கிராமத்தான் இன்னொருவன் நகரத்தான்.

நிறைய ஹோம்வொர்க் செய்து சுவராஸ்யமாக எடுக்க வேண்டும்.எடுத்தால் யார்தான் ரசிக்க மாட்டார்கள்.

.

Sunday, January 16, 2011

சிறுத்தை/ஆடுகளம்/காவலன்/ஒரு பார்வை


சிறுத்தை -தூங்கினாலும் தள்ளி நின்று ஒரு பார்வை



ஆடுகளம் - இரவில் ஒரு பார்வை


காவலன் -இவர் தூங்காமல் உஷாராக இருப்பதால் இவரின் ஒரு பார்வை.

Saturday, January 15, 2011

இளையராஜா- King of Vibrating Veenai

இப்பதிவில் இளையராஜாவின் சினிமா பாடல்களில் இசைக்கப்படும் வீணை நாதங்களை பார்க்கப்போகிறோம்.
வீணை இசைக் கருவிகளின் ராணி என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.இதன் முன்னோடி யாழ் என்ற இசைக்கருவி.திருவள்ளுவர் “குழல் இனிது யாழ் இனிது” என்று ஒரு குறளில் சொல்லி இருக்கிறார்.”மாசில் வீணையும்”அப்பர் பாடி இருக்கிறார்.


 
(ராஜாவிற்கு வீணை வாசித்த புண்யா ஸ்ரீனிவாஸ்)

கல்வி கடவுள் சரஸ்வதியும் கையில் வீணையுடன்.நாரதர் கையிலும் வீணை உண்டு.ராவணன் வீணை சாம கானப்ரியன்.அகஸ்தியரும் வீணை வாசிப்பார்.


 ( வீணை ஈ.காயத்ரீ ஆரம்பகாலங்களில் இவர் ராஜாவிற்கு வாசித்தவர்)
 
சில எண்ணங்கள்:
  • பொது வழக்கில் கருவிகள் "வாசிக்கப்பட்டாலும்" வீணையின் நாதம் ஸ்பெஷலாக “மீட்டெடுக்கப்படுகிறது”
  • இதயத்தின் அருகே வைத்து மீட்டுவதால் ஆத்மார்த்தமாகவும் ஆழமாகவும் நாதம் வருகிறதோ?
  • பழைய படங்களில் பொதுவாக இது பரத நாட்டியத்திறகும், பக்திக்கும் நிறைய வாசிக்கப்பட்டிருக்கிறது.அடுத்துதான் டூயட் வருகிறது.
  • இளையராஜாவிற்கு முன்பு எல்லாம் 90%நேரடியாக வாசிக்கப்பட்டிருக்கும். fusion கம்மி.
  • பொது வழக்கில் பெண்ணுக்கு வீணையும் ஆணுக்கு புல்லாங்குழலும் தொடர்புப்படத்தப்படுகிறது
  • இதிலும் சோகம்,மகழ்ச்சி,தியானம்,புல்லரிப்பு,கனிவு இத்யாதி உணர்ச்சிகள் மீட்டெடுக்கப்படுகிறது
  • நேரடியாக,சந்தில் சிந்து,மின்னல்,நீண்ட,துளி எல்லா அளவுகளிலும் வீணை நாதம்  ராஜா இசையில் கோர்க்கப்படுகிறது. 
  • வயலினை exploit செய்தார் போல் இதை செய்யமுடியாது என்று என் கணிப்பு.முடிந்தவரை  exploit செய்திருக்கிறார்
  • இளையராஜாவின் வீணை நாதம்............
 பேசுதல்/நெகிழ்தல்/உருகுதல்/சிரித்தல்/வெட்கப்படுதல்/புலம்புதல்/சிலிர்த்தல்/அழுதல்/விரகதாபம் எல்லாம் இசைக்கிறது.

எல்லாவற்றிலும் “ஆத்மா” இருக்கிறது.

வீணையில் வாசிக்கப்படும் கர்நாடக இசையைக் கேட்பது ஒரு தனி சுகம்.அது ஒரு கடல்.கேட்பது எனக்கு சுலபம். எழுதுவதற்கு பண்டித ஞானம் இல்லை.


(ஆடியோ தகராறு செய்தால் முழுவதும் ஓடவிட்டு கேட்கவும்).

போவதற்கு முன்......

Veenai Ennule.mp3


துணை இருப்பாள் மீனாட்சி(1977)-சுகமோ ஆயிரம்
Veenai Sugamoaayiram.mp3

ஆறிலிருந்து அறுபதுவரை (1979)-கண்மணியே காதல்
VeenaiKanmaniye.mp3

தீபம்(1977) -அந்தப்புரத்தில் ஒரு மகாராணி
சாமந்திப் பூக்கள் மலர்கிறது.இரு சந்தன தேர்கள் அசைகிறது வீணையின் மீட்டலில்.0.21-0.24 வீணை வயலின் நாதப் பின்னல்கள் அருமை.இதுதான் மேஸ்ட்ரோவின் கற்பனை வளம்.
Veenai Anthapurathill.mp3


கண்ணே கலைமானே(1988)-நீர்விழ்ச்சி தீ மூட்டுதே
வித்தியாசமான மீட்டல்,தாளம்.அளவெடுத்து வீணையும் தாளமும் இசைக்கப்படுகிறது.
VeenaiNeervizhchi-KanneKalai.mp3

இசைஞானிக்குப் பிடித்த பழைய பாடல்.பாக்கியலஷ்மி(1961)
மாலைப்பொழுதில் மயக்கத்திலே.இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

இதில் 0.07-.10 அண்ட் 0.11-0.14 மீட்டல்களை கவனியுங்கள்.இதில் இன்ஸ்பயர் ஆகிறார் மேஸ்ட்ரோ.
VeenaiMalaipozhuthin.mp3

பிறகு தன் இசையில் கற்பனை கலந்து  fusion ஆகி வருகிறது.
அது பகவதிபுரம் ரயில்வேகேட்(1983)- காலை நேரக்காற்றே
இதில் 0.02-0.04 அண்ட் 0.07-0.08 கவனியுங்கள்.மற்றொரு கருவி என்ன பெயர்? யாராவது தெரிந்தால் சொல்லுங்களேன்.
Veenai Kalainera katre.mp3



நீங்கள் கேட்டவை(1984)-ஓ வசந்த ரோஜா
இசைப் பூச்சரத்தில் மூன்று இடங்களில் அழகாகத் தொடுக்கப்பட்டிருக்கிறது.
Veenai-O Vasantha Raja.mp3

சிந்துபைரவி(1985)-பூமாலை வாங்கி வந்தேன்
VeenaiPoomaalai-Sindhu.mp3

புதிய வார்ப்புகள்(1978)-தம்தனனம் தனனம்
வீணையும் வயலின்களும் உரையாடுகிறது. வித்தியாசமான துளிகள். வயலின்  இசை உணர்ச்சிக்களுக்கு தோதாக வீணையின் நாதமும்.
Veenai thamthananam.mp3

கன்னிராசி(1985)-சுக ராகமே சுக போகமே
VeenaiSugaRagame.mp3

அலைகள் ஓய்வதில்லை(1981)-காதல் ஓவியம்
அட்டகாசமான Fusion.இசையின் போக்கு வெஸ்டர்ன் கிளாசிகலாக போகிறது.ஆனால் இடையே நம்ம ஊர் வீணை நாதம் இணைக்கப்பட்டு மீண்டும் வெஸ்டர்ன் கிளாசிலாக போகிறது.வேறோரு உலகத்திற்கு தூக்கிச் செல்லும் இசை.பிரமிக்க வைக்கிறார் மேஸ்ட்ரோ.
 Veenai NathiyiladumKathal Oviyam.mp3

இரண்டாவது ஆடியோ(இதில் துண்டாகிவிட்டது)
Veenai Kathal Oviyam.mp3

பழசிராஜா(2009)-குன்னத்தே
நாதத்தில் எத்தனைக் கனிவு.வயலினும் கனிவுக்கு பணிகிறது.அபாரம். 
VeenaiPazhazi-Kundrathu.mp3


இளமைகோலம்(1980)-ஸ்ரீதேவி என் வாழ்வில்
VeenaiSridevienvazhvil.mp3

மீண்டும் கோகிலா(1981)-சின்னஞ்சிறு வயதில்
0.06-0.09 மீட்டல் ஏதோ சொல்கிறது.
VeenaiChinnachiru-Vaya.mp3

எத்தனை கோணம் எத்தனைப் பார்வை(1983)-அலைப்பாயுதே கண்ணா
Veenai- Alaipayuthe Kanna.mp3

நிழல்கள்(1980)தூரத்தில் நான் கண்ட
Veenai Dhooraathil.mp3

வைதேகி காத்திருந்தாள்(1984)-இன்றைக்கு ஏனிந்த
நாட்டியத்திற்கு ஏற்ப வீணை இசை. 0.19-0.31 வரும் ஒரு நாதம் (வீணை அல்ல) உருக்குகிறது.வயோலா என்று யூகம்.
Veenai Indraikkuenintha.mp3


ராஜபார்வை(1981)-அழகே அழகே
VeenaiAzhake azhake.mp3

வியட்நாம் காலனி(1994) - கைவிணையை ஏந்தும் கலை 
சிதார் மாதிரி இருக்கிறது. வீணை?
VeenaiVietnam Colony.mp3 


மோகமுள்(1995) சொல்லாயோ வாய் திறந்து 
எனக்குப்பிடித்த ஒன்று.Full of emotions.0.18ல் சொட்டும் வீணை நாதம் stunning
Veenai-Sollaayo-Moga.mp3

பயணங்கள் முடிவதில்லை(1982)-தோகை இள மயில் ஆடி
"அன்னமே இவளிடம் நடைபழகும்..இவள் நடை அசைவில் சங்கீதம் உண்டாகும்...”இசையில் காட்டுகிறார்.

VeenaiThogaiIlamayil.mp3 

 நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
 VeenaiPaadumVanam.mp3

உனக்காவே வாழ்கிறேன்(1986)-இளம்சோலை பூத்ததோ
 தமிழ்ப்படங்களில் காதலியை பரத நாட்டியம் ஆட விட்டு கதாநாயகன் ஜிப்பா சால்வையோடு (ரொமப் அனுபவித்து)பாடுவது ஆயிரம் காலத்துப் பயிர் ஆகிவிட்டது.மாத்துங்கப்பா..!

VeenaiThogaiIlamayil.mp3

பத்ரகாளி(1977) - கண்ணன் ஒரு கைக்குழந்தை
Veenai-KannanOru.mp3

தீர்த்தக்கரையினிலே(1987)-விழியில் ஒரு கவிதைப் படித்தேன்
சின்னத் துளிகள் அருமை.
Veenai- Vizhiyil Oru.mp3

கோயில்புறா(1981) வேதம் நீ
Veenai Vedham nee.mp3

நாயகன்(1987)-நீ ஒரு காதல் சங்கீதம்
 Veenai Neeorukathal.mp3

காதல் ஓவியம்(1981)நதியில் ஆடும் பூவனம்
Veenai NathiyiladumKathal Oviyam.mp3


எம் எஸ் விஸ்வநாதன் அவர்களின் இசையில் “வீணை பேசும் அதை மீட்டும் விரல்களை கண்டு”படம்: வாழ்வு என் பக்கம்(1976).ரசிப்பது இதன் மெலடி/பாட்டின் கவித்துவம்/ஒரு ஹம்மிங்.
Veena(MSV) Veenai Pesum.mp3


டெயில் பீஸ்
பைனாகுலர் வைத்துப்பார்க்கிறேன் கடந்த 12 வருடத்தில் எவ்வளவு பாட்டுக்களில்(ராஜாவையும் சேர்த்து)வீணை நாதம் வந்திருக்கிறது என்று.சினிமா கதையெல்லாம் மாறிப் போய்விட்டது.நல்லதோர் வீணை செய்தேன்.அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ..சொல்லடி சிவசக்தி?

.

Thursday, January 13, 2011

லஞ்சம் வாங்கினால் குஷ்டம்

இந்தப் பிரபஞ்சத்தில இருக்கிற காற்றை ஒழித்தாலும்
லஞ்சத்தை ஒழிக்க முடியாது.நான் ஆட்சிக்கு வந்தால் லஞ்சத்தை ஒழிப்பேன் என்கிறார் பேசும்போதெல்லாம் கறுப்பு எம்ஜியார் கேப்டன் விஜயகாந்த்.இது விருதகிரி படத்திற்கு ஓகே.நடைமுறையில்?

சிவப்பு எம்ஜியாரும்,ஆட்சிக்கு வருவதற்கு முன்  இந்த லஞ்சத்தை ஒழிப்பேன் டயலக்கை அடிக்கடி சொல்லிக்கொண்டிருந்தார்.இதெல்லாம் முழு நீள காமெடி என்று அவருக்கே தெரியும்.எல்லாம் கைமீறி போய் அவரும் அதில் விழுந்தார்.

சைக்கிளில் டபுள்ஸ் போனதற்கு அபராதம் ரூ2/-க்கு பயந்து பதினைந்து பைசா என் அண்ணன் கொடுத்ததைப் பார்த்தேன்.இப்போது 2Gஐ பார்த்துக் கொண்டிருக்கிறேன்.நானும் பல சந்தர்ப்பங்களில் கொடுத்துள்ளேன்.வாங்குபவனிடம் மாரடிப்பதற்கு தெம்பு நேரம் இல்லை. இதுதான் பெருகுவதற்கு முக்கிய காரணம்.

பொதுமக்களும்  பஞ்சபூதத்தில் லஞ்சமும் ஒன்று என்று பழகிவிட்டார்கள்.

ஒழிப்பதற்கு ஒரு வழி.லஞ்சம் வாங்கினால் கொடுத்தால் அடுத்த நாளே “குஷ்டம்” வரவேண்டும்படி கடவுள் செய்யவேண்டும்.நோய் எதிர்ப்பு மாத்திரை ஏதாவது போட்டுக்கொண்டு வாங்க ஆரம்பித்தால் முதலில் கைக்குப் பதிலாக கண் அழுக ஆரம்பிக்கும்.

சில இஸ்லாமிய நாடுகள்போல் கடுமையாக தண்டனை வைத்தால் அதிலும் நம்மவர்கள் லஞ்சத்தைப் புகுத்தி தப்பிப்பார்கள்.

குஷ்டம் சீப் & பெஸ்ட்.
________________________________________

”மாமா.. என்ன உட்ருங்க. என்னல முடியல.போதும் மாமா... போதும் மாமா..! .” அப்படின்னு சொல்லனும்டா உனக்கு வர பொண்டாட்டி.எவ்வளவு சுகம் இருந்தாலும் இந்த சுகம் முக்கியம்டா. நா உங்க தாத்தா மாதிரிடா..உன் கிட்ட இருக்கிற குறைய எங்கிட்ட தைரியமா சொல்லுடா. நீ எப்ப வேணா வரலாம்.எல்லா உரிமையும் எங்கிட்ட எடுத்துகிடுடா. ஒரு தாத்தாகிட்ட பேரன் பழகுகுற மாதிரி தாண்ட். பேரனுக்கு ஒண்ணுண்ணா தாத்தா பதற மாட்டாரா? (அழுகிறார்).அப்பாயிண்ட்மெண்ட் தேவை இல்ல.எப்ப வேணாம் வரலாம்.வாடா...காலையிலிருந்து ராத்திரி எப்ப வேணாம் வரலாம்.கூச்சப்படாத தாத்தாகிட்ட சொல்லலாம்.”

ராஜ் டிவியில் சித்த வைத்தியர் சேலம் சிவராஜ்

”அய்யோ  தாத்தா என்ன உட்ருங்கோ...”
________________________________________

”பூவே செம்பூவே “ என்ற அருமையான பாட்டு “சொல்லத் துடிக்குது மனசு ”படத்தில் வருகிறது.படம் மறந்தே போச்சு. பூஞ்சகாலன் பூத்த தொலைக்காட்சி ஒன்றில்  ஒரு நாள் இந்தபடம் போட்டார்கள்.”இதோ இப்ப வந்துரும்... ” என்று எதிர்ப்பார்த்து  எதிர்பார்த்து எதிர்பார்த்து எதிர்பார்த்து
எதிர்பார்த்து கொட்டாவி விட்டுக்கொண்டே இருக்க  படம் முடியும் தருவாயில்தான் வருகிறது.இந்தப் பாட்டிற்க்காக மொக்கைப் படத்தை தாங்கிக்கொள்ள வேண்டியதாயிற்று.

இதே மாதிரி “நந்தா என் நிலா” படத்தில் வரும்
“நந்தா நீ என் நிலா" பாட்டும் எதிர்பார்த்து.. எதிர்பார்த்து.. எதிர்பார்த்து.. எதிர்பார்த்து  கடைசியில்.

.

Monday, January 10, 2011

புறாக்களும் சித்த வைத்தியமும் -கவிதை

சமயலறைப் புறாக்கள்
தினமும்  ஜன்னலில்
புறாக்கள் வந்துபோய்க்
கொண்டிருக்கின்றன
ரொமப நாள் பழக்கம்
அவைகள் இஷ்டம் போல்
இருக்கிறது

ஒன்றும் சொல்வதில்லை

குக்கர் விசில் எண்ணிக்கைகளில்
என்றாவது குழப்பம் வந்தால்
அவைகளிடம் கேட்டு வைப்பேன்

சித்த வைத்தியர்
ரொம்ப நாளாக
தலைமறைவாகித்
தப்பிக்கொண்டிருந்தேன்
நேற்று இவரின்
முழுப் பேச்சையும்
கேட்டுவிட்டேன்
தொலைக்காட்சியில்

ஒரு  பயம்தான்

இல்லாவிட்டால்
கை கால் நடுக்கம்
கண் எரிச்சல்
தூக்கமின்மை
தகுந்த நேரத்தில் முடியாமை
சக்தி சிறுநீரில் கலந்து போகுதல்
இவைகளில் எதையாவது
ஒன்றைச் சொல்லி
சபித்துவிட்டால்

.

Sunday, January 9, 2011

சாரு நிவேதிதா நாவல் "தேகம்" -விமர்சனம்

சாரு எழுதிய “எக்ஸிஸ்டென்ஷியலிசமும் பேன்சி பனியனும்” தான் முதலில் வாங்கிய நாவல்.பின்நவீனத்துவ நோக்கில் எழுதப்பட்ட முதல் நாவல்?(இது அவரே சொல்லிக்கொண்டது)மற்றபடி அவரின் பத்தி
எழுத்துக்கள்தான் அறிமுகம்.

பேன்சி பனியனை முப்பது பக்கத்திற்கு மேல் படிக்க முடியாமல்
மூடி வைத்ததுதான். ஆயிரத்தோரு அரபிய இரவுகள் கணக்காக சுவராசியமில்லாத அதே சுயபுராணம்.சம்பாஷணைகள் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கும் அலுப்பூட்டும் நான்லீனியர் டைப் விவரிப்புகள்.

கடைசிவரை அதைப் படிக்க முடியவில்லை.நேற்று அவரின் புது நாவலான  “தேகம்”(ரூ 90) புத்தகக் கண்காட்சியில் வாங்கினேன்.

மிகவும் கஷ்டப்பட்டுப் படித்தேன்.ஒரு வழியாக (”வதை”க்கப்பட்டேன்)முடித்தேன்.ஏன் வாங்கினோம் என்று ஆயிற்று.சுவராஸ்யமே இல்லை.

கொஞ்சம் கூட ஒட்டவே இல்லை.காரணம் ஆழம் இல்லை. வதையில் அதிர்வு இல்லை.காமா சோமாவென்று அசட்டுத்தனமான நாவல்.கோர்வை இல்லை.கதைச்சொல்லி  விவரித்ததைவிட நேரலையாக வதை சம்பவங்களை விட்டிருக்கலாம். Action Packed இருந்திருக்கும். சாதாரண ஒரு குறும்படத்தில் கூட ரத்தமும் சதையுமாக சாதாரண டார்ச்சரைக் காட்டி அசத்துகிறார்கள்.

கோணங்கியின் “கழுதையாவரிகள்” கதையில் வரும் கழுதைகள் இன்னும் மனதை விட்டு அகலவில்லை.இதில் வரும் பன்றிகள்??????

இந்த மாதிரி நான் லீனியர் அல்லது பின் நவீனத்துவம்(?) எழுதுவதைகூட ஒரு திறமையுடன் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன்.இதில் அது இல்லை.

இவர் ஜீனியர் விகடனில் வரும் கிரைம் சம்பவங்கள் மற்றும் ஆபாச இணைய தளங்களில்  காட்டப்படும் bizzare/weird sexual actக்களுக்கு கொடுக்கப்படும் பெயர்கள்,தோற்றங்கள் இரண்டையும் சேர்த்து இவற்றுடன் இலக்கியத்தை கலந்து மிக்ஸியில் அடித்து கொடுத்து அசட்டுத்தனமாக ஆகிவிட்டது.எழுத்து தொளதொளவென்று இருக்கிறது.

பொதுவாகவே இவர் தான் தெரிந்துக்கொண்ட sexual slang சொற்களை அடிக்கடி விளக்கம் கொடுத்து எழுத்துக்களில் ”காட்டிக்”கொள்வார்.


அடுத்த எரிச்சல் மீண்டும் சுயபுராணம்.இந்த நான்லீனியர் டைப்பில் வசதியாக எதை வேண்டுமானால எந்தப்பக்கத்திலும் ஆரம்பிக்கலாம்.முடிக்கலாம்.வசதியானது.
மனதில்தான் ஒட்டமாட்டேன் என்கிறது.நானும் பின் நவீனத்துவமாக டியூன் பண்ணிக்கொண்டு படித்தும் பார்த்தேன்.ஒட்டவில்லை. காரணம் எழுத்தில் சத்தியம் இல்லை.

தி.ராஜேந்தர் படங்களில் காணப்படும் அச்சுபிச்சுத்தனம் தெரிகிறது.

அதற்கடுத்து பாசாங்குத்தனமான சம்பந்தமே இல்லாத உபநிஷத்/ஜென்/ஹாம்லெட்/ராமாயணம்/ஹடயோகம் என்று  மேற்கோள் கொடுத்து பிலிம் காட்டுகிறார்.
எரிச்சல் ஊட்டுகிறது.

கலவி விஷயங்களில் யதார்த்த வசனங்கள் வைத்தவருக்கு இதில் வரும் ரெளடிகள் சென்னைத் தமிழின் மிக முக்கிய கெட்டவார்த்தைகளான ”...தா” ”..ளா” உபயோகிக்காமல் எப்படி பேசுகிறார்கள் ?

.

Friday, January 7, 2011

முலையில் தேங்கிய விழிகள் - கவிதை

முலையில் தேங்கிய விழிகள்
அன்றைய முடிவில்
புத்தம் புது முலையில்
நிறைய விழிகள் படிந்துவிட்டது

எல்லாவற்றையும் உதிர்த்து
கைகளில் போட்டுக் குலுக்கினாள்
கண்ணாடி கோலிகுண்டுகளாய்
ஒலியெழுப்பிக் குலுங்கியது
உற்றுப் பார்த்து தேடினாள்

சிலது வழுக்கி மறைந்தது
மரணவிழிகள் விழித்து
பலது மூடிக்கொண்டது
சில பெண்கள் குழந்தைகள்
அடியில் சில குருட்டுக் கண்கள்
அதற்கடியில் குடும்பக் கண்கள்

மீண்டும் குலுக்கினாள்
முலைக் காம்புகள் விறைக்க
தேடிய ஜோடி பயத்துடன்
வெளிவந்தது

நினைவாக
பனிக்கட்டியாய்
உறைந்த ராட்ஷச அருவிகள்
குளியலறை குழாயில்
விட்டு விட்டு சொட்டும்
நீர் துளிகளில்

பாஸ்போர்ட் சைசில் இறந்தவர்கள்
இறந்த பிறகு சிரித்தபடி
போஸ் கொடுக்கமுடிவதில்லை
முதலிலேயே பாஸ்போர்ட் சைசில்
சிரித்துவிடுகிறார்கள்

அரை சதவிதம்  அதிக வட்டிக்காரர்கள்
நிறைய இறந்திருக்கிறார்கள்

ஸ்கேன் செய்து பார்த்ததில்
சில பேர் தாங்கள் இறந்துவிட்டதாகவும்
சிலபேர் இறைவனடி சேர்ந்ததாகவும்
யாரோ சிலர் யூ டர்ன் எடுக்க
முயல்தாகவும்
உறுதி செய்துக்கொள்ள
இப்போதே பாஸ்போர்ட் சைஸ்
தயார் செய்துக்கொள்ளுமாறு
பிரிண்ட் அவுட் சொல்கிறது
.

Thursday, January 6, 2011

இளையராஜா- King of Enchanting Violins -2

இது பதிவின் இரண்டாவது பாகம். முதல் பாகம் கிழே சொடுக்குக:
இளையராஜா- King of Enchanting Violins -1

(வயலின போட்டு இந்தப் பாடுபடுத்தி பம்பரமா ஆட்டிவைக்கிறாரு)



போன பதிவில் பின்னூட்டமிட்டவர்கள் பாகம்-2 போட வேண்டும் என்றும் இன்னும் விட்டுப்போன பாடல்களை சேர்க்க வேண்டும் என்று அன்பு வேண்டுகோள் இட்டார்கள். அதன்படியே இப்பதிவு.

சில எண்ணங்கள்:
  1.  80 % பாடல்களில் வயலின் இசை முடிந்ததும் அடுத்து  புல்லாங்குழல் இசைக்கப்படுகிறது.
  2. உக்கிரவயலின்(serious) இசைக்கோர்ப்புகள் குறைவுதான்.நிறைய ரொமாண்டிக்தான். காரணம் டூயட்டுகள்
  3. Multimelodying/rhythming சரளமாக வருவதால் துரிதகதியில் பல கருவிகளின் நாதங்களைத் தொடுக்கிறார்
  4. Soulfulஆக இருப்பதால் சில (பல)சமயங்களில் இந்த இசை நாதங்கள் நதிபோல் சலசலத்தபடி நினைவில் ஒடத்தான் செய்கிறது
  5. பல வித கலவைகளில் இசைக்கொடுப்பதால் 90% சாயல் இல்லாமல் இருக்கிறது
  6. சில இசைக்கோப்புகள் divine touchஆக இருக்கிறது.இவர் நோட்ஸ் எழுதிப் போட்டார் போல் தெரியவில்லை.
ராஜரிஷி(1985) - மான் கண்டேன் மான் கண்டேன்
மன்னர்கால டூயட்.கிளாசிகலான இசை.வசந்தா ராக சாயல்(?)
Violin-2-MaanKanden.mp3

கேளடி கண்மணி(1990) - நீ பாதி நான் பாதி
Violin-2-Neepaathi.mp3
 
தீபம்(1977)-பேசாதே வாயுள்ள
சீரியஸ்ஸான வயலின்.எம்எஸ்வி சாயல்.சிவாஜி கணேசன் “ஆக்டிங்”க்கு ஏற்ற பாடல்.
Violin-2-Deepam-Pesathe.mp3


புதுப்பட்டிபொன்னுத்தாயி(1994)-ஊரடங்கும் சாமத்துல
இதில் Cello(மேல் படம்) அல்லது Double Bass(கிழே பார்க்க) வாசிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.முன்னணியில் புல்லாங்குழல்.
Violin-2-Ooradangum.mp3

கடல்மீன்கள்(1981)-என்றென்றும் ஆனந்தமே
டிஸ்கோ பாட்டிற்கு வித்தியாசமாக வயலின்.அருமை.
Violin-2-Endrendrum Aanandhame.mp3 

வைதேகி காத்திருந்தாள்-(1984)-ராசாத்தி உன்ன
மிக உணர்ச்சிகரமான வயலின்.ஆழ்ந்துகேட்டால் வலியை உணரலாம்.soulstirring bit(0.25-0.32).இதிலும் Double Bass வாசிக்கப்படுகிறது?
Violin-2-Rasathionna.mp3

சிங்காரவேலன்(1992)-தூது செல்வதாரடி..
Violin-2-ThoodSelva.mp3

தளபதி(1991) - ராக்கம்மா கையத்தட்டு 
(ராஜாவின் மாஸ்டர் பீஸ்)
Violin-2-Rakkamma.mp3

பைரவி(1978)-நண்டுருது நரியூருது
Violin-2-Bhairavi-Nadoruthu.mp3

சகலகலாவல்லவன்(1982)-நிலா காயுது
ஒரு ஒவியமாக வயலினைத் தீற்றுகிறார்.Romantizied to the core.
கேட்டுக்கொண்டே மொட்டை மாடியில் நிலா காய்வதைப் பார்க்கலாம்.Finishing touch அருமை.0.17-0.23 இடையில் தென்றல் வீசும்.
Violin-2-Nilakayuthu.mp3

கடலோரக்கவிதைகள்(1986)-அடி ஆத்தாடி
0.10 வரை ஒரு வெஸ்டர்ன்கிளாசிகல் உணர்வு.அதற்குமேல்  லோக்கல் உணர்ச்சி.
Violin-2-Kadalora Kavithaigal-Adiaathadi.mp3

தந்துவிட்டேன் என்னை(1991)-மன்னவனே மன்னவனே
Violin-2-Mannavane.mp3

 நீண்ட வயலின் நாதம்
 ஆனந்தகும்மி(1983) -தாமரைக்கொடி தரையில்
0.14 ஆரம்பித்து தொடர்ந்து கடைசிவரை  தம் பிடித்தப்படி வயலின் இனிமையாக ஓடிக்கொண்டே இருக்கிறது.அட்டகாசம்.
Violin-2-Thamaraikodi.mp3

சின்ன  வயலின் நாதம்
தங்கமகன்(1983)-ராத்திரியில் பூத்திருக்கும்
சின்ன சின்ன  உரசல்களில்(சீவல்களில்) இனிமை.வித்தியாசம்.ஹம்மிங்கை துரத்தும் வயலின்(?) அருமை. ஆனால் ஹம்மிங்கை முழுமையாக துரத்தவில்லை.

Violin-2-Ratheriyil.mp3

வருஷம்16(1989)-பூ பூக்கும் மாசம்
Violin-2-PooPookkum.mp3

தம்பி பொண்டாட்டி(1992) -என் எண்ணம் போகும்
(எனக்கு மிகவும் பிடித்த ஒன்று) Flute and Violin in a romantic chat.

Violin-2-ThambiUnennam.mp3

காற்றினிலே வரும் கீதம்(1978)-கண்டேன் எங்கும்
(0.12-0.17 துரிதகதியில் நாதம் மாறுகிறது 
Violin-2-KandenEngum.mp3

காதல் ஓவியம்(1982)-சங்கீத ஜாதிமுல்லை

Violin-2-SangeethaJathi.mp3

விக்ரம்(1986) வனிதாமணி(இரண்டுஆடியோ)
Violin-2-VanithaMani.mp3

Violin-2-2-Vanithamani.mp3

நான் மகான் அல்ல(1985)-மாலை சூடும் வேளை
வளமான கற்பனை வயலின்.மயில் கேட்டால் தோகை விரித்து ஆடுமோ?இங்கும் Double Bass வாசிக்கப்படுகிறது என்று நினைக்கிறேன்.
Violin-2-MalaiSood.mp3

நான் பாடும் பாடல்(1984)-பாடும் வானம்பாடி
Violin-2-PaadumVaanam.mp3


ஆயிரம் நிலவே வா(1983)-அந்தரங்கம் யாவுமே
Violin-2-AandharyAvumE.mp3

புதுமைப்பெண்(1984)-இது ஒரு காதல் மயக்கம்
Violin-2-Kathalmayakkam.mp3

காயத்ரி(1977) -காலைப்பனியில்
Violin-2-Kalaipaniyin.mp3


கோபுரவாசலிலே(1991)-காதல் கவிதைகள்
Amazing violin arrangement. 0.33-0.34ல் ஒரு புல்லாங்குழல் மின்னல் கீற்றாக தோன்றி மறைகிறது.அற்புதம்.

Violin-2-Kathalkavithai.mp3





பட்டாகத்தி பைரவன்(1979)-எங்கெங்கோ செல்லும்
மேலுள்ள Double Bassதான் லீடில்(0.01-0.10) வாசிக்கப்படுகிறது.
பின்னணியில் வயலின்.தொர அண்ணே..! Double Bass புல்லா பாக்க முடியுதா?புதுப்பட்டி பொன்னுத்தாயி நீங்கதான் வாசிச்சீங்களா?
Violin-2-Engekengosell.mp3


கடைசியாக....


Violin-2-RajaParvaiViolin.mp3

.

Tuesday, January 4, 2011

ஜோஷ்யம் பாக்கலயோ..! அடக் கடவுளே...!

வழக்கமான சாதாரண தின, வார, மாதப் பலன்களைக் கடந்து இந்தப் புத்தாண்டு  பலன்கள்  எல்லா ஊடகங்களிலும் தனித்தன்மையாக வந்து விடுகிறது.மேலை நாடுகள் போல் பலித்தவர்களின் ரிக்கார்டுகளை ஒன்று கூட்டி ஆய்வு செய்து முடிவுக்கு வரவேண்டும்.

அதுவும் பக்தி ஊடகங்களில் நிறைய
விளம்பரங்கள்.ராசிக்கல்,பெயர் பலன்,கைரேகை, பெருவிரல் ரேகைப்பலன்,நாடி,ஜாதகம்,வசியம்,எண்ஜோதிடம்,பரிகாரம்,ஹோமம்,கிளி ஜோஸ்யம் பக்தியும் ஜோஸ்யமும் இணைந்துதான் இருக்கிறது.இவர்களுக்கு கூட்டமும் வருகிறது.

சில பேர் ”கன்னத்தில் அறைகிறார்” போல் பிட்டு பிட்டு வைப்பேன் என்று விளம்பரம் கொடுக்கிறார்கள்.பயமாக இருக்கிறது. இன்னொரு கன்னத்தையும் காட்டவேண்டுமே.

இவர்களில் நிறைய போலிகள்.மிகக் குறைவான அசல்கள்.பார்த்தாலே சொல்லிவிடலாம்.

ஒரு பிரபலமான தொலைக்காட்சி ஒன்றில் (இரவு 12.30) பெயர் ராசி பற்றிய பிரிவில் ஒரு பிரபலத்தைப் பற்றிச் சொல்லி அவர் ஏன் பிரபலமானர் என்று கரும்பலகை வைத்து எழுதி ஒரு மணி நேரம் பேசினார்.

ங்கொய்யால  தாங்கமுடியல..!சாதாரண பொது அறிவு  இருந்தால்போதும் அவர் ஏன் பிரபலமானர் என்று (கன்னத்தில் அறைகிறார் போல்?)பிட்டு பிட்டு வைக்கலாம்.

மக்களின் சைக்காலஜிதான்  இந்த ஊடங்களின் மூலதனம்.

மக்களுக்கும் தெரியும் இதெல்லாம் இன்ச் பை இன்ச் அளந்துப் பார்த்து பலிக்கும் என்று நம்புவது அசட்டுத்தனம் என்று ஒரு பக்கம் ஆனால் என்னாதான் பலன் என்று பார்த்துவிடுவது என்று ஆர்வம் மற்றொரு பக்கம்.நடந்தாலும் நடக்கலாமே என்று எண்ணிவிட்டு அடுத்த செகண்ட் எல்லாம் கடவுள் பாத்துப்பாரு என்று சமாதானமும் படுத்திக்கொள்ளும்.

எனக்கு இதில் நம்பிக்கை இல்லை.இது ஒரு கணக்கு,விஞ்ஞானம்,கவுண்டர் பாயிண்ட்,
அது, இது, எது என்று எப்படிச் சொன்னாலும் நான் நம்புவதில்லை.நம்புகிறவர்கள் என்னைப் பற்றி கவலைப்படப் போவதில்லை.அவர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது.

அடக் கடவுளே...!

சாஸ்தோத்திரமான அய்யர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் கடவுள் பக்தி ரொம்ப ரொம்ப ரொம்ப கம்மிதான்.கடவுள் பக்தி உண்டு. நேரடியான கடவுள் தொடர்புதான். இடைத்தரகர்கள்   கிடையாது.சத்தியமாக Split A/C சாமியார்களும்  பின்நவீனத்துவ காஸ்ட்யூம் கார்பரேட் சாமியார்கள் கிடையாது.

சாஸ்திரம் சம்பிராதயம் என்று ரொம்ப போய் அப்பிக்கொள்வதில்லை.ஏதோ ஒரு தலைமுறையில் ஒரு பெரிசு ”சிம்பிள் பக்தி” கான்செப்டை ஜீனில் கலந்து விட்டிருக்கிறது.சின்ன வயதில் சபரிமலைக்கு போக ஆசைப்பட்டு தயாராக “போய் முதல்ல படி” என்று ஒரு பெரிய தாத்தா விரட்டி விட்டார்.

இதைச் சித்தர் வாக்காக பின்னாளில் புரிந்துகொண்டேன்.

பல வருடங்களுக்கு (நான் சிறுவன்) முன் சென்னையில் ஏதோ ஒரு மறைவான  இடத்தில் ஒரு யோகி இருப்பதாக  கேள்விப்பட்டு போனோம்.பொட்டல் காடு. பயமாக இருந்தது.

பெரியவர்கள்(என் வீட்டார் யாரும் இல்லை) நான்கு நான் மற்றும் மூன்று சிறுவர்கள் நான்கு பேர். அவரைக் கண்டுபிடித்தோம்.

பார்த்தவுடன் கோபம் கொண்டு “கிட்ட வராதே. கிட்ட வராதே...போ போ”  என்று விரட்டிவிட்டார் அந்த ஒல்லியான தாடி யோகி.ஓடிவிட்டோம். அவர் வாயால் விரட்டியதே பெரிய பாக்கியமாக நினைத்து பெரிசுகள் முக்தி அடைந்தன.

பல வருடங்களுக்குப் பிறகு புரிந்தது ஏன் விரட்டினார் என்று.

அடுத்து வந்த தலைமுறைகளும் “நம் பிரச்சனைக்களுக்கு நாம்தான் தீர்வு சொல்லவேண்டும்” என்று கண்டுபிடித்து ஜோஸ்ய/ பக்தி ஏஜெண்டுகளிடம் போவதில்லை.நேரடி ஆன்மீகம்தான். மனசுக்கும்  ரொம்ப திருப்தியாக இருக்கிறது. வரவு இல்லாவிட்டாலும் இழப்புக்கள் ரொம்ப ரொம்ப கம்மி.
செலவும் கம்மி.

அடுத்து அடுத்தவனுக்கு தொந்திரவு இல்லாத பக்தி ரொம்ப உயர்வானது.


வேலைக்கு ஏதும் போகாமல் தொலைக்காட்சியில் ”சாமி”
பிசினஸ் SSN(சாமி ஷாப்பிங்க் நெட்வொர்க்) செய்யும் போலிச்சாமியார்களைக் கண்டால் கடுப்பாக இருக்கிறது.கடவுள் இருப்பது நமக்கு இல்லாவிட்டாலும் இவர்களுக்கு ரொம்ப வசதியாக இருக்கிறது.

உழைக்காமல் சாமி எதுவும் தொப்பென்று போடாது.கடவுளுடன் நேரடித் தொடர்பு உழைப்பதற்கு மனோதிடம் கொடுக்கும்.

.

Monday, January 3, 2011

காலண்டர் கவிதைகள்

வடக்கே சூலம்
பழைய காலண்டர்
விட்டுச்சென்ற
வெற்றுச் செவ்வகத்தில்
புதுக் காலண்டர் பொருந்தாமல்
வடக்கேயும் தெற்கேயும்
சூலங்கள் துருத்திக்கொண்டு
எட்டிப்பார்க்கிறது

பூட்டிய வீட்டில் காதல்
பூட்டிய வாசல்கதவைத்
திறக்கும்போதெல்லாம்
காலண்டரும் சுவர் கடியாரமும்
பேச்சை நிறுத்தி
மெளனமாகின்றன
காதலன் யார் காதலி யார்
என்று புரியாமல்
ஒவ்வொரு நாளும்
யோசித்தப்படி நானும் மெளனமாகிறேன்

பால்கணக்கு
டைரியைப் போல்
ரகசியம் ஏதும் இல்லை
காலண்டர்களுக்கு






365 நாட்களும் கடந்து போகும்
முன்னூற்று அறுபத்தைந்து நாட்கள்
அலுப்பாக இருக்கிறது
காலண்டர்களுக்கு

பிரம்மானந்தம்
மின்விசிறி காற்றில்
தோகை விரித்து
ஆடிக்கொண்டிருக்கிறது
காலண்டர்

.

Sunday, January 2, 2011

தமிழ்மணத்தில் சஸ்பென்ஸான இடம்...!

என் இடத்தைப்பார்க்க,Control "F" போட,அதற்கான வசதி இல்லாததால் ஒரு துப்பறியும் நாவல் சஸ்பென்ஸ் போல் பக்கம் பக்கமாக 11ம் பக்கம்போக,அது கடைசி பக்கத்திற்கு முன் பக்கம், அங்கே....


இதில் பதிவர்களின் இணையான இடங்களும் இருக்கிறது.
இரண்டு பேர் 10/13 இடங்களில் இருக்கிறார்கள்.எப்படி tie break வருகிறது?

எல்லோருக்கும் நன்றி. ரொம்ப சந்தோஷமான விஷயம் எனக்கு இந்த வருடத்தில் நிறைய one time பின்னூட்டவாதிகள்.இது சம்பந்தமாக ஒரு விஷயம் நினைவில் வருகிறது.

நான் ஒரு பன்னாட்டு நிறுவனத்தை விட்டுவிட்டு சில காலம் ஒரு பன்னாட்டுகாப்பீட்டு குழுமத்தில் வேலை செய்தேன்(இப்போது அதில் இல்லை).முதலில் வழக்கம்போல் சொந்தக்காரர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிந்தவர்களுக்கும் பாலிசியின் நிறைகுறைகளை சொல்லி விற்றேன். வாங்கினார்கள். ( for my sake.. please take one policy..! என்று என்றும் விற்றதில்லை).

ஆனால்   எனக்கு  சாதித்தாக மனம் உணரவில்லை.முதன் முதலில் ஒரு நாள் ஒரு பெரிய வணிகவளாகத்தில்  முகம் தெரியாத ஒருவரை  அவசரமாக அணுகி அவரிடம்  15 நிமிடம் பேசினேன்." I am convinced Ravishankar,.. meet  me tomorrow @ 10.30 a.m.I will be ready with a cheque" என்றார்.புல்லரித்தது.

அதே மாதிரி ஒரு இதயபூர்வமான பின்னூட்ட சாம்பிள்:


அது சரிங்க.. அப்ப எதுக்கு இது?for my sake take one policyஆ?

இதுக்குத்தான்....

உஷா சங்கர் என்பவர் (பல சமூகதளங்களில் உறுப்பினர்.பல வித இசை ரசிகை) போட்ட பின்னூட்டம். என்னுடைய  விழுந்த கண்ணாடியில் டீச்சரின் தூரப் பார்வை பதிவு ஒன்றைப் படித்துவிட்டு பின்னூட்ட முடியாமல் ஆறு மாதம் கழித்து பேஸ்புக்கில் அறிமுகமாகி பின்னால் பிரச்சனை தீர்ந்து பின்னூட்டம் இட்டார்.



அதே மாதிரி என் முதல் இளையராஜா பதிவு படித்துவிட்டு  பர்ஸ்டு பாலோவராக பச்சக் என்று  ப்ளாக்கில் முதலில்  ஒட்டிக்கொண்டார்  இவர்:



இந்த வருடம் vision/mission statement ஆக 44 படிகள் ஏறி 50 இடத்திற்கு வர முயற்சிக்க வேண்டும்.


இனிய  2011 புத்தாண்டு வாழ்த்துக்கள்!

.

Saturday, January 1, 2011

செருப்பு... ஒரு கணக்கு..-கவிதை

 செருப்பு

உரிமையாளர்கள் உள்ளே
போய் இருக்கிறார்கள்

நடந்து வந்த களைப்பில்
கோணல்மானலாக உருண்டு
தூங்குகிறோம்

யாரோ ஒருவர் காலால்
எட்டி உதைத்து எங்களை
ஒரு பக்கம் தள்ளுகிறார்
நாங்கள் தடுமாறி
பாதி தூக்கம் கலைய
அடுத்த பயணத்திற்கு தயாராகிறோம்

ஒரு கணக்கு

ஆவின்பால் லாண்டரி
தள்ளிப்போன நாள்
கழிக்க வேண்டியது
கேஸ் புக்கிங்
பப்பிள் டாப் டெலிவரி
கணக்கு வழக்குகள் முடிக்க
காலண்டருக்கு
ஒரு மாதம் கூடுதலாக
ஆயுள் கிடைத்துவிடுகிறது


.